Search

‘நானும் பிசாசு.. அவனும் பிசாசு..’ – மிஷ்கின் பற்றி பாலா

“என்னுடைய பாலா.

Mysskin Pisasuஒரு கலைஞன் கஷ்டத்தில் இருக்கும்போது கை கொடுத்துத் தூக்கிவிட்டார் பாலா. நான் என்னை கலைஞனென தைரியமாகச் சொல்வேன். ஏன்னா உழைப்பைக் கொட்டுறேன். ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ பார்த்துட்டு, அழுதுட்டே வெளில வந்தார் பாலா. என் ஆஃபீஸ் வரை காரை ஓட்டுடான்னு சொன்னார். அடுத்து என்னப் பண்ணப் போறேன்னு கேட்டார். நாளைக்கு வா படம் ஆரம்பிக்கலாம் என்றார்.

பிசாசு, டாம்பீகமற்ற எளிமையான படம். ஒரு பெண் இறந்து பிசாசாகி விடுகிறாள். கதை எழுதும்போது, நான் பேரலலாக (parallel) தமிழ்ப் படம், ஆங்கிலப் படம், உலகப் படம், ஹாரர் ஸ்டோரீஸ், கோஸ்ட் (ghost) கதை எழுத தனியாக ஸ்க்ரீன்-ப்ளே புக்ஸ் படிச்சேன். அதிலிருந்து ellam விலகி, நான் ஸ்க்ரிப்ட் எழிதியிருக்கேன். தமிழ் சார்ந்து, உறவு சார்ந்து இருக்கும்” என்றார் மிஷ்கின்.

“மிஷ்கின் சார் என் குரு. பாலா சார் தயாரிப்பில் அறிமுகமாவது ரொம்ப பெருமையாக இருக்கு” என்றார் அறிமுக நாயகி பிரயாகா. “நூறு பெண்களில் இருந்து கிடைச்சது பிரயாகா. படத்தில் பிசாசாகத்தான் வரும். முகம் வராது. என் மகள் போல! படத்துக்காக ரொம்ப கஷ்டப்பட்டிருக்காங்க. 60 – 70 அடி உயரத்திலிருந்து ரோப் கட்டி ஷாட்ஸ் எடுக்கிறப்பலாம், பிரயாகாக்கு பயங்கரmaa அடிப்படும். அவங்க அப்பாம்மா அழுவதை நான் பார்த்திருக்கேன்” என்றார் நாயகியைப் பற்றி மிஷ்கின். அதே போல் அறிமுக நாயகனான நாகாவையும் தன் மகன் என்றே குறிப்பிட்டவர், “பாவம் கடைசி 6 மாதம் என்கிட்ட ரொம்பவே திட்டு வாங்கிட்டான்” என்றார் மிஷ்கின். “என்னைத் திட்டித் திட்டி, தட்டித் தட்டி வேலை வாங்கியிருக்கார் மிஷ்கின். இனி எதிர்காலத்தில் நான் எந்தச் செயல் செய்தாலும் அவருக்கு கெளரவம் தேடித் தரும்வண்ணம் செயல்படுவேன்” என்றார் நாகா.

Naga Prayaga

“முன்பே திரைப்படங்களுக்கு பாடல் எழுத என்னை சிலர் கேட்டிருந்தாலும், நான் எழுதினால் பாலா படத்துக்குத்தான் முதலில் எழுத வேண்டும் என மறுத்து வந்தேன். இப்போ அவரது தயாரிப்பில் பாடலாசிரியராக அறிமுகமாகிறேன். என் நண்பரும் அடிப்படையில் கவிஞருமான மிஷ்கினுக்கும், பாடல் வரி உருவாக்கத்தில் சம பங்கு உண்டு” என்றார் பாடலாசிரியாக அறிமுகமாகியுள்ள கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன். “ஒரே நாளில் எழுதிக் கொடுத்துவிட்டார். ப்ச்.. வார்த்தைகள் வாள் வீச்சு போல் வந்திருக்கு. மலைகளில் இருந்து உருளும் கூழாங்கற்களைப்போல வந்திருக்கு” என்றார் மிஷ்கின். பாடல் வரிகள் பிசாசை மனதில் கொண்டு எழுதப்பட்டதா எனக் கேட்கப்பட்டதுக்கு, “பிசாசு என்றால் ஏதோ ஒரு கருப்பான உருவம்னு நான் நினைக்கலை. மனிதர்கள்தான் பிசாசுகள். அவர்களின் மன அழுக்கும் வன்மமும்தான் பிசாசு. கதையோடு வருகின்ற ஒரு சந்தர்ப்பத்துக்கு எழுதச் சொல்லிக் கேட்டார். மெட்டுக்கு பாடல் எழுதத் தெரியாது என்றேன். அவர் அழகாக, நான் எழுதிக் கொடுத்த பாடலில் வார்த்தைகளை மாற்றியமைத்துச் செதுக்கியுள்ளார் ” என்றார் தமிழச்சி.

“மிஷ்கின் சாரோடு பணிபுரிவது அற்புதமான அனுபவமாக இருந்தது. நிறைய கத்துக்க முடிந்தது. ஸ்க்ரிப்ட் தரும்பொழுதே, என்ன லென்ஸ் உபயோகிக்கணும் என்றும் எழுதிக் கொடுத்துட்டார். எந்த ஷாட்க்கு எந்த லென்ஸ் என்று யோசிக்க வேண்டிய அவசியமும் இல்லாமல் போய்விட்டது” என்றார் ஒளிப்பதிவாளர் ரவி ராய். “பாலா, பி.சி.ஸ்ரீராம்தான் ஒளிப்பதிவராக வேணும்னு சொன்னார். அவரிடம் போய் கேட்டேன். பண்ணலாம்டா என்றவர், என் அசிஸ்டெண்ட் ரவி ராய் திறமையானவன் என அவரை அறிமுகப்படுத்தினார். கதை சொன்ன நாளிலிருந்து என் கூடவே பயணிக்கிறார் ரவி ராய்” என்றார் மிஷ்கின்.

Arrol Corelli“நான் இளையராஜா சாரோடு பணிபுரியும்போது மிரண்டிருக்கேன். அதன் பின், அரோல் கொரெலி என்னை மிரட்டிட்டான். நான் அவனுக்கு ரொம்ப நன்றிக்கடன் பட்டிருக்கேன்” என்றார் அறிமுக இசையமைப்பாளர் ஆரோல் குறித்து மிஷ்கின்.

பிசாசு படத்தை நீங்கள் தயாரிக்க என்னக் காரணம்? கதை நல்லாயிருக்கா என்பதற்காகவா அல்லது கஷ்டத்தில் இருக்கும் மிஷ்கினுக்கு உதவணும் என்பதற்காகவா?

“மிஷ்கின் ஏதோ ஒரு கதை சொன்னாலும், உங்களுக்கு அது பிடித்துவிடும். நாவன்மை அதிகம் உள்ளவன் அவன்” என்றார் இயக்குநர் பாலா.

வருடத்திற்கு மூன்று படங்கள் தயாரிப்பதும், ஒரு படம் இயக்குவதும்தான் என் திட்டம் என்றார் பாலா.

படத்திற்கு பிசாசு என்ற தலைப்பை எப்படி ஒத்துக்கிட்டீங்க?

“ஏன்னா நானும் பிசாசு.. அவனும் பிசாசு” என்றார் மிஷ்கினைப் பார்த்து புன்னகைத்தபடி!