Shadow

புதுமைப் பித்தன்

மாயலோகத்தில்..

Pudhumai Pithanஇயற்பெயர் சொ. விருத்தாசலம். இவரது பெற்றோர்களின் பூர்வீகம் திருநெல்வேலி. ஆனால் இவர் பிறந்தது கடலூர் அருகே உள்ள திருப்பாதிரிப்புலியூர் எனும் ஊர். இவரது தந்தை அப்போது இந்த ஊரில் தாசில்தாராக வேலை பார்த்து வந்தார்.

ஆரம்பக் கல்வியை திண்டிவனம், செஞ்சி, கள்ளக்குறிச்சி போன்ற ஊர்களில் கற்றார். 1918இல் தகப்பனார் ஓய்வு பெற்றதும் சொந்த ஊரான திருநெல்வேலிக்குத் திரும்பினார்கள். படிப்பைத் தொடர்ந்தவர் 1931இல் திருநெல்வெலி இந்துக் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார். அதே ஆண்டு (1931) இவருக்குத் திருமணம் நடைபெற்றது. மனைவி கமலா திருவனந்தபுரத்தைச் சார்ந்தவர்.

புதுமைப்பித்தனின் ஆரம்பப் படைப்புகள் டி.எஸ். சொக்கலிங்கம் நடத்திய ‘காந்தி’ பத்திரிகையில் வெளிவந்தது. மொத்தம் மூன்று கட்டுரைகள். அதன் பின்னர் தான் 1934இல் ‘மணிக்கொடி’ இலக்கிய இதழில் “ஆற்றங்கரைப் பிள்ளையார்” என்கிற சிறுகதை முதன்முதல் பிரசுரம் கண்டது. தமிழ்ச் சிறுகதை மன்னனும் தோன்றினான்.

இக்கால கட்டத்தில் பி.எஸ். ராமையாவின் நட்பு கிடைத்தது. கதைகள் எழுத ஆரம்பித்த 1934இல் மாத்திரம் 43 சிறுகதைகள் எழுதியிருக்கிறார். இந்தக் காலத்தை, இலக்கியத்தில் இவர் தீவிரமாகப் பணியாற்றிய காலம் எனலாம்.

இவைகள் யாவும் மணிக்கொடி, காந்தி, சுதந்திரச் சங்கு, ஊழியன் போன்ற பத்திரிகைகளில் வெளிவந்திருந்தாலும், மணிக்கொடி இதழில்தான் பெருவாரியான கதைகள் வெளிவந்தன.

இவற்றின் முக்கியமான கதைகளாக பொன்னகரம், இது மிஷின்யுகம், சங்குத் தேவனின் தர்மம், சணப்பன் கோழி போன்ற கதைகளைக் கூறலாம். 1934-35இல் ‘ஊழியன்’ பத்திரிகையில் உதவி ஆசிரியராகவும் பணிபுரிந்திருக்கிறார்.

1935இல் எழுதிய மொத்த சிறுகதைகளின் எண்ணிக்கை 14, இதில் கல்யாணி, துன்பக்கேணி, சிற்பியின் நரகம் போன்றவை நிச்சயமாக உலகத்தரம் வாய்ந்தவை. இளம் தலைமுறையினர் தவறாமல் இக்கதைகளைப் படிக்க வேண்டும்.

1936இல் இரண்டே கதைகள் தான் எழுதியிருக்கிறார். இதில் ‘பிரம்மராக்ஷஸ்’ கதை மிகவும் முக்கியமான கதை. 1936க்கும் பிறகு 1937இலிருந்து 1948 வரையிலும் இவர் எழுதியுள்ள 38 சிறு கதைகளில் ஒருநாள் கழிந்தது, மனிதயந்திரம், நாசகாரக் கும்பல், மனக்குகை ஓவியங்கள், மகாமசானம், காஞ்சனை, சாப விமோசனம், கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும், கயிற்றரவு போன்ற கதைகள் தமிழ்ச் சிறுகதையை உலகத் தரத்திற்கு இட்டுச் சென்றன.

