Shadow

நவீன சரஸ்வதி சபதம் விமர்சனம்

NSS

‘மெஸ்சேஜ்’ சொல்லும் படம் வந்து நாளாகிவிட்டது என்ற குறையை மட்டும் தீர்த்துள்ளது படம்.

கார்ப்பரேட் கைலாசத்திலிருந்து படம் தொடங்குகிறது. சிவன் திருவிளையாடல் நிகழ்த்த நால்வரை பூமியிலிருந்து தேர்ந்தெடுக்கிறார். சிவன் வைக்கும் சோதனையில் அந்த நால்வரும் தப்புகின்றனரா என்பது தான் படத்தின் கதை.

படத்தில் சேலம் சித்தராஜ் வைத்தியசாலையை சகட்டுமேனிக்குக் கலாய்த்துள்ளனர். கோவை காமராஜ் வைத்தியசாலை எனப் பெயர் மாற்றி சித்ரா லக்ஷ்மணனை நடிக்க வைத்துள்ளனர். அவரது வாரிசாக ஜெய். சிவன் தேர்ந்தெடுக்கும் நால்வரில் ஒருவர். இரண்டாம் நபர் ஊழல் அரசியல்வாதி மகனாக வரும் சத்யன். மூன்றாம் நபர் சொர்ணாக்காவின் கணவராக வரும் வி.டி.வி. கணேஷ். நான்காம் நபர் பவர் ஸ்டாரின் வளர்ச்சி கண்டு வயிறெரியும் ராஜ்குமார். ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தில் இவர் பஜ்ஜியாக நடித்திருப்பார். நால்வரும் தண்ணியில் இருந்து தண்ணீரில் மிதக்க பாங்காக் செல்கின்றனர். 

அங்கே, சிவன் நால்வரையும் ஆளரவமற்ற தீவில் தவிக்க விடுகிறார். அவர்கள் கதி என்னானது, எப்படி அங்கிருந்து தப்பிக்கின்றனர் என்பதை கொஞ்சமும் சுவாரசியம் இல்லாமல் சொல்லியுள்ளனர். நாரதராக மனோபாலா, சிவனாக பஞ்சு சுப்பு, பார்வதியாக தேவதர்ஷினி நடித்துள்ளனர். கைலாசத்தில் அனைவரும் ஆப்பிள் கணினியும், ஃபோன்களும் பயன்படுத்துகின்றனர் என்பதால் இப்படம் ‘நவீன சரஸ்வதி சபதம்’ போலும். 

ஜெயஸ்ரீயாக நிவேதா தாமஸ். முதற்பாதியில் கதாபாத்திரங்களின் அறிமுகத்தினூடே வரும் காதல் கதையில் சில நிமிடங்கள் வந்து ஈர்க்கிறார். விநாயகப்பெருமான் தொப்பையைக் குறைக்க உடற்பயிற்சி செய்வது, வி.டி.வி.கணேஷ் ஃபீடிங் பாட்டிலில் தண்ணி அடிப்பது, சிவன் பரதம் சொல்லித் தரும்போது விநாயகர் கங்னம் ஸ்டைல் நடனமாடுவது என படத்தில் சிற்சில சுவாரசியங்கள் இருந்தாலும் ஒட்டுமொத்த படத்தில் அது இல்லை. படத்தின் முடிவில் வேறு சிவன் அட்வைஸ் மழை பொழிகிறார். ஏனோ ரத்த தானத்தின் அவசியத்தையும், குடிப்பழக்கத்தின் தீமையையும் கதையின் போக்கில் அழுத்தமாகப் பதிந்த ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா…’ ஞாபகம் வருகிறது. 

Leave a Reply