Shadow

நான் ராஜாவாகப் போகிறேன் விமர்சனம்

NRP
தன்னை போல் இருக்கும் ராஜாவைத் தேடி, இமாச்சலப் பிரதேசத்தில் இருந்து சென்னை புறப்படுகிறான் ஜீவா. ஜீவா ராஜாவை சந்திக்கிறானா இல்லையா என்பதற்கு பதிலுட்ன் படம் நிறைவேறுகிறது.
நாயகனாக நகுல். சுமார் மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு அவரது படம் மீண்டும் வந்துள்ளது. அவரது முதற்படமான ‘பாய்ஸ்’ வந்து பத்து வருடங்கள் ஆகிறது. எனினும் அவர் கொஞ்சி பேசும் தமிழ் மட்டும் இன்னும் மாறவே இல்லை. இந்தப் படத்தில் கிக்-பாக்சிங் வித்தகராக, திலீப் சுப்பராயனின் ஸ்டன்ட்டில் ரசிக்க வைக்கிறார். ரேனிகுண்டா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நிஷாந்த் நகுலின் நண்பன் வஹாப்பாக நடித்துள்ளார். நன்றாக நடித்திருந்தாலும், அவரது வாயிலும் வசம்பைத் தேய்க்கணும்.
நாயகியாக அவின் மோடி. ரீமா என்ற பாத்திரத்தில் நாயகனுக்கு தோழியாக நடிக்கிறார். திடீரென வில்லியாகி அவதாரம் எடுத்து கிலியை ஏற்படுத்துவார் என பல திரைப்படங்கள் பார்த்த அனுபவத்தைக் கொண்டு யூகித்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. அழுது ஒப்பாரி வைப்பவராகவும் இல்லாமல், நல்ல தோழிக்கு இலக்கணமாய் அந்தக் கதாபாத்திரத்தைப் படைத்து பாலை வார்க்கிறார் இயக்குநர். நாயகன் கூடவே படம் முழுவதும் இருந்தும், எந்த இரும்பு கம்பியாலும் தாக்கப்பட்டு அவர் இறக்கவில்லை என்பது மட்டுமே படத்தின் ஆகச் சிறந்த நல்ல விஷயம்.
நாயகனால் காதலிக்கப்படும் வள்ளியாக சாந்தினி. சமுதாய அக்கறை மிக்கவர். சட்டக் கல்லூரி மாணவி. மரபணு விதைகளை எதிர்த்துப் போராடும் காமராசரான மணிவண்ணனின் போராட்டங்களில் ஈடுபாடுள்ளவர். கட்டட வேலை செய்யும் தொழிலாளத் தம்பதியின் மகள். இத்தகைய சிறப்பு குணங்கள் பெற்றவர் என்று தெரியாமலேயே, இவர் மேல் முதல் பார்வையிலேயே நகுலுக்கு காதல் வந்துவிடுகிறது. 
இரண்டு நகுல்களும் சந்திக்கும் புள்ளியை அழகாகக் காட்டியுள்ளார் இயக்குநர். அதற்காக நகுலின் அம்மாவான சீதா செய்யும் சாகசங்கள் எல்லாம் பல தமிழ்த் திரைப்படங்கள் பார்த்தவர் செய்யும் செயல்பாடுகள் போலுள்ளது. எல்லாம் முடிந்தவுடன் போலீஸ்காரர்கள் வந்தாலும் ரொம்ப நல்ல போலீஸ்களாக உள்ளனர். நாயகனை கிக்-பாக்ஸிங் செய்தே தான் வீழ்த்தணும் என நினைக்கும் சரியான ஆம்பளையாக உள்ளார் வில்லன. அவரே பதிமூன்று மாதங்களுக்கு முன் உணர்ச்சி வசப்பட்டு, கம்பியால் தலையிலும் கத்தியால் வயிற்றிலும் காயப்படுத்துகிறார். பின் தன் தவறுக்காக வருந்தி கிக்-பாக்ஸிங் பயின்று ஒண்டிக்கு ஒண்டி நின்று வெல்லணும் என ஞானோதயம் பெறுகிறார். எரிச்சலைத் தூண்டும் இடங்களில், பாடல்களை சரியாக வைத்துள்ளனர். வன்முறையைத் தீர்வாக முன் மொழியும் இன்னுமொரு படம். நாயகியின் அபயக்குரல் கேட்டதும் தூங்கிக் கொண்டிருந்த நாயகனும் கிக்-பாக்சிங் கலையும் சேர்த்து விழித்துக் கொள்கிறது. நமக்கும் படம் முடிய போகிறதென உற்சாகம் வந்து விடுகிறது. 

Leave a Reply