Shadow

நம் நாயகம் – ஒரு முன்மாதிரி புத்தகம்

நம் நாயகம்

அறுபத்து மூன்று வயது வரை வாழ்ந்த நபிகள் நாயகத்தின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை 63 அத்தியாயங்களாகத் தொகுத்து, சிறுவர்களுக்கான “நம் நாயகம்” எனும் நூலை எழுதியுள்ளார் ஜெஸிலா பானு. தனது புத்தகத்தைப் பற்றி அவர் குறிப்பிடுகையில், ‘இந்தப் புத்தகத்தைப் படிச்சா ஒரு மனிதன் வாழ்க்கையில் எப்படி வாழணும்னு தெளிவு கிடைக்கும்’ என்கிறார்.

இப்படியொரு மதம் சார்ந்த நீதி போதனைப் புத்தகம் எப்படி முன்மாதிரி ஆகும்?

பயன்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பமும், யுக்தியும், எளிமையான மொழி நடையுமே அதற்குக் காரணம்.

Nam Naayagamபுத்தகத்தில் என்ன தொழில்நுட்பத்தை உபயோகிக்க முடியுமெனப் புத்தகத்தைக் கையிலெடுத்துப் புரட்டிராதவர்கள் நினைக்கக்கூடும். அதைப் பற்றி, இப்புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் பேசிய பத்திரிகையாளர் திரு. மாலன், “புத்தக வடிவமைப்பு என்பது ஒரு தொழில்நுட்பம் சார்ந்த விஷயம். புத்தகத்தை டைப்செட் பண்ணி, பக்கம் பக்கமா அச்சடிச்சு, பைண்ட் செய்து விட்டால் அது தான் புத்தகம்னு நாம நினைச்சுட்டிருக்கோம். ஆனால், இந்தப் புத்தகத்தில், வடிவமைப்பு என்பது மிகச் சிறந்த வகையில், ஃப்ரொஃபஷ்னல் ஸ்டேண்டர்டில் செய்யப்பட்டிருக்கு. அதாவது, படங்களை எங்கே வைப்பது, எந்த மாதிரியான படங்களை வைப்பது, என்னளவில் வைப்பது, என்ன வண்ணத்தில் வைப்பதென அனைத்தும் மிக நுட்பமாகத் திட்டமிடப்பட்டு அற்புதமாக புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளது” எனச் சிலாகித்தார். அந்தச் சிலாகிப்பில் சற்றும் மிகையில்லை என்பது புத்தகத்தை ஒருமுறை பார்த்தாலே புரியும். வண்ணத் தாள்களில், கண்களை உறுத்தாத நிறத்தில் வரையப்பட்ட அழகிய ஓவியங்களால் நிறைந்துள்ளது புத்தகம்.

ஒட்டகம்240 பக்கங்கள் கொண்ட பெரிய புத்தகம் எப்படி சிறுவர்கள் புத்தகமாகும்? அதாவது வறட்சியான நீதி போதனைகள் நிரம்பிய ஒன்று, பெரியவர்களுக்கே படிக்கச் சிரமமாக இருக்குமே! நியாயமாக இப்புத்தகம், சிறுவர்கள் மீதான வன்முறையில்தான் சேர்ந்திருக்க வேண்டும். அங்கு தான் ஜெஸிலா பானுவின் சாமர்த்தியமான யுக்தி தோள் கொடுக்கிறது. குட்டிக் குட்டிக் கதைகள், அதற்கான தோதான படங்களெனப் பார்த்துப் பார்த்து, ‘பெட் டைம் ஸ்டோரி’ போல் புத்தகத்தை உருவாக்கியுள்ளார். அணிந்துரையில் சொல்லப்பட்டிருப்பது போல், இது நீதி போதனைப் புத்தகமன்று. சின்னஞ்சிறு கதைகளின் வண்ணமயமான தொகுப்பு மட்டுமே!

எட்டு வார்த்தைகளுக்குள் வாக்கியம் அமைக்கப்படுவதை, சிறுவர் புத்தகத்திற்கான அடிப்படை விதியாகச் சொல்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். சிற்சில நீண்ட வசனங்களைத் தவிர, புத்தகத்தின் பெரும்பாலான வாக்கியங்கள் இந்த விதிக்குப் பொருந்துகிறது. அதே போல், தொடர்ந்து சிறுவர் நூல்களில் கவனம் செலுத்தி வரும் எழுத்தாளர் விழியன், ‘பேச்சு மொழியில் புத்தகம் எழுதப்படுவதையே குழந்தைகள் விரும்புவார்கள்’ என்கிறார். அதை ஜெஸிலா பானு தனது என்னுரையிலேயே, ‘அன்பான குழந்தைகளே!!’ எனத் தொடங்கி விடுகிறார். புத்தகம் முழுவதும் பேச்சு மொழியில் நேரடியாக அவரே கதை சொல்கிறார்.

