பிச்சைக்காரன் படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்டு படக்குழுவினரைப் பாராட்டிய இயக்குநர் மோகன் ராஜா, “இந்தப் படத்தின் வெற்றி, தலைப்பு விஷயத்தில் தமிழ் சினிமாவுக்கு இருக்கும் மூட நம்பிக்கைகளை உடைத்துள்ளது. ‘தனி ஒருவன்’ என்ற தலைப்பு வச்சதுக்கு, “என்ன சார் தனி ஒருவன்னு வச்சிருக்கீங்க? படம் அவ்ளோதான்”எனச் சொன்னாங்க. தனியா ஒருவன்னா வச்சேன்; தனி ஒருவன்னுதான வச்சேன்! அதுக்கே பிச்சைக்காரன்னு தலைப்பு வச்சாப்ல என்னைப் பார்த்தாங்க. அப்ப பிச்சைக்காரன் வச்சதுக்கு அவங்களை எப்படிப் பார்த்திருப்பாங்க?
‘மாதவனுக்கு இதான் சார், இறுதிச்சுற்று. இனி அவருக்கு படமே வராது. தலைப்பே சரியில்லை’ன்னாங்க. இப்ப அந்த மூட நம்பிக்கைலாம் உடைஞ்சிடுச்சு. அப்படிச் சொல்லக் கூடாது. இனி இது போல தலைப்பு வைப்பாங்க. “அபசகுனம்” என்ற தலைப்புக்கு கவுன்சிலில் பத்து பேரு சண்டை போட்டாலும் போட்டுக்குவாங்க” என்றார்.
“நான் விஜய் ஆண்டனியிடம் நாலு கதை சொன்னேன். அதில் இந்தக் கதையை அவர் தேர்ந்தெடுத்தார். டிஷ்யூம்க்கு அப்புறமே இந்தக் கதையை ஸ்டார்ட் பண்ணி ஆர் & டி-லாம் பண்ணோம். பாலாவின் ‘நான் கடவுள்’ வந்ததால் அப்போ இதைச் செய்யலை. படம் பண்ணலாம் என்று முடிவானவுடன், தயாரிப்பாளராக என்னைப் பார்த்து ‘செக்’ தர வந்திருந்தார் விஜய் அஅண்டனி. கார் வரைக்கும் அவரை வழியனுப்பப் போயிருந்தேன். அப்போ, ‘பிச்சைக்காரன்னு தலைப்பு எப்படி சார் இருக்கு? என் மனைவிகிட்ட சொன்னவுடன் அவங்களுக்குப் பிடிச்சிருந்தது’ என்றார். ‘எனக்கு என்னடா இது?’ன்னு இருந்தது. செக் வேற வாங்கிட்டோம். திருப்பிக் கொடுத்துடலாமா என யோசித்தேன். ஆனால், விஜய் ஆண்டனியும் அவரது மனைவி பாத்திமாவும் ஒரே போல் யோசிப்பவர்களாக, இது சரி வரும்னு நம்பினாங்க. இன்னிக்கு இந்தப் படத்தைப் பார்த்த டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ் எல்லாம், இந்தப் படத்துக்கு பிச்சைக்காரனை விட பெஸ்ட் தலைப்பு வேறெதுவும் இருக்காதுன்னு ஃபோன் செய்து சொல்றாங்க” என்றார் இயக்குநர் சசி.
சகுனத்தடைகளை வென்று வாகை சூடியதற்கு படக்குழுவினருக்கு மகிழ்ச்சியுடன் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். ஆனால், இந்தப் படத்துக்கு பிச்சைக்காரன் எனும் தலைப்பு சரிதானா?
