தன் மகளின் மருத்துவச் சிகிச்சைக்காக, தான் வேலை செய்த கேசினோவை ஜேசன் காக்ஸுடன் இணைந்து கொள்ளையடிக்கிறார் லூக் வான். கொள்ளையடித்து விட்டு ஓடும்போது, தப்பிப்பதற்காக பேருந்தொன்றில் ஏறுகின்றனர். ரோந்துப் பணியில் இருக்கும் க்றிஸியா எனும் காவல்துறை அதிகாரி சந்தேகத்தோடு அப்பேருந்தைத் தொடருவதால், லூக் வான் குழு வேறு வழியின்றி பேருந்தைக் கடத்துகின்றனர். மொத்த காவல்துறையும் அப்பேருந்தை பின் தொடர்கிறது. இச்சிக்கலில் இருந்து லூக் வான் எப்படித் தப்பிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.
எந்தப் புதுமையும் இல்லாத கதை. நேர்க்கோட்டில் பயணிக்கும் திரைக்கதை.
சில கொள்கைகளோடு வாழ்பவர் ஃப்ரான்சிஸ் சில்வியா போப். ‘எவரையும் திருட அனுமதிக்கக் கூடாது’ என்பது அதில் மிக முக்கியமானது. தொழிலின் பலமே அதில் தான் உள்ளதென உளமாற நம்புபவர். எவரேனும் அப்படித் திருடினால், திருடனையோ – திருடர்களையோ கண்டுபிடித்துச் சலனமேதுமின்றி கொலை செய்து விட்டுத்தான் மறுவேலை பார்ப்பார். இத்தகைய உயரிய கொள்கைகளைக் கற்றுக் கொடுத்து, தனக்குப் பின் தன் சாம்ராஜ்யத்தை ஆள டெர்ரிக் என்பவரை உருவாக்கி வைத்திருக்கிறார். போப்பாக ராபர்ட் டி நீரோ. வயோதிக வில்லனாக அறிமுகமாகும் போது ஈர்க்காதவர், படத்தின் முடிவில் மனதில் நிற்கிறார். இவர்தான் படத்தின் உண்மையான நாயகன். அவரை நாயகனாக்குவது மகள் மீதான அவரது பாசம். போப்பின் மகள் சிட்னி சில்வியாவாக கேட் போஸ்வொர்த் நடித்துள்ளார். தந்தையின் கொள்கைகளுக்கு நேரெதிரான சிந்தனையைக் கொண்ட சிட்னி சில்வா, தந்தையின் பார்வையிலிருந்து மறைந்து வாழ்கிறார்.
“உங்க பணத்தால் என்னை வாங்க முடியாது. உங்க தொழில், உங்க பணம் எல்லாம் எனக்குப் புற்றுநோயைப் போல் அருவருக்கத்தக்க, வெறுக்கத்தக்க விஷயம். உண்மையான அன்பு பணத்தால் அல்ல, தியாகத்தாலேயே அமைகிறது” எனச் சொல்கிறார். இப்படி, மகளால் உதாசீனப்படுத்தப்பட்டுச் சோர்ந்து போய்க் கிடக்கும் போப், ஒருவனைக் கொல்லப் போகுமிடத்தில் உண்மையான அன்பைக் கண்டு கொள்கிறார். அவரது தாய் சொன்ன, “மரணப்படுக்கையில் ஒருவன் தன் வாழ்க்கையை எண்ணி வருத்தப்பட்டால், அவன் தவறான வழியில் வாழ்ந்துள்ளான் எனப் பொருள்” எனும் அறிவுரை அவருக்கு ஞாபகம் வருகிறது. 117 நிமிடங்கள் ஓடும் படத்தின் பேசுப்பொருள் அன்பும், அன்பால் விளையும் தியாகமுமே.! வாழ்க்கையின் சாரம்சமும் அதுதானே.!
பாசமிகு தந்தை லூக் வானாக ஜெஃப்ரி டீன் மோர்கன் நடித்துள்ளார். பேருந்தைக் கடத்துபவர் இவர்தான். ஆனால், இப்படி ஒரு நபரே பேருந்தில் இல்லையென பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட பேருந்துப் பயணிகள் காவல்துறை அதிகாரிகளிடம் சொல்லுகிறார்கள். அதெப்படி ஒரு பேருந்தில் பயணிக்கும் அனைவருக்குமேவா ‘ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம்’ பிரச்சனை இருக்கும்? பின் ஏன் பயணிகள் பொய் சொல்கின்றனர்? அதே போல், கொள்ளையடிப்பதென முடிவாகிவிட்ட பின், லூக் வான் ஏன் தான் வேலை செய்த ‘ஸ்வான்’ எனும் சூதாட்ட விடுதியிலேயே (கப்பல்) கை வைக்கிறார்? அதுவும் அதன் முதலாளியான போப்பின் குணமறிந்து ஏன் அத்தகைய நடவடிக்கையில் இறங்குகிறார்? படத்தில் இது போல் சின்னஞ்சிறு சுவாரசியங்கள் உண்டு.
பிரியத்துக்குரிய மகளுக்காகத் தன் உயிரை அடமானம் வைப்பவனுக்கு எல்லாம் நல்லதாகவே நிகழ்கிறது. உண்மையான அன்பு பணத்தால் அல்ல, தியாகத்தாலேயே அமைகிறது.