
“இந்தப் படம் ஹிட்டாகும் என்பதில் எள்ளளவும் எனக்கோ, விஜய் ஆண்டனிக்கோ சந்தேகமில்லை. முதல் நாள் முதல் இந்த நொடி வரை அதில் ரொம்ப தெளிவா இருக்கேன். ஆனால், விநியோகஸ்தர்கள் படம் பார்க்கும் பொழுது மட்டும், ‘என்ன சொல்வாங்களோ?’ எனக் கொஞ்சம் டென்ஷனா இருந்தது. அவங்க ஸ்க்ரீனிங் முடிந்ததும், கே.ஆர்.ஃப்லிம்ஸ் சரவணன் முகத்தைப் பார்த்தேன். சிரிச்சுட்டு இருந்தார். டென்ஷன் போய் மீண்டும் நம்பிக்கை வந்துடுச்சு” என்றார் பிச்சைக்காரன் படத்தின் இயக்குநர் சசி.
“இந்தப் படத்துக்காக பல இடங்களில் நிஜமாகவே பிச்சை எடுத்தேன். என்னை பிச்சைக்காரர்கள் மத்தியில் உட்கார வைத்து விட்டு தூரத்தில் கேமராவில் இருந்து படம் பிடித்தார்கள். சில சமயம் நிஜ பிச்சைக்காரர்களை ஒன்று கூட்டி அவர்களுக்கு பணம் கொடுத்து நடிக்க வைத்தோம். அப்போது அவர்களின் கதைகளை எல்லாம் கேட்டேன். ரொம்ப கொடுமையாக இருந்தது.
மகனும் மருமகளும் துரத்தி விட்டதால் பிச்சை எடுக்க வந்த பெண்மணி, பிச்சை எடுத்து மகளை படிக்க வைக்கும் அப்பா, அந்தக் குடும்பத்துக்கு அவர்தான் சூப்பர் ஸ்டார். இப்படி பல நிகழ்வுகள். நாம் அவர்களை மிகச் சுலபமாக கை கால் இருக்கே உழைக்க வேண்டியதுதானே என்று திட்டுகிறோம் அல்லது புறக்கணித்து விட்டுப் போகிறோம்.
ஆனால் இன்னொரு வகையில் வாழ்வில் எல்லோருமே பிச்சைக்காரர்கள்தான் . பிச்சையாக என்ன கேட்கிறோம் என்பது மட்டுமே மாறுகிறது . நான் வாய்ப்புப் பிச்சை எடுத்து இருக்கிறேன். இப்போதும் பைனான்ஸ் பிச்சை எடுத்துக் கொண்டுதான் இருக்கிறேன் “ என்றார் விஜய் ஆண்டனி.
“சினிமாவில் நிறைய செண்ட்டிமெண்ட்ஸ் இருக்கு. பிசினஸ் பாதிக்கப்படுமோ என ‘பிச்சைக்காரன்’ டைட்டில் வேணாம்னு சொன்னேன். ஆனா விஜய் ஆண்டனி தான் பிடிவாதமாக, ‘இந்தத் தலைப்பு கதைக்குப் பொருந்தும்’ என தைரியமாக வச்சார். தமிழ் சினிமாவில் இப்படி தைரியமாக தலைப்பு வைக்க விஜய் ஆண்டனியால் மட்டுந்தான் முடியும். சலீம் என முஸ்லிம் பெயர் வேறு யாருக்குத் துணிவு வரும்?” எனக் கேட்டார் இயக்குநர் சசி.
விஜய் ஆண்டனியின் படமென்றால் அதில் ‘மக்காயலா.. மக்காயலா..’ போலொரு பாடல் கண்டிப்பாக இடம் பெறும். “நான் விஜய் ஆண்டனியிடம் அப்படியொரு பெப்பியான பாடல் வைக்கலாம்னு சொன்னேன். ஆனா அவர், இல்லை சார்.. இந்தக் கதைக்கு அது போல் பாட்டெல்லாம் தேவைப்படாது. என்ன தேவையோ அது மட்டும் போதுமெனச் சொல்லிட்டார்” என்றார் இயக்குநர் சசி.
கே.ஆர். ஃபிலிம்ஸ் சரவணன் மற்றும் கார்த்திக் இருவரும் பிச்சைக்காரன் படத்தின் மொத்த ஏரியாவையும் வாங்கி எல்லா ஏரியாக்களையும் விற்று முடித்து விட்டனர் . கூடவே ஸ்கைலார்க் பிலிம்ஸ் ஸ்ரீதர் வியாபாரத்தில் கை கோர்த்துள்ளார்.
“இது பிச்சைக்காரர்கள் பற்றிய படம் இல்லை. இது ஒரு பணக்காரன் பற்றிய கதை. அவன் பிச்சைக்காரனாக இருக்க வேண்டிய சூழல் வருது. படத்தை வாங்கிய எல்லாருக்கும் பிடித்தது போலவே டிக்கட் வாங்கிப் பார்க்க வரும் எல்லோருக்கும் படம் பிடிக்கும்” என்றார் இயக்குநர் சசி.