மருதீரனின் காதலியைக் கடத்தி விடுகின்றனர் வேதாளபுரத்தின் வீரர்கள். பலம் பொருந்திய வேதாளர்களிடமிருந்து மருதீரன் தன் காதலியை எப்படி மீட்கிறார் என்பதுதான் படத்தின் கதை.
மருதீரன், புலிவேந்தனும் என இரண்டு வேடங்களில் விஜய். விஜய்யின் வழக்கமான நடிப்பில் மருதீரனும், ‘மக்களுக்காக சந்தோஷமா சாவேன்’ என அடித் தொண்டையில் கோவத்தை அடக்கிப் பேசும் விஜய்யின் வித்தியாசமான (!?) நடிப்பில் புலிவேந்தனும் திரையில் தோன்றுகின்றனர். ஸ்ருதிஹாசன் மழலையில் கொஞ்சிப் பேசி ஆடவும், ஹன்சிகா ஆட மட்டுமென நேர்ந்து விடப்பட்டுள்ளனர். ஜலதரங்கனாக வரும் சுதீப் மட்டும் கிடைத்த சின்னஞ்சிறு வாய்ப்பைத் தவற விடாமல் தன் நடிப்பால் ஈர்க்கிறார். ஸ்ரீதேவியோ ஒப்புக்கு வில்லியாக்கப்பட்டுள்ளார்.
ஒரு நீள ஃபேன்டஸி படத்துக்கு முயற்சி செய்துள்ளார் சிம்புதேவன். வைரநல்லூர் கிராமம், வேதாளபுரக் கோட்டை, குள்ள மனிதர்கள், ஒற்றைக் கண் மனிதன் எனப் பார்த்துப் பார்த்து சிருஷ்டித்துள்ளார். தொழில்நுட்பத்தை லாவகமாக கையாண்டவர், கதையை விறுவிறுப்பாக்கத் தவறிவிட்டார். வசனங்கள் “ப்ப்பாஆஆ” எனச் சொல்லுமளவும், திரைக்கதை “ஆவ்வ்வ்” எனச் அலுக்குமளவு மிகுந்த சலிப்பை ஏற்படுத்துகின்றன. படத்தின் எந்தவொரு ஃப்ரேமிலும் பொருத்தி லயிக்க முடியவில்லை.
‘கவிதைன்னா எப்படியிருக்கணும் தெரியுமா?’ என்ற விஜய்யின் வசனத்தைக் கூடக் கஷ்டப்பட்டுப் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால், “கவிதை சொல்லியே ஆளை மயக்கிடுவீங்க போல.!” என ஸ்ருஹிஹாசன் சொல்லும்போது, ‘க்ர்ர்ர்’ ஆகிவிடுகிறது. ஏன் சிம்புதேவன் சார்? உங்களை நம்பி படத்துக்கு வருவது அவ்வளவு பெரிய குற்றமா!?
‘நான் தாங்ணா ஹீரோ. எப்படியும் பவழமல்லியைக் காப்பாத்திடுவேன். எதுக்குங்ணா வீணா டென்ஷனாகிட்டு’ என விஜய் கூலாக வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் ஜாலியாக டான்ஸ் ஆட ஆரம்பித்துவிடுகிறார். கதாபாத்திரங்களுக்கே இல்லாத சீரியஸ்னஸை பார்வையாளர்களுக்கு எப்படிக் கடத்த முடியும்? கோடாங்கியாக வரும் தம்பி இராமையா, விஜயிடம் கேட்கும் சந்தேகங்கள் எல்லாம் கதைக்கும், காமெடிக்கும் சற்றும் உதவாமல் எரிச்சல் ஏற்படுத்தும் ரகங்களாக உள்ளன. இவ்வளவு அசிரத்தையான ஒளிப்பதிவை வேறெந்தப் படத்திலும் கண்டிப்பாகப் பார்த்திருக்க முடியாது.
விஜய், சிம்புதேவன் என்ற எந்த எதிர்பார்ப்புமின்றி பார்க்கப்படும் பட்சத்தில் படம் ஏற்றயிறக்கமில்லா ஃப்லோவில் ஒரே மாதிரி பயணித்து சுபமாக முடிவதை ரசிக்க முடியும்.