“பால் போடுபவன் பால்காரன்; பேப்பர் போடுபவன் பேப்பர்காரன்; அப்ப பிச்சை போடுறவன்தானே பிச்சைக்காரன்?” என்றொரு கேள்வி படத்தில் வருகிறது. பல காலமாகக் கேட்கப்பட்டு வரும் கேள்வியே அது. யார் எந்தத் தொழில் புரிகிறார்களோ, அந்தத் தொழிலால் அடையாளப்படுத்தப் படுகிறார்கள். பசுவிடமிருந்து பால் கறத்தல் அல்லது பால் பாக்கெட்களை விநியோகித்தல் என ஒருவரது தொழில் பால் சம்பந்தப்பட்டதெனில் அவர் “பால்காரர்” என அழைக்கப்படுகிறார். அது போல், பிச்சை எடுப்பதையே தொழிலாகக் கொண்டு வாழ்பவர்களைத்தான் “பிச்சைக்காரர்” என்கிறோம்.
படத்தின் நாயகனான அருள் செல்வக்குமார் பிச்சை எடுப்பதை தன் தொழிலாகக் கொள்பவரன்று. அவர் 48 நாட்கள் விரதம் போல் தன் அடையாளங்களைத் துறக்கிறார். அந்த 48 நாட்களுமே கூட பிச்சையெடுத்த பணத்தை முழுதும் தனக்கென வைத்துக் கொள்ளாமல், கோயில் உண்டியலில் போட்டு விட்டு, அன்றைய நாளை புதிதாகத் தொடங்குவார். மொட்டை அடிப்பது, மண் சோறு சாப்பிடுவது, ஆணிச் செருப்பு அணிதல், அரிவாள் மீது நடத்தல், தீச்சட்டி எடுத்தல், காவடி எடுத்தல், அலகு குத்துதல், பால்குடம் எடுத்தல், மார்பில் கத்தி போடுதல் போன்ற எண்ணற்ற நம்பிக்கைகளில் ஒன்றே பிச்சையெடுப்பதும். இந்து மதமும், பெளத்தமும் அதை ஒரு தர்மமாகவே போதிக்கிறது.
விஜய் ஆண்டனி சொல்வது போல், “எல்லோரும் பிச்சைக்காரர்கள். நான் வாய்ப்புப் பிச்சை கேட்டிருக்கேன். இப்போ படம் தயாரிக்க பணத்துக்காகப் பிச்சை கேட்டுக் கொண்டிருக்கேன்” என்பது தவறான வாதம். பிச்சை கிடைத்ததும், “ஆங்.. நெக்ஸ்ட்” எனப் போயிட்டே இருக்கலாம். “வாய்ப்பு” கிடைத்ததும் பொறுப்புகள் அதிகமாகிறது; திறமையானவர்களுக்கே வாய்ப்புக் கிடைக்கிறது. கையில் பணமிருந்து மனமிருந்தால் கையேந்தும் எவருக்கும் பிச்சை அளிக்கலாம். ஆனால், அப்படி எவருக்கும் வாய்ப்பையளித்து விட முடியாது.
வாய்ப்பும், பிச்சையும் ஒன்றன்று! படத்தில் வரும், “கொடுக்கிற ஒரு ரூவாக்கு நமக்கு ரெண்டு கண்ணும் இருக்கக்கூடாதுன்னு நினைப்பாங்க” என்ற வசனமே நிதர்சனம். வாய்ப்புகள் கண் (திறமை) இல்லாதவனுக்குப் போவதில்லை; ஒரு ரூபாய் தர குறைந்தபட்சம் நாலைந்து கண்ணாவது இருக்கிறவர்களைத் தேடியே வாய்ப்புத் தருகிறார்கள்.
மூட நம்பிக்கைகளுக்கு எதிராகவும், வியாபாரத்துக்கும் பங்கம் விளைவிக்காமல் கதையையும் தலைப்பையும் தேர்ந்தெடுக்கும் விஜய் ஆண்டனியின் திறமைக்கு, அவருக்கு மேலும் வாய்ப்புகள் குவியப் போவது திண்ணம்.
மே மாதம் வெளியாகவுள்ள அவரது ஷைத்தான் திரைப்படமும் வெற்றி பெற வாழ்த்துகள்.