தமிழில் இதுவரை எழுதப்பட்ட காதல் கதைகளில் இருந்து ‘செல்லம்மா’ என்கிற கதைக்கு ஈடாக எதையும் சொல்ல முடியாது என சுந்தரராமசாமி பதிவு பண்ணியிருக்கிறார். இந்தக் கூற்றில் எள்ளளவும் தவறில்லை என்பதை இக்கதையைக் படிக்கும் தீவிர வாசகர்கள் அனைவரும் ஒப்புக் கொள்ளவே செய்வார்கள்.

1936 முதல் 1943 வரை ‘தினமணி’யில் உதவி ஆசிரியர் வேலை. இவரது முதல் சிறுகதைத் தொகுப்பை 1940இல் நவயுகப் பிரசுராலயம் வெளியிட்டது.

‘தினமணி’யிலிருந்து விலகிய புதுமைப்பித்தன் 1944இல் டி.எஸ். சொக்கலிங்கம் ஆசிரியராக இருந்த ‘தினசரி’ பத்திரிகையில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார்.

1950க்குப் பிறகு தோன்றிய தமிழின் மிகச் சிறந்த பல எழுத்தாளர்கள் புதுமைப்பித்தனின் பாதிப்பிலேயே எழுதியிருக்கிறார்கள் என்கிற கருத்து இலக்கிய உலகில் உண்டு.

இவரது பார்வை சினிமா உலகம் பக்கமும் சென்றிருக்கிறது. அதற்கு பொருளாதாரத் தேவையே மிகவும் முக்கிய காரணமாக இருக்க வேண்டும். ஜெமினியின் ஔவையார் படத்திற்கான பூர்வாங்க ஏற்பாட்டில் இவர் பணி இருந்திருக்கிறது. 1948இல் வெளிவந்த ‘காமவல்லி’ என்கிற திரைப்படத்தின் கதை – வசனம் புதுமைப்பித்தன். இப்படத்தில் நாகர்கோவில் மகாதேவன் – எஸ். வரலட்சுமி ஜோடி நடித்திருந்தனர்.

சிறைவாசம் அனுபவித்து வெளிவந்த எம்.கே. தியாகராஜபாகவதர் ‘ராஜ முக்தி’ என்கிற பெயரில் ஒரு திரைப்படம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார். அதன் படப்பிடிப்பு புனேயில் நடைபெற்றது. அங்கு குழுவினரோடு தங்கி அப்படத்தை எடுத்தார்கள். இப்படத்தின் கதை – வசன கர்த்தா என்கிற வகையில் புதுமைப்பித்தனும் புனே சென்றிருந்தார். அங்கிருக்கும்போது அவரது உடல்நிலை குன்றியது. காசநோய் தாக்கி அவதியுற்றார். 1948ஆம் ஆண்டு ஜூன் மாதம் காலமானார்.

இவரது அனைத்துச் சிறுகதைகளையும் உள்ளடக்கிய சிறுகதைத் தொகுப்பை காலச்சுவடு/நாகர்கோவில் பதிப்பகத்தார் சிறந்த முறையில் 2000 ஆண்டில் வெளியிட்டுள்ளனர்.

மிகுந்த பிரயாசையுடனும், பொறுப்புடனும் இதைத் தொகுத்த ஆ.இரா. வெங்கடாசலபதி பாராட்டுதல்களுக்குரியவர்.

இத்தொகுப்பில் புதுமைப்பித்தன் எழுதிய சிறு நாவல் ‘சிற்றன்னை’, மற்றும் பூர்த்தியாகாத புதினம் ‘அன்னையிட்ட தீ’ சேர்க்கப்பட்டிருக்கிறது.

‘சிற்றன்னை’ நாவலைத் தழுவி எடுக்கப்பட்டு மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம், மகேந்திரன் இயக்கத்தில் உருவான “உதிரிப்பூக்கள்”.

தமிழ்ச் சிறுகதைப் பரப்பில் அதற்கு முன்பே பலர் இருந்தாலும், புதுமைப்பித்தனின் இடத்தை எவரும் நிரப்ப முடியாது.

– கிருஷ்ணன் வெங்கடாசலம்