‘பயாஸ்கோப்’ என்றதும் பயாஸ்கோப் காலத்திற்குப் போய்விடவேண்டாம். பழைய திரைப்படங்களைக் குறிக்கும் குறியீட்டுச் சொல்லாகவே இந்தத் தலைப்பு பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
இத்தொடரில் 1940 தொடங்கி 1960 முடிய மொத்தம் ஐம்பது திரைப்படங்களைப் பற்றிய முழுமையான குறிப்புகள் இடம்பெறுகின்றன.
ஆரம்பகால திரைப்படங்கள் பற்றிய நமக்குக் கிடைக்கும் செய்திகள் போதுமானதாக இல்லை. திரைப்படம் சார்ந்து எழுதிய சில எழுத்தாளர்களும் ஏராளமான புள்ளி விவரங்களையே தந்து சென்றிருக்கிறார்கள். சிலர் கதையை மட்டும் எழுதியிருக்கிறார்கள். ‘ராண்டார்கை’, ஹிந்துவில் எழுதி வரும் திரைப்படம் பற்றிய கட்டுரைகள் முக்கியமானவை. அவைகள் மிகச் சுருக்கமாக இருக்கின்றன. நினைவில் வைத்துக் கொள்ள தேவையில்லாத தோல்வியுற்ற படங்களைப் பற்றியும் ஏனோ எழுதி வருகிறார்! பழைய வெற்றி பெற்ற திரைப்படங்கள் பற்றி சற்று விரிவாக (விமர்சனம் அல்ல) எழுதிப் பார்க்கவேண்டுமென்று தோன்றியதன் விளைவாகவே இந்த ‘பழைய பயாஸ்கோப்’ கட்டுரைகள்.
எழுதப்பட்டிருக்கும் ஐம்பது திரைப்படங்களும் அவைகள் வெளிவந்த காலத்தில் மிகவும் பிரபலமாகப் பேசப்பட்ட மிகப் பெரிய வெற்றியடைந்த படங்கள். முத்திரை பதித்த இந்த வெற்றிப் படங்கள், வெளிவந்த காலத்தில் திரைப்பட ரசிகர்களைக் கவர்ந்த படங்களாக விளங்கி தமிழ்த் திரைப்படச் சரித்திரத்தில் இடம்பெற்றவை.
சாதனை படைத்த சிறந்த திரைப்படங்களைப் பற்றி, இன்றைய தலைமுறையினர் அனேகமாக அறிந்தே வைத்திருக்கவில்லை. இவைகள் காலம் நமக்கு விட்டுச் சென்றிருக்கிற கொடைகள். விரிவான குறிப்புகள் இல்லாத அளவில், வரும் காலத்தில் இவைகள் மறக்கப்படும் வாய்ப்புகள் நிச்சயமாக இருக்கிறது. சரித்திரத்தை அடுத்த தலைமுறைக்குக் கடத்தி விட வேண்டும் என்கிற பொறுப்பு என்னைப் போன்ற அந்தக் கால மனிதர்களுக்கு நிச்சயம் உண்டு. அதன் விளைவே இக்கட்டுரைகள். தொடர்ந்து படியுங்கள். படித்த பின், முடிந்தால் இத்திரைப்படங்களை உங்கள் வீட்டு தொலைக்காட்சிப் பெட்டியில் டி.வி.டி. வாயிலாகப் போட்டுப் பார்த்து மகிழுங்கள்.
புகைப்படம் உதவியவர்கள்: ஜெயபாபு & ஞானம்.
– கிருஷ்ணன் வெங்கடாசலம்