பட்டத்து யானை – அரச சின்னங்களைத் தாங்கியதும், அரசன் பவனி வரவும் அரண்மனையில் வளர்க்கப்படும் யானை. அப்படி யார் இந்தப் படத்தில் யானை என்று தெரியவில்லை.
ஐஸ்வர்யாவை வில்லன்களிடமிருந்து ஏன், எதற்கு, எப்படி சரவணா காப்பாற்றுகிறார் என்பது தான் கதை.
சமையல்காரர் சரவணனாக விஷால். படத்தின் முதற்பாதியின் கடைசியில் அடிக்கத் தொடங்குபவர், அதன்பின் படம் முடியும் வரை அனைவரையும் சகட்டுமேனிக்கு பறக்க வைத்துக் கொண்டே இருக்கிறார். டி.வி.எஸ். 50, கோயில் உண்டியல், பெரிய இரும்பு ஜல்லிக் கரண்டி, சோடா பாட்டில், பீர் பாட்டில் என ஒருமுறை உபயோகித்த ஆயுதத்தை மறுமுறை உபயோகிக்க மாட்டேங்கிறார். எத்தனையோ பேருடன் எவ்வளவோ சண்டைப் போட்டாலும்.. சட்டை கிழிந்து விடாமல் அலேக்காக வில்லன்களை துவம்சம் செய்யும் மாபெரும் சண்டக்கோழியாக உள்ளார். ஒரு துளி ரத்தம் சிந்தாமல், அனைவரையும் இரத்தக்களறியாக்கி சிதறவிடுகிறார். பிரதான வில்லனாக்கு ஆறுகட்டு வயிறு. அதனால் மரியாதை நிமித்தமாக, விஷால் அவரிடம் மட்டும் இரண்டி அடி ஒரு உதை வாங்கிக்கிறார். இந்தப் பெரிய மனசு தான் நாயகர்களை அன்றும் இன்றும் வாழ வைக்கிறது.
கெளரவமாக சந்தானம். படத்தின் முதல் காட்சியிலிருந்து முதற்பாதியின் பெரும்பாலான காட்சிகளில் இவர் மட்டுமே உள்ளார். அப்புறம் மாநகராட்சி கழிப்பிடத்தில் தொலைந்து போய், ரொம்ப நேரத்திற்குப் பிறகு ஒரு தென்னந்தோப்பில் தோன்றுகிறார். நாயகனைக் கலாய்த்து கவுன்ட்டர் வசனம் பேசி காமெடி சூப்பர் ஸ்டாரான சந்தானம், விஷாலையோ அவரின் வசனத்தையோ ஒரிடத்தில் கூட கலாய்க்கவில்லை. அவருக்கு இயல்பாய் வருவதை செய்யாததால், காமெடியும் சொல்லி கொள்ளும்படி இல்லை. ஆனால், “நீ எல்லாம் நல்லா வந்துட்டடா” என விஷாலிற்கு புகழாரம் மட்டும் ஒரிடத்தில் சூட்டுகிறார். இம்முறை சந்தானத்தின் வாயில் மாட்டியது.. ஜெகன், சிங்கமுத்து, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் போன்ற துணை நடிகர்கள் தான்.
பன்னிரெண்டாம் வகுப்பு மாணவியாக ஐஸ்வர்யா அர்ஜூன். முதல் பார்வையிலேயே இவரை நாயகன், வில்லன் என இருவருக்குமே பிடித்து விடுகிறது. வெள்ளைத் தோலுடையவர் ஆச்சே.. ஆக காதல்(?)வந்தாகணும்ல!! அதற்காக லூசுப் பெண்ணெல்லாம் இல்லை. “வாங்க போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் கம்ப்ளெயின்ட் தரலாம்” எனப் பதட்டமில்லாமல் சொல்லும் தைரியமான பெண்ணாக நடித்துள்ளார். 20 – 30 பேர் கையில் அரிவாள்களுடன் வெட்ட வரும் பொழுது, “இவன் தான் எங்கப்பாவை அடிச்சது” என சமர்த்தாக நாயகனிடம் போட்டுக் கொடுக்கிறார். ஆனால் மற்ற நாயகிகள் போல், “அவனை விடாத அடி. கொல்லு” என நாயகனை ஏத்தி விடும் அற்பத்தனம் எல்லாம் இல்லை.
பிரகாஷ்ராஜின் தோனி படத்தில் கனி பாயாக அசத்தியிருந்த முரளி ஷர்மா, பெரிய பில்டப்களுடன் அறிமுகமாகி நாயகனிடம் உதைபடுபவராக வருகிறார். கொஞ்சம் வில்லத்தனம் நிரம்பிய குணசித்திர வேடத்தில் ஜான் விஜய் மட்டும் சோபிக்கிறார். ஆனால் விஷாலிடம் ஓர் உதை கூட வாங்காமல் எல்லாக் காட்சிகளிலும் எப்படியோ நழுவி விடுகிறார்.
தமனின் இசையில் “என்ன ஒரு என்ன ஒரு அழகியடா” பாடல் ரசிக்கும்படியாக உள்ளது. தனது படமான மலைக்கோட்டையையே தழுவியுள்ளார் இயக்குநர் பூபதி பாண்டியன். கதைக்களமும் திருச்சியே தான்.