Shadow

பாபநாசம் சுயம்புலிங்கம், ஹேப்பி அண்ணாச்சி!!

பாபாநாசம்

படத்தின் வெற்றியைக் கொண்டாட, படக்குழுவினர் அனைவரும் அந்தந்தப் பாத்திரத்தின் உடையலங்காரத்துடனே மேடையேறினர். அது மட்டுமல்லாமல், சுலைமான் பாய் டீக்கடை – ராணி இல்லம் – காவல் நிலையம் என மேடையின் செட்டிங்கிலும் அமர்க்களப்படுத்தியிருந்தனர். ‘வெற்றி தோல்விகள் சகஜம். ஆனால் இப்படியொரு படம், எங்களுக்கும் மனத் திருப்தியை அளித்து ரசிகர்களுக்கும் மனத் திருப்தியை அளித்த இப்படம் வெற்றி பெற்றதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளோம்’ என கமல் சொன்னதுபோல், பாபநாசம் படத்தின் மொத்த குழுவும் மகிழ்ச்சியில் திளைத்தவாறு ஊடகத்திற்கும் மக்களுக்கும் நன்றியைத் தெரிவித்தனர்.

பாபநாசம் இயக்குநர் ஜீத்து ஜோசப்பிடம், “யார் சிறப்பாக நடித்திருந்தனர்? த்ரிஷ்யத்தின் ஜார்ஜ் குட்டியா? பாபநாசத்தின் கமலா!?” எனக் கேட்டதற்கு,

“இருவரும் தனக்கே உரிய ஸ்டைலில் அந்த பாத்திரத்தை நடித்திருந்தனர். இருவரும் தன் திறமைகளை நிரூபித்தவர்கள். இந்திய அளவில் முக்கியமான நடிகர்கள். இருவரையும் ஒப்பிடுவது சரியில்லை” என்றார் இயக்குநர் ஜீத்து ஜோசப்.

“உங்களுக்கு பெர்ஸனலாகப் பிடித்த ஃபேவரிட் நடிகர் யார்? மோகன்லாலா? கமலா?”

“இதற்குப் பதிலாக நான் த்ரிஷ்யத்தில் மோகன்லால் சாரும், பாபநாசத்தில் கமல் சாரும் சொன்னதையே சொல்றேன். சில ரகசியங்கள் என்னோட புதைஞ்சிடுறது நல்லது” என்று சுவாரசிமாகப் பதிலளித்தார் ஜீத்து ஜோசப்.

உலக நாயகன் கமலிடம், “த்ரிஷ்யத்தின் மீனாவா? பாபநாசத்தின் கெளதமியா? யார் நன்றாக நடித்திருந்தனர்?” எனக் கேட்டதற்கு,

“நானும் சில விஷயங்களைப் புதைச்சிடுவேன். நாளைக்கே, மீனாவோடு நடிக்க ஒரு வாய்ப்புக் கிடைத்தால், கோபத்தில் அவங்க முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டால் என்ன செய்ய? இவங்கன்னா (கெளதமி) பரவாயில்லை. தினம் பார்க்கிறேன். வழிக்குக் கொண்டு வந்துடலாம்” எனச் சிரித்தார் கமல்.

மலையாளப் பட ரீ-மேக்கில் நடித்தது பற்றி?

சினிமாவுக்கு மொழி கிடையாது. சினிமாவே ஒரு மொழி. தமிழ், மலையாளம் என்பதெல்லலாம் ஒரு விலாசம்தான். அப்படிப் பார்த்தால் நமக்கு எம்.ஜி.ஆர். கிடைத்திருக்க மாட்டார். நான் இங்கே தமிழ் மீடியாக்கள் மத்தியில் நின்று சொல்கிறேன். நான் பாதி மலையாளி. ஆனால் கேரளக்காரங்க இதை ஒத்துக்க மாட்டாங்க. ‘அவர் முழு மலையாளி’ என்று உரிமையோடு சொல்வார்கள்.

த்ரிஷ்யத்து ஜார்ஜ் குட்டி க்றிஸ்துவர். பாபநாசத்தில் இந்து சுயம்புலிங்கமாக மாறியது ஏன்?

த்ரிஷ்யம் தொடுபுழாவில் நடந்தது. அது எப்படி பாபநாசமாக மாறியதோ, அப்படித்தான் அதுவும்.

படம் இணையத்தில் அதுக்குள் வந்துவிட்டதே! அதைப் பற்றி என்ன நினைக்கிறீங்க?

திண்டுகல்லில் பூட்டு செய்யும்போதே, எங்கயோ அதுக்கு சாவியும் செஞ்சுடுறாங்க. நம்மள விட அவங்க கெட்டிக்காரங்களா இருக்காங்க. இதுக்கு ஒன்னும் செய்ய முடியாது. காக்கி சட்டை போட்டவர்கள்தான் தடுக்கணும். நாங்க சவுண்ட்தான் தர முடியும். இது என் படத்துக்கு வந்த நாசம் மட்டுமில்லை. அனைவருக்கும் நடக்கிறது.

படத்துக்கு வரி விலக்கு தரப்படாதது குறித்து என்ன நினைக்கிறீங்க?

அதுக்குத்தான் தெளிவான பதிலை அவங்க தளத்திலேயே கொடுத்திருக்காங்களே! அவங்க சொல்லும் காரணங்கள் நியாயமாதான் இருக்கு.

உங்க படத்தில் பிற்போக்குத்தனம் இருக்கு எனச் சொல்லியிருக்காங்களே!

அது அந்தக் கதாபாத்திரத்தோட இயல்பு. பாவத்தை நீரில் மூழ்கிக் கரைக்கலாம் என நினைப்பவர் சுயம்புலிங்கம். ஒரு படத்தில் நான் ஸ்மக்லராக நடித்தால், நிஜமாவே ஸ்மக்லிங் பண்றேன்னு அர்த்தமில்லை.

படத்தில் சுயம்புலிங்கம் வீட்டில் ஆதித்தனர், காமாராஜர் படம் இருந்ததே! அது திட்டமிட்டு வைக்கப்பட்டதா?

ஆமாம். அவர்கள் சுயம்புலிங்கத்தினுடைய வட்டார ஹீரோக்கள். தேவர் மகனில் கூட பெரியார் படமும், முத்துராமலிங்க தேவர் படமும் வரும். அது ஒரு கதை சொல்லும்.

போலிஸ் ஸ்டேஷனில் அடி வாங்குவது போல் ஒரு சீன் வருது படத்தில். ஒரு பெரிய நடிகர் ஒத்துக்கலைன்னு கேள்விபட்டோம். நீங்க எப்படி நடிக்க ஒத்துக்கிட்டீங்க?

எனக்கு அந்தப் பாகுபாடுலாம் இல்லை. என் வேலை நடிப்பது. உலக நாயகன் என்பது அவர்கள் கொடுத்த பட்டம். அது நான் இல்லை. யாராவது கமல் என்றழைத்தாலே, அது யாரையோ கூப்பிடுவது போலிருக்கு. நடிகன் என்று சொன்னால், அது என்னைக் கூப்பிடுவது போலிருக்கு. உலக நாயகன் என்பதை விட நல்ல நடிகன் எனச் சொல்லப்படும்பொழுதுதான் எனக்கு மகிழ்ச்சி.