Search

பண்ணையாரும் பத்மினியும் – இசை வெளியீட்டு விழா

விழா தொடங்கும் முன், ஃபியட் கார் வைத்திருப்பவர் சிலரின் அனுபவங்களைக் காணொளியாகப் போட்டனர். ‘ஃபியட் கார்களுக்கு உயிருண்டு. நம்முடன் அவை ஒரு பந்தத்தை உருவாக்கி விடும்’ என காரின் மீதுள்ள காதலோடு அவர்கள் கண்கள் மலரப் பேசினார்கள்.

Pannaiyarum Padmaniyumபடத்தில் நான்கு பாடல்கள். இரண்டு பாடல்களை கவிஞர் வாலியும், மீதி இரண்டு பாடல்களை படத்தின் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரனும் எழுதியுள்ளனர். இசையமைப்பாளரைப் பார்க்க பள்ளி மாணவனைப் போல உள்ளார். அடுத்த படத்திற்கும் தன்னை வந்து பார்க்கச் சொன்ன கவிஞர் வாலியை மிகவும் மிஸ் செய்வதாக விழாவில் சொன்னார் ஜஸ்டின்.

‘உனக்காகப் பிறந்தேனே  எனதழகா
பிரியாமல் இருப்பேனே  பகல் இரவா’ 

Thulasiஎனத் தொடங்கும் ஒரு பாடலை கவிஞர் வாலி எழுதியுள்ளார். பண்ணையாரான ஜெயபிரகாஷுக்கும், அவரது மனைவியான துளசிக்கும் இடையே உள்ள காதலையும் அன்னியோன்னியத்தையும் பிரதிபலிக்கும் பாடலாகப் பிரமாதமாக உள்ளது. பதின்பருவ காதலையும், கல்யாணத்திற்கு முன்பான முதிர்ச்சியற்ற காதலையுமே காட்டி வரும் தமிழ்த் திரைப்படப் பாடல்கள் மத்தியில் இப்பாடல் ஒரு பேரதிசயம். அத்தம்பதியின் காதலை அழகாகக் காட்டியுள்ளார் இயக்குநர் அருண் குமார். கோகுல் பினோயின் ஒளிப்பதிவும் ஜெயபிரகாஷ், துளசி இணையின் முக பாவனைகளைக் கச்சிதமாகக் காட்டுகின்றன. இப்பாடல் அனைவரையும் நிச்சயமாக வசிகரிக்கும்.

அதே போல், ‘பேசுறேன் பேசுறேன் காதல் மொழி’ என்றொரு பாடல். இதுவும் வாலி அவர்களால் எழுதப்பட்டதே! ஒரு சாவு வீட்டில் வரும் காதல் பாடல். இப்படி ஒரு சூழ்நிலையில் காதல் பாட்டு வைத்த அருண் குமாரின் துணிச்சலைப் பாராட்டினார் விழாவிற்கு வந்திருந்த இயக்குநர் ஆர்.வி.உதயகுமார். 

“சினிமாவில் முக்கியம் வெற்றி பெறுவது அல்ல. பெற்ற வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வதுன்னு சொல்வாங்க. அதுவுமில்ல. எனக்கு கவிஞர் வாலி சொன்னதை நான் அருண் குமாருக்குச் சொல்றேன். ‘நான் ஆணையிட்டால்.. அது நடந்து விட்டால்..” என்ற பாடலை எழுதிட்டு அதை எம்.ஜி.ஆர்.கிட்ட பாடிக் காண்பித்து ஒப்புதல் வாங்கணும். எம்.ஜி.ஆர். அலங்காரம் பண்ணிட்டிருக்கிறார். அந்த அறைக்கு வாலி போறார். அப்போ எம்.ஜி.ஆரோடு நான்கு பேர் அமர்ந்திருக்காங்க. வாலி பாடல் வரிகளைப் படிச்சுக் காண்பிக்கிறார். வாலியை வெளியே போக சொல்லிட்டு, நால்வரிடம் பாடல் பற்றிக் கேட்கிறார். அவர்கள் பாடல் நல்லாயில்லை என கருத்து சொன்னார்கள். ‘ஆணையிட்டால்? நடந்து விட்டால்? என சந்தேகமாவே கேட்கிறாப்ல இருக்கு’ என கருத்து சொன்னார்கள். எம்.ஜி.ஆர். வாலியை அழைத்து அவர்கள் சொன்னதைச் சொல்லிட்டு புதிதாக எழுதி வர சொல்கிறார். 

‘இன்னும் 10 கூட எழுதுறேன். ஆனா நான் சொல்றதைக் கேளுங்க. நான் ஆணையிட்டால் பிறகு தத்ரதத்ரதத்தேன் என ஒரு இசை வரும். அதை மனதில் கொண்டு தான் எழுதினேன். நான் ஆணையிட்டால் என நீங்க சொன்னால்.. ரசிகர்கள், நீ ஆணையிடு தலைவா என்பார்கள். அது நடந்து விட்டால் என நீங்க சொன்னால்.. அது நடந்து விடும் தலைவா என ரசிகர்கள் சொல்வார்கள்’ என விளக்கினாராம் வாலி. உடனே எம்.ஜி.ஆர். அந்த நால்வரை வெளியில் போகச் சொல்லிட்டு வாலியை உட்கார சொன்னாராம்.

அந்த மாதிரி சினிமாவில் முக்கியம், சுத்தியிருக்கிற நாலு பேரை வெளியில் அனுப்பணும். அப்ப தான் நாம உள்ள வர முடியும்” என்றார் கரு.பழனியப்பன்.

இந்தப் படத்தின் தெலுங்கு உரிமையை நடிகர் நானி (நான் ஈ) வாங்கியுள்ளார். அவரே தயாரித்து நடிக்கவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் உரிமையை வாங்கியதைக் குறித்து, தனக்குக் கிடைத்த ‘ஜாக்பாட்’ என சிலாகிக்கிறார் நானி.
Leave a Reply