Search

நாளை முதல் குடிக்க மாட்டேன் விமர்சனம்

Naalai Muthal Kudikka Matten Vimarsanam

எதை வேண்டுமானாலும் பொறுத்துக் கொள்வார் இங்கிலீஷ் டீச்சர் மலர், ஆனா குடிக்காரர்களை மட்டும் எந்த ஜென்மத்துக்கும் மன்னிக்கவே மாட்டார். தனக்குக் குடிப்பழக்கம் உள்ளதை மறைத்து, மலரைக் காதலித்து மணம் புரிந்து கொள்கிறார் தமிழாசிரியர் அ.சிவக்குமார். பின் என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை.

‘உள்ளொற்றி உள்ளுர்..’ எனத் தொடங்கும் குறளில் இருந்து படம் தொடங்குகிறது. நாயகனின் குணத்தை விளக்க இக்குறளை உபயோகப்படுத்தியுள்ளனர். சின்னஞ்சிறு பட்ஜெட் படம். இயக்குநர் அண்ணன் செந்தில்தல்ராஜாவுக்காக அவரது M.G.ராஜாவே தயாரித்துள்ளார். முடிந்தளவு இழுத்துப் பிடித்துப் படத்தை எடுத்துள்ளது ஆரம்பம் முதலே பட்டவர்த்தணமாய்த் தெரிகிறது. எளிமையில் சுவாரசியத்துக்கு முனைந்துள்ளனர்.

கட்டுக்கோப்பான திரைக்கதை இல்லையெனினும், நாயகனாக நடித்திருக்கும் ராஜ் ஒற்றை ஆளாகப் படத்தைச் சுமக்கிறார். தமிழாசிரியராக நடித்திருக்கும் அவரது முழியும், மைண்ட்-வாய்ஸுமே படத்தின் பலம். குடிப்போதையில் பக்கத்து வீட்டுக்குச் சென்று உதை வாங்கும் காந்தராஜ், படத்தின் கலகலப்புக்கு உதவப் பார்க்கிறார். எனினும் கோர்வையின்மையும், அசுவாரசியமும் அதற்கு உதவவில்லை. படத்தின் நீளத்தை படத்தொகுப்பாளர் ராஜ் கீர்த்தி கட்டுத் தெறித்தாற்போல் நறுக்கி விறுவிறுப்பைக் கூட்டியிருக்கலாம்.

குடி எத்தனை வகைப்படும்?

பன்னிரெண்டு வகைப்படுமென நாயகனுக்கு ஒரு நாட்டு வைத்தியர் விளக்குகிறார். திரையரங்கில் பலத்த கரகோஷம் பெறுகின்றது. உதாரணத்திற்கு, இரண்டு வகையைப் பார்ப்போம். காரணக்குடி – குடிக்கணுமென முடிவு செய்து அதற்குக் காரணத்தைத் தேடிக் கண்டுபிடித்துக் குடிப்பது; கம்பெனி குடி – சாகத் தனியாகப் போனாலும் போவார்களேயன்றி குடிக்கப் போகும்பொழுது தனியாகப் போகாமல் கம்பெனி தேடுவது. ஜாலி, தனி, நாகரீகம், ஒண்டி, ஓசி, காரியம், மோடா என ஒவ்வொரு வகையையும் மிக விரிவாக அலசி வயிற்றைப் பதம் பார்க்கின்றனர்.

சமர்த்தினியும் பனிமதியும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குடிப்பழக்கமுள்ள கணவர்களை நினைத்துக் கவலையுறுபவர்கள். பாதிக்கப்பட்ட எண்ணற்றோரின் குரலாக உள்ளனர் இவ்விருவரும்.

படத்தில் வரும் நாயகியின் ஃப்ளாஷ்-பேக் காட்சியில், குடியின் தீமையை மிக அழகாகச் சித்தரித்துள்ளனர். ஒரு குடும்பத் தலைவனின் குடி வெறியால். அந்தக் குடும்பம் எப்படி சின்னாபின்னமாகிறது என்பதும், அந்த வீட்டுச் சிறுமியின் நிலைமையும் மனதைக் கனக்க வைக்கிறது. அச்சிறுமியைத் தனியாக பொட்டல்வெளியில் நடக்கவிட்டு, ‘முதல் முதல் கேட்ட பாட்டு அம்மாவின் தாலாட்டு’ என்ற பாடலை ஒலிக்க விடுகின்றனர். பாடியவர் பாடலுக்கு உயிரைக் கொடுத்துள்ளார். அதே போல், ‘அடி மேல அடி விழுந்தாஅம்மி அது தாங்கும், இடி மேல் இடி விழுந்தா நெஞ்சம் தாங்குமா?’ என்ற பாடலையும் சொல்லலாம். சிவசுப்பிரமணியனின் பின்னணி இசையை விட பாடல்கள் கவருகிறது. ‘இப்பவே இப்பவே செத்துப் போறேன்டி’ எனும் பாடலை முன்பே கேட்டது போலிருந்தாலும் ரசிக்க முடிகிறது.

குடிப்பழக்கத்திற்கு எதிராக வலுவான குரலை எழுப்பிய ‘திறந்திடு சீசே’ படமளவு இப்படம் குரலெழுப்பவில்லையெனினும், குடியினால் ஏற்படக்கூடிய தீமைகளை விளையாட்டுத்தனமாய்ச் சொல்லியுள்ளது.

உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள்ளொற்றிக் கண்சாய் பவர்