Shadow

“பயம் சிறுத்தையால்தான்” –‘யாமிருக்க பயமே’ மயில்சாமி

‘யாமிருக்க பயமேண்’ எதிர்பார்த்ததை விட வெற்றிகரமாக திரையரங்கில் ஓடி வருகிறது. எம்.ஜி.ஆர். படங்களைத் தவிர எந்தப் படத்தையும் பார்க்க விரும்பாத மயில்சாமியை, தினம் 5 நபர்களுக்குக் குறையாமல் தொலைபேசியில் அழைத்துப் பாராட்டி வருகின்றனராம்.

“எனக்கு தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது. அதனால் வருத்தப்படுறேன். ஹிந்தி பேசக் கூடத் தெரியாது. அதனால் வேதனைப்படுறேன். ஆங்கிலம் சுத்தமா வராது. அதனால் வெட்கப்படலை.

Yaamirukka bayamey Mayilswamyஏன் சொல்றேன் என்றால்.. தமிழ்நாடு தவிர வேற எங்கயும் ஷூட்டிங்குக்குப் போக மாட்டேன். பெரும்பாலும் தவிர்த்துடுவேன். ஆனா ‘யாமிருக்க பயமேன்’ படத்துக்கு நைனிட்டாலில் 3 நாள் ஷூட்டிங் எனச் சொன்னாங்க. டெல்லி ஏர்போர்ட்டில் இறங்கி அங்கிருந்து கார்ல போறேன் போயிட்டே இருக்கு. 10 மணி நேரத்துக்கு மேல ட்ராவல். எடுத்துட்டுப் போனதும் காலியாகிடுச்சு (இடதுக்கையால் பாட்டிலை சைகை காட்டுறார்).

முன்பே இது மாதிரிதான் ஹைதராபாதில் இறங்கி கார்ல ஓரிடத்துக்குக் கூட்டிட்டுப் போனாங்க. ஷூட்டிங் முடிச்சுட்டு திரும்பறப்ப தான் சொல்றாங்க.. இப்ப நாம போயிட்டு வந்தது.. ஓரிசா பார்டர் நக்ஸலைட் ஏரியா என்று. அதனால் நான் தமிழ்நாடு விட்டுப் போறது இல்லை. போக காசு தர்றோம்; வர காசு தர்றோம் என பணத்தால் அடிச்சார் மணி (மணிகண்டன் – நிர்வாக தயாரிப்பு).

நைனிடால் போயாச்சு. மெதுவா அங்கிருந்த லோக்கல் ஆளுகிட்ட, இங்கென்ன ஸ்பெஷல் கேட்டேன். கஞ்சா என்றார். பார்த்தா அங்க ஃபுல்லா கஞ்சா செடியா வளர்த்து வச்சிருக்காங்க. வேறென்ன ஸ்பெஷல் எனக் கேட்டேன். பெரிய பள்ளத்தாக்குன்னு சொன்னாங்க. வேறன்னு கேட்டேன். ஊருக்குள்ள சிறுத்தை சுத்திட்டு இருக்கும்னு சொன்னார். என்னய்யா சொல்றேன்னு கேட்டேன். சிறுத்தை வருதுங்கிறதாலதான் கதவை மூடிட்டு ஷூட்டிங் பண்றாங்க எனச் சொன்னாங்க. படத்தில் நான் பயந்ததுக்குக் காரணம் பேயில்லைங்க. சிறுத்தையை நினைச்சுட்டிருந்ததால் வந்த பயம்.

யாராவது யூரின் போகறப்ப லைட் இந்தப் பக்கம் திருப்பு எனச் சொல்வாங்களா? நான் அப்படித்தான் லைட்டை என் பக்கம் திருப்பி வை எனச் சொல்லிட்டு யூரின் பாஸ் பண்ணப் போனேன்” என தன் நைனிட்டால் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார் மயில்சாமி.

இயக்குநரிடம், “நீங்க செகண்ட் பார்ட் எடுக்கிறதாக இருந்தால்.. கொடைக்கானலில் அதே மாதிரி ஒரு வீடு பார்த்தேன். அதுல எடுங்க” என்றார் மயில்சாமி. 50 நாள் ஷூட்டிங்கில், 30 நாள் சப்பாத்தி மட்டுமே சாப்பிட்டு வெறுத்துப் போயிருந்த படக்குழுவினருக்கு, மயில்சாமி போய்தான் நம்மூர் உணவை சமைத்துப் போட்டிருக்கார்.

படத்தில் பணிபுரிந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இது முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளிக்கிழமை ரிலீஸ் செய்து விடலாம் என புதன்கிழமை முடிவு செய்து துரிதமாகச் செயல்பட்டுள்ளார் தயாரிப்பாளர் எல்ரெட் குமார். திரையரங்கில் ரசிகர்களுடைய கொண்டாட்டத்தினால், ‘யாமிருக்க பயமே’ மொத்த டீமும் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளார்கள்.

Yaamirukka bayamey Success Meet