Kids

குழந்தைகளைக் கொஞ்சணும், எல்லா உயிர்களையும் நேசிக்கணும், பெற்றோரை மதிக்கணும், மனைவியிடம் நட்பாக இருக்கணும், தானம் செய்யணும், கோபப்படக்கூடாது, இறை நம்பிக்கை, பிரார்த்தனையின் அவசியம், இறை அச்சமென ஒவ்வொன்றைப் பற்றியும் கதைகளின் மூலம் அழகாக வலியுறுத்துகிறார் ஜெஸிலா பானு.

புத்தகத்தின் நாயகன் நாயகத்தை அவங்க இவங்க என விளிப்பவர், அல்லாஹ்வை அவன் இவனென மிகுந்த உரிமையோடு அழைக்கிறார். அந்த நெருக்கம் உவப்பை அளித்தாலும், குழந்தைகள் மனதில் ஒளி வடிவான கடவுளானவர் ஆணாகத்தான் இருப்பார் என்பது தேவைக்கு அதிகமாகவே விதைக்கப்படுவதுதான் நெருடுகிறது.

குஷ்வந்த் சிங், தன் முஸ்லிம் தோழி ஒருவருடனான அறிமுகம் பற்றிக் குறிப்பிடுகையில், “அவருடன் பழகிய பின் தான், இந்திய முஸ்லிம்கள் மிகவும் அன்பானவர்கள் என்பதே புரிந்தது. சீக்கியக் குடும்பங்களும் இந்துக் குடும்பங்களும் நம்புவது போல, அவர்களால் யாருக்கும் எந்தத் தீங்கும் நேரிடாது என்பதை உணர்ந்தேன்” என எழுதியிருப்பார். அவர் தன் அனுபவம் மூலம் கண்டடைந்த உண்மையைப் பலரும் தவறான கற்பிதங்களால் கடைசி வரை அடையாமலே போகலாம். அத்தகைய போலியான கற்பிதங்களை இச்சமூகம் குழந்தைகள் மனதில் பதிக்கும் முன், இந்தப் புத்தகத்தைக் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டியது அவசியம்.

Jazeela Banuஇப்புத்தகத்தை ‘சிறார்களுக்கான சீறா’ என கவிக்கோ அப்துல் ரகுமான் புகழ்ந்தாலும், இது முஸ்லிம் குழந்தைகளுக்கான நூலென தன் அணிந்துரையில் சுருக்கி விடுகிறார். ஜெஸிலா பானுவோ, “இது அனைவருக்குமான நூல். கிருஷ்ணன் போல், ராமன் போல், ஜீசஸ் போல் நாயகமும் ஒரு ஹீரோ. நாயகம் வாழ்க்கையில் என்ன நடந்தது, அவர் கடந்து வந்த பாதைகள் பற்றி அனைவரும் அறிந்து கொள்ளவேண்டும் என்பதே என் விருப்பம்” என்றார்.

Islamஇந்தப் புத்தகம் இன்னொரு வகையிலும் முன்மாதிரியாகத் திகழ்கிறது. ‘இஸ்லாம் பற்றிப் பேசுபவர்கள் எல்லாம் கடுமையான முகத்தை வைத்துக் கொண்டே பேசுகிறார்கள். எழுதுபவர்களும் கடினமான மொழியிலேயே எழுதுகிறார்கள். கேட்கணும், படிக்கணும்னு நினைக்கிற நாலு பேரும் ஓடிவிடுவார்கள்’ என்று கிண்டலுடன் விமர்சிப்பார் பேராசிரியர் பர்வீன் சுல்தானா. இந்தப் புத்தகம் அத்தகைய கிண்டல்களுக்கு ஆளாகாது என்பதோடு, இஸ்லாம் குறித்தும், நபிகள் நாயகம் குறித்தும் ஒரு புரிதலை மிக எளிமையான கதைகளால் உருவாக்கி விடுகிறது.

புத்தகம் கிடைக்குமிடம் இடம்: கலாம் பதிப்பகம்

– தினேஷ் ராம்