பேய்ப் படங்கள், காமெடிப் படங்களாக மாறி மிகுந்து விட்ட சூழலில் முழு நீள ‘சீரியஸ்’ பேய்ப் படத்தை எடுத்துள்ளார் இயக்குநர் மணிஷர்மா.
தன்னைக் கொன்றவர்களைப் பட்டெனக் கொன்றுவிடும் பேய், நாயகனை மட்டும் பயமுறுத்தி ஓட விட்டுக் கொண்டே இருக்கிறது. அந்தப் பேய் ஏன், எதற்கு அப்படிச் செய்கிறது என்றும், நாயகனின் நிலை என்னானது என்பதும்தான் படத்தின் கதை.
பரத் ரெட்டி முதல் முறையாக நாயகனாக நடித்துள்ளார். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமல் ஓடிக் கொண்டே இருக்கும் கதாபாத்திரத்தை நிறைவாகச் செய்துள்ளார். மகளின் அன்பையும், மகள் மீது அன்பு செலுத்துவதைப் பெரும்பேறாகக் கருதும் பாசமுள்ள தந்தையாகவும் உலா வந்துள்ளார் பரத். படத்தின் மையக்கருவே, மகள் மீது தந்தை கொண்ட அன்புதான் என்றும் சொல்லலாம். தந்தை மகள் மீது காட்டும் பாசம், படத்தில் வரும் கிளைக்கதையிலும் மையக்கருவாக வருகிறது. விஷாகா சிங்கின் தந்தையாக நடித்திருக்கும் ஞானவேல் இரண்டே இரண்டு காட்சிகளில் வந்தாலும், பாசமிகு தந்தையாக மனதில் பதிகிறார்.
நாயகனின் மனைவியாக மீனாட்சி தீக்ஷித் நடித்திருந்தாலும், பேய்ப் படத்தில் பேயாக நடித்தவர்தானே நாயகி? அப்படிப் பார்த்தால் விஷாகா சிங் தான் படத்தின் நாயகி. ரொம்ப காக்க வைக்காமல், படம் தொடங்கிய சில நொடிகளிலேயே பேயின் அட்டகாசத்தைத் தொடக்கி விடுகிறார் இயக்குநர். படத்தின் பெயர் போடுவதற்கு முன்பே வரும் பேயின் அறிமுக அத்தியாயம் மிக அட்டகாசமாக உள்ளது. அந்த அட்டகாசம், படம் பயணிக்க மெதுவாகக் குறைந்து வழக்கமான பழி வாங்கல் கதையாகி விடுகிறது.
குடிகாரக் கணவரான சிங்கமுத்துவை நெஞ்சிலேயே எட்டி உதைக்கும் மனைவியாக மதுமிதா ஒரே ஒரு காட்சியில் வருகிறார். யோகிபாபு, லொள்ளு சபா மனோகர், கிங்காங் போன்ற நடிகர்களின் மூலம் படத்தில் நகைச்சுவையை இயக்குநர் வைக்க முயன்றிருந்தாலும், சீரியசான படம் என்பதால் அதெல்லாம் எடுபடாமல் போகிறது. முனீஸ்காந்தின் தம்பியாக வருபவர் நன்றாக நடித்துள்ளார். கெளரவக் கொலை செய்யப்பட்டு விடும் அவர், ஒரு ரோஜாவோடு அறிமுகமாகும் காட்சியிலும், நாயகனை எச்சரிக்க நினைத்து முடியாமல் போகும் காட்சியிலும் பார்வையாளர்களின் கவனத்தை தன் பக்கம் இழுத்துக் கொள்கிறார்.
படத்தின் அறிமுகக் காட்சியில் இருந்த திகிலும் புதுமையும், படத்தின் முடிவில் இல்லாதது குறை. ஆக, எதிர்பாராத முடிவை இயக்குநர் மணிஷர்மா வைத்திருந்தும் படத்தின் முடிவு தரும் தாக்கத்தை அக்குறை நீர்த்துப் போகச் செய்து விடுகிறது. அடுத்த பாகத்திற்கான கருவை வலிந்து திணிக்காமல், இயல்பாய் வைத்திருப்பது நன்றாக உள்ளது. எனினும், உடன் பணி புரிபவரின் மகள் கண் முன்னாக இறந்து கிடக்கும் நிலையில், அலுவலகப் பணி தொடர்பானவற்றில் யாராவது கண்ணும் கருத்துமாக இருப்பார்களா என்ன? அத்தகைய முரணான நண்பன் பாத்திரத்தில் இயக்குநரே நடித்துள்ளார். இசையமைப்பாளர் பிரசாதின் பின்னணி இசை மிரட்டுகிறது. பேய்ப் பங்களாவிலுள்ள பொருட்களையும் ஓவியங்களையும் அசத்தலாகத் தேர்ந்தெடுள்ளார் கலை இயக்குநர் M.R.கார்த்திக் ராஜ்குமார். நாயகன் உபயோகிக்கும் உயர் ரக காரும் ஒரு பாத்திரம் போலவே படம் முழுவதும் பயணிக்கிறது.
பேயை விட அச்சுறுத்துபவர்களாக படத்தில் வரும், ‘கலாச்சாரக் காவலர்கள்’ உள்ளனர். அவர்களின் தலைவராக வரும் ஜான் விஜயின் கதாபாத்திர வடிவமைப்புப் பயங்கரமான கிலியை ஏற்படுத்துகிறது. பழி வாங்க நினைக்கும் வன்மம் நிறைந்த பேயைக் காட்டிலும், சக மனிதனைச் சினேகமாகப் பார்க்கத் தெரியாதவர்களைக் கண்டே நாம் தொடர்ந்து பயப்பட வேண்டியிருக்கிறது என்பதே படம் மறைமுகமாக உணர்த்தும் உண்மையோ என்ற திகில் எழுகிறது.