சத்யா நாகராஜ், S.செல்லதுரை, சாமி.P.வெங்கட், பாலாமணி ஜெயபாலன் என நான்கு நண்பர்கள். குவைத்தில் வாழும் தமிழர்கள். ஒரு தொழில் தொடங்கும் யோசனையின் முடிவாக சினிமாவைத் தேர்ந்தெடுத்தனர். புதியவர்களுக்கும் இளைஞர்களுக்கும் வாய்ப்பு தரணும் என்ற முடிவுடன், “வரம் கிரியேஷன்ஸ்” என்னும் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினர். சென்னையில் இருக்கும் பழம்பெரும் இயக்குநரான ஏ.கே.வேலனின் மகன் A.K.V.கலைஞானியைத் தொடர்பு கொண்டு விஷயத்தைச் சொல்லியுள்ளனர்.
பின் படத்தில் பணி புரியும் ஒவ்வொருவரையும் சல்லடை போட்டு எடுத்துள்ளார்கள். உதாரணத்திற்கு 60 கதைகளை வாங்கி, அதை பலதரப்பட்ட பின்னணியுடையடவர்களுக்கு மின்னஞ்சல் செய்து, அந்த ரிசல்ட்டின் அடிப்படையில் “இருக்கு ஆனா இல்ல” படத்தின் இயக்குநர் கே.எம்.சரவணனைத் தேர்வு செய்துள்ளனர். 100 பேர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் நாயகி மனிஷா. ஐ.டி. துறையில் வேலை செய்யும் ஷமீரையும் அப்படித்தான் தேர்ந்தெடுத்துள்ளனர். ஷமீர்தான் படத்தின் இசையமைப்பாளர். ஒளிப்பதிவாளர் க்ரிஷ் A.சந்தரும், Y.G..மகேந்திரன் மட்டும் படத்தில் சீனியர் ஆட்கள்.
“புது தயாரிப்பாளர்களை மொட்டையடித்துவிடுவது நம்ம பழக்கம். அப்படி நடந்துடக்கூடாது என்பதுதான் என் முதல் குறிக்கோள்” என்றார் எக்ஸிக்யூட்டிவ் தயாரிப்பாளரான A.K.வேலன். “தமிழ்மீது பற்றுள்ளவர்கள் என தயாரிப்பாளர்களைப் புகழ்ந்த Y.G.மகேந்திரன், “இளைஞனான எனக்கு கிழவன் வேஷம் கொடுத்துட்டாங்க. அதுவும் விக்லாம் போட்டுப் பார்த்து ஸ்க்ரீனிங் டெஸ்ட் பண்ணிட்டுத்தான் எனக்கே இந்த ரோல் கொடுத்தாங்க. இந்த கமெட்மென்ட்தான் படத்தின் வெற்றிக்குக் காரணமாக இருக்கப் போகிறது” என்றார்.
“உழைப்பும் எதிர்பார்ப்பும் இருக்கு. ஆனா பயம் இல்லை” என்றார் படத்தைப் பற்றி நாயகிகளில் ஒருவரான ஈடன். நாயகனாக தான் பல போராட்டங்களைச் சந்தித்தாகச் சொன்ன விவன்த், ஜெயா டி.வி.யில் ஆன்கராகவும், ஆஹா எஃப்.எம்.மில் ஜாக்கியாகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. “படத்தில் பேய் உண்டு பயம் இல்லை” என்று படத்தைப் பற்றிச் சொன்ன இயக்குநர், நாயகன் விவன்த்தின் நடிப்பை மிகவும் சிலாகித்தார்.
படத்தில், ‘கொஞ்சம் நடிங்க பாஸ்’ எனும் ஆதித்யா சேனலின் நிகழ்ச்சித் தொகுப்பாளரான ஆதவன் முக்கியமான பாத்திரத்தில் நடிக்கிறார். படத்தில் கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது என்பது உறுதி.