Shadow

நாலுபேரு நாலுவிதமா பேசுவாங்க விமர்சனம்

Naalu Peru Naalu Vithama Pesuvanga Vimarsanam

நான்கு பேர் நான்கு விதமாகப் பேசுவார்களே என்ற தயக்கத்தாலேயே சிலர் எக்காரியத்தையும் முயற்சி செய்ய மாட்டார்கள். ஆனால், இயக்குநர் L.மாதவனுக்கு அப்படி எந்தத் தயக்கமும் இல்லை என்பது மட்டும் திண்ணம். மிகத் தைரியமாகஒரு ‘குறி’ப்பிட்ட அவஸ்தையைப் படமாக்கியுள்ளார். .

அழுக்கனுக்கு அஞ்சு பணம் செலவு என்பார்கள். அப்படித்தான் செலவினத்தைக் குறைக்க நினைக்கும் சரவணனும், அதனாலேயே ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறான். அதிலிருந்து மீண்டு அவன் விரும்பிய பெண்ணை மணந்து கொள்கிறானா இல்லையா என்பது தான் படத்தின் கதை.

படத்தின் திரைக்கதை, நம்மை 25 ஆண்டுகளுக்கு முன் கொண்டு சென்று விடுகிறது என்றால் அது மிகையில்லை. உலகத்தின் வேகத்தோடு ஓடாமல், அதை எதிர்த்து பழைமை வழுவக் கூடாதென எதிர் நீச்சல் போட மிகச் சிலராலேயே இயலும். எழுதித் தயாரித்து இயக்கியுள்ள L.மாதவன் அத்தகையவரே!

பழைய பாணி படமென்பதால், நாயகன் இந்திரஜித்துக்கும் நாயகி தேவிகா மாதவனுக்கும் கோயிலில் முதல்முறை பார்க்கும் பொழுதே காதல் வந்து விட்டதென நினைக்க வேண்டாம். அங்கே தான் ஒரு ட்விஸ்ட் வைத்துள்ளார் இயக்குநர். ஆம், நிதானமாக இரண்டாம் முறை பார்க்கும் பொழுது தான் சட்டென காதல் மலர்கிறது. இப்படிப் படத்தில் ஏகப்பட்ட சுவாரசியங்கள் (!?).

‘கல்கோனா கண்ணழகி.. கற்கண்டு சொல்லழகி’ என்று யுகபாரதியின் வரிகளில் தொடங்கும் பாடல் துள்ளலாய் உள்ளது. அப்பாடலில், இசையமைப்பாளர் A.K.ரிஷால் சாய், ஒளியமைப்பாளர் D.S.வாசன், கலை இயக்குநர் ராகவாகுமார் ஆகியோர் ஒருவரையொருவர் முந்திக் கொள்ளப் பார்க்கின்றனர். ‘நாலு.. பேரு.. நாலு விதமா.. பேசுவாங்க’ என்று தலைப்பு போடும் பொழுது வரும் ராகமும் குரலும் ஈர்க்கிறது.

‘ஸ்ரீ கிருஷ்ணா டாக்கீஸ்’ எனும் தயாரிப்பு நிறுவன லோகோ வரும் அனிமேஷன் மிக அற்புதமாய் உள்ளது. கிருஷ்ணர் மந்தகாசமாய் நடந்து, தொங்கிக் கொண்டிருக்கும் வெண்ணைக் குடங்களை நோக்கி அசால்ட்டாய் துப்பாக்கியால் சுடுகிறார். சிதறும் வெண்ணெயில் நிறுவனப் பெயர் போடுகின்றனர். வாவ்..

சிங்கமுத்து, லொள்ளு சபா சுவாமிநாதன், சிவசங்கர் மாஸ்டர் என நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்துள்ளார் இயக்குநர். படத்தில் சில அபார நகைச்சுவைக் காட்சிகள் உண்டு. உதாரணத்திற்கு, ஃபோனில் பேசி மட்டுமே காதலிக்கும் பெண்ணை முதல் முறையாக நாயகன் பார்க்கிறார்; அந்தப் பெண் குண்டாக இருக்கிறார் (உருவத்தை கேலி செய்வது காமெடியில்தானே வருது!?); தான் வஞ்சிக்கப்பட்டு விட்டதாகக் கடுப்பாகும் நாயகன் உடனே டாஸ்மாக்கிற்கு ஓடி, ‘நல்ல பொம்பள எவளுமிங்கு இல்லவே இல்ல’ என ஃபீல் செய்து ஒல்லியான பெண்களுடன் சேர்ந்து ஆடுகிறார். 

இப்படியாக முழுப் படமுமே ஒரே அறுச்சுவை தமாஷ்தான்.