காதலித்து மணம் புரிந்துக் கொண்ட ஒரு தம்பதியின் வாழ்க்கை, சம கால அரசியலால் எப்படிச் சிதைகிறது என்பதே படத்தின் கதை.
சாகச நாயகனாக விஷ்ணு. அவர் உலகத்தைப் படிச்சவர் என்ற நந்திதாதாசின் வசனத்தில் அறிமுகமாகிறார். பாரம்பரிய தமிழ்ப்பட நாயகனுக்குள் மலரும் காதலைப் போல் நாயகியின் தொடுதலில் இருந்தே தொடங்குகிறது. என்ன ‘தன்தனதன்தன..’ என பின்னணி இசை மட்டுமில்லை. காதல் வந்ததும் மெல்ல நாயகன் சாகசக்காரான் ஆகிறான். ஊரில் குடியை ஒழிக்கிறான்; தனி கப்பல் வாங்குவதாக சவால் விடுகிறான்; சாதிக்கிறான்; பின் காணாமல் போகிறான்.
நாயகியாக சுனைனா. இயக்குனரின் முழுத் திறமையும் சுனைனாவை ‘எஸ்தர்’ என்னும் காதாபாத்திரமாக மாற்றியதில் மட்டுமே செலவழித்திருப்பார் போல. நன்றாக நடித்திருக்கும் விஷ்ணுவை விடவும் சுனைனா அதிகமாக ஈர்க்கிறார். ஆனால் படத்தின் பெரும் அதிர்ச்சி சுனைனா வளர்ந்து நந்திதா தாஸ் ஆவது தான். கரையில் நின்று கடலை வெறித்துப் பார்க்க நந்திதா தாஸே தான் வேணுமா என கேள்வி எழுகிறது.
சச்சின் டெண்டுல்கர் கூட ரிட்டையர் ஆகிவிடுவார் போல. ஆனால் பாசக்கார அம்மாவாக நடிப்பதில் இருந்து மட்டும் சரண்யா பொன்வண்ணனிற்கு ஓய்வே கிடைக்காதோ என்னமோ!?
சமகால அரசியலை மையப்படுத்தி கதை(!?) அமைத்துள்ளார் இயக்குனர் சீனு ராமசாமி. தமிழக மீனவர்களை சிங்கள இராணுவம் தொடர்ந்து சுடுவது என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் பிரச்சனை. அதை கருவாக கொண்டு படம் வெளிவர வேண்டுமெனில், கத்தி மேல் நடப்பது போல் திரைக்கதை அமைக்க வேண்டும். இல்லையெனில் ஜனநாயக நாட்டில் அத்தகைய படம் பெட்டியில் தான் முடங்கி கிடக்கும். ஆனால் குழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்பது போல.. அப்பிரச்சனையை ஒரு காதலின் ஊடே பதிய முயற்சி செய்துள்ளார் இயக்குனர். “சுட்டது சிங்கள இராணுவம்; ஆனா கொன்னது நானு” என்ற நந்திதா தாசின் வசனம் தான் படத்தின் கருவே. உடனே “என்னே.. நாயகியின் காதல்!!” என உருகி அவளது காதலை மெய் சிலிர்க்க முடியவில்லை. தமிழில் காதல் படங்களுக்கா பஞ்சம்!?
சிங்கள இராணுவத்தின் அட்டூழியத்தை, நெற்றிப் பொட்டில் அறைந்தாற் போல் பதிய முடியவில்லை எனில் பதியாமலே இருக்கலாம். அரசியல் கட்சிளுக்குப் பிறகு, சமகால பிரச்சனைகளின் மூலம் கல்லா கட்டவே இயக்குனர்கள் முயல்வதாக தோன்றுகிறது. கர்ணன் படத்தில் என்.டி.ஆர், முத்துராமனைப் பார்த்து, “செத்த பாம்பை அடித்து விட்டு நான் கொன்றேன்.. நான் கொன்றேன் என மார் தட்டிக் கொள்கிறாயா!?” என கேட்பார். அதே போல் தான் பாதிக்கப்பட்டவரின் மனைவியும், ‘சிங்கள இராணுவம் சுட்டு என் கனவர் சாகல; நான் தான் கொன்னேன்’ என சாட்சியம் கூறுகிறார். அது மட்டுமா.. சுடப்பட்டு இறந்தவரின் உடலை வைத்துக் கொண்டு மொத்த குடும்பமும், “நான் தான் கொன்றேன்” என ஒப்பாரி வைப்பது உண்மையை நீர்த்துப் போக வைக்கும் காட்சி. பார்வையாளர்கள் மனதை சென்ட்டிமென்ட்டால் கசக்கி பிழிய, மீனவப் பிரச்சனை தானா கிடைத்தது!? படம் நியாயமாக தந்திருக்க வேண்டிய தாக்கத்தை தரவில்லை.
‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தில் தேவையில்லாமல் ஒரு காட்சி கூட இருக்காது. இழுத்துப் பிடித்து குறைந்த செலவில் படத்தை முடிக்க வேண்டிய நிர்பந்தமும், கட்டாயமும் காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் இந்தப் படத்தில் இயக்குனரே தோன்றி தம்பி ராமையாவிற்கு அட்வைஸ் சொல்லும் அளவு விஸ்தாரமாக காட்சிகள் அமைத்துள்ளார். தம்பி ராமையாவிற்கு மாற்றல் கிடைத்தால் என்ன, கிடைக்காவிட்டால் என்ன!? அதே போல் கதாபாத்திரங்கள் அவர்வர்களுக்கு வசதியான வட்டார வழக்கைப் பேசுகின்றனர்.
படத்தின் ஒரே ஆறுதல் சமுத்திரக்கனி. முழுப் படமும் செய்ய வேண்டிய வேலையை அவர் தனது வசனங்களின் மூலம் மட்டுமே செய்கிறார். நெய்தல் திணையை வெகு அழகாக படம் பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியன்.
நீர்ப்பறவை – குவளை பாலில் ஒரு துளி நஞ்சு.