தன்னைத் தானே அழுத்தத்திற்கு உள்ளாக்கிக் கொள்வதோடு மட்டுமல்லாமல், தான் பெற்ற குழந்தைகளையும் மன அழுத்தத்திற்குத் தள்ளும் பெற்றோர்களுக்கான படமிது. தங்கள் உலகத்திற்குள் சிறுவர்களை இழுக்க நினைக்கும் பெற்றோர்களிடம், குழந்தைகள் உலகத்தை அறிமுகம் செய்கிறது பசங்க-2.
நற்சாந்துபட்டியில், ஒரு விளையாட்டு மைதானத்தில் படம் தொடங்குகிறது. அங்கேயே படம் முடிந்தும் விடுகிறது. அக்காட்சியில் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் மூலம் பேசத் தொடங்கும் பாண்டிராஜ், படம் முழுவதும் பெற்றோர்களிடம் தொடர்ந்து உரையாடிக் கொண்டேயிருக்கிறார்.
சிறுவன் நிஷேஷும், சிறுமி வைஷ்ணவியும் அதகளப்படுத்தியுள்ளனர். கத்தி மேல் நடந்திருக்கும் பாண்டிராஜைப் பத்திரமாக கரை சேர்த்துள்ளனர். இச்சிறுவர்கள் மட்டுமல்ல, மருத்துவர் தமிழ் நாடனாக வரும் சூர்யா, ஆசிரியை வெண்பாவாக வரும் அழகான அமலா பால், கவினின் பெற்றோர்களாக வரும் ராம்தாஸும் வித்யாவும், நயனாவின் பெற்றோர்களாக வரும் கார்த்தி குமாரும் பிந்து மாதவியும், சூர்யாவிடம் கம்பவுண்டராகப் பணி புரிபவர், வெவ்வேறு பள்ளிகளின் வகுப்பறையில் இருக்கும் கவின், நயனாவின் வகுப்பு மாணவர்கள் ஆகிய அனைவருமே கனக் கச்சிதமாக தன் பாத்திரங்களில் பொருந்தியுள்ளனர். ராமதாஸை, முண்டாசுப்பட்டி முனீஸ்காந்த் என்றால் தான் உடனே நினைவுக்கு வரும். க்ளெப்டோமேனியா குறைபாடுள்ளவராக வரும் அவரது கதாபாத்திரத்தினைக் கொண்டு கலகலப்பாகியுள்ளார் இயக்குநர். ஒரே காட்சியில் தான் தோன்றுகிறார் எனினும் தனது வழக்கமான முத்திரையைப் பதிக்கிறார் சமுத்திரக்கனி. சஞ்சய் ராமசாமியாக வரும் சூரி மட்டும் தான் ஒட்டாமல் உறுத்துபவராக உள்ளார்.
கதை சொல்லுவதில் அதீத ஆர்வமுடையவள் நயனா. அவள் கதையில் அனுமன், ஸ்பைடர் மேன், ஹல்க், டோரா என அனைவரும் வந்து ரசிக்க வைக்கின்றனர். அதையும் 2டி-இல் காட்சிப்படுத்திப் பிரமாதப்படுத்தியுள்ளனர். ஆனால், அதே நயனா, டேலன்டினா (Talentina 2014) எனும் நிகழ்ச்சியில், தன் குழந்தை கலை மனத்தைத் திறக்காமல், பாண்டிராஜின் திரைக்கதையையே புறா கதையாக்கிச் சொல்லியுள்ளது சோகத்திலும் பெருஞ்சோகம். அந்தக் காட்சி, திரைக்கு உள்ளும் வெளியிலும் இருக்கும் பார்வையாளர்களிடம் அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தினாலும், நயனாவையும் பெரியவர்கள் உலகத்துக்குக் கொண்டு வந்து, விக்ரமன் பட நாயகி போல் மேடையில் “ஃபீல்” செய்ய வைத்துவிட்டார் பாண்டிராஜ்.
பாலசுப்பிரமணியனின் ஒளிப்பதிவு படத்தின் பெரும் பலம். அவர் உபயோகித்திருக்கும் ‘கலர் டோன்’ குழந்தைகளைக் கவரும் விதத்தில் அற்புதமாக உள்ளது. வண்ண மயமான பலூன்களில் தொடங்கி, பல நிற காகிதக் கப்பல்களில், ADHD (Attention Deficit Hyperactivity Disorder) குறைபாடிருந்து சாதித்தவர்களின் புகைப்படங்களைச் சொருகி, பெற்றோர்களுக்கு நம்பிக்கையூட்டுவதாக முடிகிறது படம். எனினும் ADHD பற்றிய புரிதலைப் பார்வையாளர்களுக்குக் கடத்தத் தவறவிடுகிறார் பாண்டிராஜ்.
பசங்க – 2, அவசியமான அழகான ஹைக்கூ.