Search

நையப்புடை விமர்சனம்

Naiyapudai Tamil Review

வேலுச்சாமி எனும் 70 வயது ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியின் சைலண்ட் சூப்பர் ஹீரோயிசம்தான் படம்.

படம் பாரதியின் ‘புதிய ஆத்திசூடி’ வரிகளோடு தொடங்குகிறது. தலைப்பும், கதையும்கூட அதிலிருந்தே தான் எடுக்கப்பட்டுள்ளது.

‘தேசத்தைக் காத்தல் செய்’தவரான வேலுச்சாமி, ‘தீயோர்க்கு அஞ்சாமல்’, ‘கொடுமையை எதிர்த்து நிற்கிறார்’. இளைய தலைமுறை தொலைக்காட்சி நிகழ்ச்சியின் ‘நேர்ப்படப் பேசு’ நிகழ்ச்சியில் பங்கேற்று, ‘வெடிப்புறப் பேசு’கிறார். மேலும், அச்சத்தினைத் தவிர்த்து, ஆண்மை தவறாமலும் சாவதற்கு அஞ்சாமலும், ரெளத்திரத்தினைப் பழகி, பாதகம் செய்வோர்களை “நையப்புடை” க்கிறார் வேலுச்சாமி.

நாயகன் வேலுச்சாமியாக நடித்ததோடு மட்டுமல்லாமல், கதை திரைக்கதை வசனம் எழுதியிருக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர். படத்தில், “நான் பல கேப்டன்களையும், தளபதிகளையும் உருவாக்கிருக்கேன்” எனச் சொல்லி சிறு இடைவேளைக்குப் பின், “மிலிட்டரில” என்கிறார். அஞ்சான் சூர்யா போல் ஸ்டைலாக வாயில் குச்சியை வைத்துக் கொண்டிருக்கும் சந்திரசேகரின் ஒவ்வொரு அடியும் சும்மா இடி போலிருக்கிறது. ‘நாயகன்னா சும்மாவா?’ என சந்திரசேகர் குண்டர்களை நையப்புடைக்கும் பொழுது ஏற்றுக் கொள்ளும் மனம், அவர் நையப்புடைக்கப் படும்போது பதறுகிறது. ஆனால் எஸ்.ஏ.சந்திரசேகரோ அசராமல், “ஐ ஆம் வெயிட்டிங்” என அடுத்த பாகத்திற்கும் சேர்த்து அச்சாரமிட்டுள்ளார்.

தமிழரசன் எனும் சிறுவன் மிக முக்கியமான கதாபாத்திரமொன்றில் நடித்துள்ளான். அவனது துடுக்குத்தனமும் குறும்பும் நிறைந்த பேச்சு, வேலுச்சாமியின் அதிராப் பேச்சினை சமன் செய்கிறது. அவனது அம்மாவாக வரும் விஜி சந்திரசேகர், படத்தில் போதிய வாய்ப்புகள் இல்லாத பொழுதும் கிடைத்த காட்சிகளில் அழுத்தமாக தன் அனுபவத்தை நிரூபித்துள்ளார்.

அசிஸ்டெண்ட் கமிஷ்னராக எம்.எஸ்.பாஸ்கர். மிரட்டலான கதாபாத்திரமாக அறிமுகமாகி, வழக்கமாய்ப் பம்மும் பட்டாபியாக மாறுவதால், அவரது கதாபாத்திரம் மனதில் அழுத்தமாகப் பதியாமல் போகிறது. துள்ளலான ரெளடி ‘பேபி அனகொண்டா’வாக ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் நடித்துள்ளார். காமெடியை சீரியஸாகவும், சீரியஸான காட்சியைக் காமெடியாகவும் செய்தாலும் இவரை ரசிக்க முடிகிறது.

காதலில்லா வறண்ட தமிழ்ப்படமா என்ற பழி விழுந்து விடக்கூடாதென பா.விஜய் – சாந்தினி ஜோடியைப் படத்தில் இணைத்துள்ளனர். கதைக்குப் பொருந்தும்படி அவரது கதாபாத்திரங்களை இணைத்திருந்தாலும், ஒரு பட்டும் படாத அவசரத்தன்மை அவ்விரு கதாபாத்திரத்திலும் துருத்திக் கொண்டு தெரிகிறது.

பிரதான நாயகனின் வயது எழுபதென்பது தமிழ்த் திரைப்படத்தின் ஆரோக்கியமான முன்னேற்றத்தைப் பறைசாற்றினாலும், இது போன்ற முன் மாதிரி முயற்சிகளின் வெற்றி அதன் கதையிலேயே உள்ளது. அப்பொழுது தான் ‘தலைமுறைகள்’ கடந்து நிற்கும். ‘செயல்’ இயக்குநர் விஜய் கிரண் அதையும் கருத்தில் கொண்டு படத்தை நயமாய்ப் படைத்திருக்கலாம்.