Shadow

பிரக்ஞை

மனிதன் இறந்தவுடன் தனது உணர்வை இழந்து விடுவதில்லை. மனிதனின் தன் முனைப்பு என்கிற “நான் இருக்கிறேன்” என்ற நினைவு (பிரக்ஞை) தொடர்ந்து இருந்து கொண்டேயிருக்கிறது. இப்படியாகத் தொடர்கின்ற பிரக்ஞையை ஆத்மா (Soul) என்றும் ஆவி (Spirit) என்றும் தன்முனைப்பு (Ego) என்றும் உளம் (Psyche) என்றும் உயிர் என்றும் மனசு என்றும் தத்துவஞானிகள் அவரவரின் சமயத்திருமறைகளின் கண்ணோக்கில் விவரிக்கிறார்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் “நான் இருக்கிறேன்” என்ற பிரக்ஞை இருக்கிறது. இங்கு ஐம்புலன்களின் தனித்தனி உணர்வுகளைக் குறிப்பிடவில்லை. நாம் நம்மைப்பற்றி நினைக்கும்பொழுது உடலின் மத்தியில் உணர்வுகளை ஒன்று திரட்டி இதுவே நான் என்று எண்ணவைக்கும் அந்தக் கூர்மையான ஆழமான பிரக்ஞையே பிறவிகள் தோறும் தொடர்ந்து வருகிறது.

நமது பிரக்ஞையானது ஜாக்கிரதம், சுவப்னம், சுகப்தி, துரியா என்ற நாலு நிலைகளில் வகைப்படுத்தப்படுகிறது. ஜாக்ரதம் என்பது நாம் விழித்திருக்கும் நிலை. சுவப்னம் என்பது பிரக்ஞையானது சூட்சும சரீரத்தில் இருந்து கொண்டு மூளைவழியாக கனவுகள் மூலம் தோற்றங்களை ஏற்படுத்தும் நிலை. சுகப்தி என்பது ஆழ்ந்த நித்திரை நிலை. பிரக்ஞையானது மனோசரீரத்தில் சஞ்சரிக்கும்நிலை. ஆனால் அதன் அனுபவங்கள் மூளையில் பிரதிபலிக்க இயலாதிருப்பது. துரியா என்பது பரவச நிலை. இந்த நிலையில் ஏற்படும் அனுபவங்கள் ஆன்மாவுக்கே உரியது தனித்துவ நிலை.

“நனவு நிலை, கனவுநிலை, ஆழ்ந்த தூக்கநிலை, துரித நிலை (அறிவு கடந்த நிலை) என்பனவே ஆத்மாவின் நான்கு பாதங்கள் அல்லது நிலைகள்” 

என்கிறது மாண்டூக்கியோபநிஷதம்.

பிரபஞ்சத்தில் ஸ்தூல சலனங்களும் (Vibration) சூட்சும சலனங்களும் இருக்கின்றன. சடஉலகில் ஸ்தூல சலனங்களை உணர்கிறோம். சூட்சும உலகில் பல தளநிலைகளில் இருந்து இன்னொரு நிலைக்கு நாம் நகரும் பொழுது காட்சிகளும் மாறி மாறி அமைகின்றன. சிலர் போதை வஸ்துக்களை உட்கொண்டு இச்சலனங்களை அனுபவித்து அந்நிலையில் காணும் காட்சிகளால் கவரப்படுவதால் தான், அப்பழக்கத்திலிருந்து விடுபட இயலாது பரிதவிக்கின்றனர். அந்த நிலை அவர்களுக்கு தனி உலகமாகத் தெரிவதும் இதனால் தான்.

ஸ்தூல சரீரத்தில் உயிர் தரிக்க காரணமாயிருந்த பிராணன் ஸ்தூல சரீரத்திலிருந்து விடுபட்டு அண்டத்தில் பிராணசக்தியுடன் கலந்து விடுகின்ற நிலையையும் – ஸ்தூல சரீரமும் ஆவி இரட்டை வடிவமம் அழிந்து பட்டுப்போகின்ற நிலையையும் கடந்தவுடன் – ஆத்மா சூட்சும சரீரத்தில் புகுந்து கொண்டு உலகில் சஞ்சரிக்க ஆரம்பிக்கிறது.

நமக்கு முன் இறந்தவர்கள் சென்றதும் நாம் செல்லப்போவதும் நமக்கு ஏற்கனவே பழக்கப்பட்ட இடம் தான். ஏனெனில் நாம் ஒவ்வொரு இரவும் நித்திரையின் போது அங்கு தான் சென்று திரும்புகிறோம். 

“உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு” குறள்

உறக்க நிலையில் என்ன நடந்தது என்ற நோக்காற்றல் நமக்கு மட்டுப்படுத்தப் பட்டிருக்கிறது. அதனால் தான் நாம் உறங்கும் கால அளவில் என்ன நிகழ்ந்தது என்று நம்மால் சொல்ல முடிவதில்லை. அந்த நேரத்தை “தூங்கினேன்” என்ற வசனத்தின் மூலம் சாதாரணமாக கடந்து செல்கிறோம். ஆனால் நாம் நித்திரையில் இருக்கும்பொழுது ஆத்மா சூட்சும சரீரத்தில் சஞ்சரிக்கிறது. நித்திரையில் இருந்து விழிப்படையும் பொழுது ஸ்தூல சரீரத்துக்கும் சூட்சும சரீரத்துக்கும் தொடர்பை ஏற்படுத்தும் காந்தக்கயிறு நம்மை உடனடியாக ஸ்தூல சரீரத்துக்கு இழுத்து வந்து விடுகிறது. ஆனால் நிரந்தரமாக ஸ்தூல உடலை விட்டுப் பிரியும் ஆத்மா கூடிய செறிமானமுள்ள அணுக்களைக்கொண்டு உருவாகிய சட உலகைவிட்டு மிக்ககுறைந்த செறிமானமுள்ள விசும்புருவான (Astral Matter) உலகில் ஆத்மா புகுந்து கொள்ளும் பொழுது பலவித மாறுதல்களுக்கு தன்னைப் பழக்கிக் கொள்ள வேண்டியிருக்கும்.

மனிதனில் பிரக்ஞையைப் பொறுத்தவரையில் இவ்வுலகில் இருந்த அதே நிலையிலேயே மனிதன் இருக்கிறான். இறக்கும்பொழுது எம்மிடம் இருந்த குணாதிசயங்கள், உணர்வுகள், எண்ணங்கள் யாவும் அப்படியே தொடர்கின்றன. அதன் காரணமாக சில சமங்களில் இறந்து போனவர் தான் இறந்துவிட்டதை ஏற்க முடியாத நிலையில் சில நாட்களுக்கு இருப்பதும் உண்டு. ஆனால் சூட்சும உலகின் வினோத இயல்புகளை இறந்தவர் மெல்ல மெல்ல உணர தொடங்குவார். அங்கு வலிகளும் களைப்பும் இருப்பதில்லை. உணவு தேவையில்லை. நித்திரை அவசியமில்லை. வீடுவாசல் இல்லை. போக்குவரத்து சாதனம் இல்லை. எல்லாம் மனோசக்தியாலேயே நடைபெறுகின்றன. மனோசக்தியின் அதிர்வுகளாலேயே ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளுகிறார்கள். சூட்சும உலகில் சஞ்சரிப்பது நித்திரையில் இருப்பது போலவும் கனவு உலகின் நிகழ்ச்சிகள் போலவும் தென்படும்.

ஸ்தூல சரிரத்தில் இருந்த பொழுது ஏனைய மனிதர்களின் சூட்சும சரீரங்களைக் காணமுடியாதவர், இறந்தபின் அவர்களின் சூட்சும சரிரங்களைக் காணமுடியும். மனிதர்களின் ஆசைகளுக்கும் சிந்தனைகளுக்கும் உருவங்கள் இருப்பதையும் அவர்களின் விருப்பு, வெறுப்பு, பொறாமை போன்ற உணர்வுகள் உருவங்களாக அவர்களுடைய சூட்சும சரீரங்களில் பிரதிபலிக்கப்படுவதையும் காணமுடியும். எனவே ஒரு நண்பர் அல்லது உறவினர் இவ்வுலகத்தில் இறந்தவருடன் எப்படியான தொடர்பு வைத்துக் கொண்டிருப்பவராயிருந்தாலும் அவரின் உண்மையான சிந்தனைகள் எத்தகையன என்பதை இறந்தவர் சூட்சும உலகில் இருந்து கொண்டு அவருடைய சூட்சும சரிரத்தைப் பார்த்து அறிந்து கொண்டு விடுவார்.

இறந்தவர்கள் நம்மை விட்டு வெகுதூரம் செல்லவில்லை. நமக்கு வெகு அருகிலேயே “வாழ்ந்து” கொண்டிருக்கிறார்கள். சாதாரண முறையில் நம்மால் அவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாவிட்டாலும் நமது சூட்சும சரீரம் இறந்தவரின் சூட்சும சரீரத்துடன் தொடர்பு கொள்ளவே முயற்சிக்கும்.

அது எப்படி? 

அடுத்துப் பார்க்கலாம்.

Leave a Reply