Search

நீ மட்டும்தானழகு

டுளிப்ஸ் மலர்களின்
தோட்டத்திலொருநாள்
நீயும் நானும்
கைகோர்த்து நடந்தோம்
நினைவிருக்கிறதா உனக்கு?

எல்லாமே நிறம் மாறியது
உன் அழகைக்கண்டு
பூக்களெல்லாம் அழகாயிருக்கிறது
எனச் சொன்னாய்
உன்னைவிட எதுவும் அழகில்லை
இவ்வுலகத்தில் என நான் சொன்னேன்
வெட்கத்தில் நீயென் தோளில் சாய்ந்தாய்
நானும் மலரானேன்
உன்கரம் பற்றியதால்.

ஆண்டுகள்தான் கடந்தன
அப்படியே இருக்கிறது அந்த நினைவுகள்
ஒருமுறை உன்விரல்நகம் கீறி
தழும்பாய் என்னுடன் ஒட்டிக்கொண்ட
உன் தீண்டல்போலவே

அன்று பூக்களின் நடுவில்
நீ நின்று எடுத்துக்கொண்ட
புகைப் படத்தினை
இன்று பார்க்கிறேன்
நீ இன்றும் அன்று பார்த்து போலவே இருக்கிறாய்
இப்பொழுதாவது ஒத்துக்கொள்
நான் அடிக்கடி சொல்வது உண்மைதானென
நீயழகு. நீ மட்டும்தானழகு

அந்த பூக்கள்
அன்று நீ சொன்னது போலவே
அழகாய் இருந்திருக்கலாம் உன்னை பார்த்த சந்தோஷத்தில்
நீ வந்தவுடன் ஏக்கத்தில் என்றோ
வாடிப்போய் மடிந்திருக்கும்.

நேற்று நடந்த நம் திருமணத்திற்கு
இன்று நூறாவது
திருமண நாளாம்
வா போவோம்
வேறொரு பூந்தோட்டத்திற்கு
அடுத்த இரு அரை நூற்றாண்டு கழித்து
நான் எடுத்து முத்தமிட
இன்று ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும்.

– சே.ராஜப்ரியன்