Search

பைசா முக்கியம் – நடிகை ஆரா

Paisa Movie

பணத்தை கதைக் கருவாகக் கொண்டு உருவாகியுள்ள படம் பைசா. விஜயின் ‘தமிழன்’ திரைப்படத்தை இயக்கிய அப்துல் மஜீத் இத்திரைப்படத்தை இயக்க, பசங்க புகழ் ஸ்ரீராம், புதுமுகம் ஆரா ஆகியோர் முன்னணி கதாபாதிரங்களில் நடித்துள்ளனர். கான்பிடண்ட் பிலிம் கபே, KJR ஸ்டுடியோஸ் மற்றும் RK ட்ரீம் வேர்ல்ட் இந்தப் படத்தைத் தயாரிக்க கராத்தே கே.ஆனந்த் இணை தயாரிப்பு செய்துள்ளார். நடிகர்கள் நாசர், மதுசூதனன், மயில்சாமி, ராஜசிம்மன், செண்ட்ராயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. K.P. வேல்முருகனின் ஒளிப்பதிவும், J.V. இசையும் படத்திற்கு வலுவூட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமாவில் பைசாவை மையமாக வைத்துக் கொண்டு உருவான பாடல்கள் ஏராளம். பிரபு தேவாவின், ‘சென்னை பட்டினம் எல்லாம் கட்டணம்’, சிலம்பரசனின், ‘நோ மணி நோ ஹனி’, கருணாகரனின்,‘காசு பணம் துட்டு மணி’ என ஏகப்பட்ட பாடல்கள் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்திருக்கிறது. அந்த அளவிற்கு மனிதர்களைத் தன் பிடியில் வைத்திருக்கிறது பணம். அதையே முழு நீளப் படத்தின் கதையாக அமைந்துள்ளதே இப்படத்தின் சிறப்பு.

வெளியீட்டிற்குத் தயாராகிக் கொண்டிருக்கும் இந்தப் படத்தின் நடிகை ஆரா, “பைசா என்பது வாழ்க்கையின் அத்தியாவசிய தேவை தான்; ஆனால் அதுவே வாழ்க்கையாக மாறிவிடக் கூடாது. இது தான் எங்கள் படத்தின் ஒரு வரி கதை. இயக்குநர், கதாநாயகன், சக நடிகர்கள் என ஒட்டுமொத்த படக்குழுவினரும் திறமைக்குச் சான்றாக விளங்கியது மட்டுமில்லாமல் என் திறமைகளை மென்மேலும் வளர்த்துக் கொள்ள உதவினர். எதார்த்த வாழ்க்கையை மிக அழகாகத் திரையில் படைக்கும் வல்லமை படைத்தவர் இயக்குநர் அப்துல். ஆரம்பத்தில் நான் சிறிது தயங்கினாலும், அவருடைய நம்பிக்கையான பேச்சும், சாதிக்கும் எண்ணமும் என்னைப் பயத்தில் இருந்து முற்றிலும் வெளியே கொண்டு வந்துவிட்டது. ஓவ்வொரு காட்சியையும் நன்கு உணர்ந்து கொள்ள தேவையான கால அவகாசத்தைத் தன்னுடைய நடிகர்களுக்கு வழங்குவதே அவரின் சிறப்பம்சம். எனக்கு மட்டுமின்றி எங்கள் படக்குழுவில் உள்ள ஒவ்வொருவருக்கும் நல்லாசிரியராகத் திகழ்பவர் அப்துல். இது போல ஒரு திறமையான கூட்டணியில் நான் பணி புரிந்தது, எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியைத் தருகிறது” என்கிறார் அழகும் அறிவும் ஒருங்கே இணைந்த ஆரா.

சினிமாவில் பத்திரிக்கைத் தொடர்பாளராக சிறந்து விளங்கும் துரை பாண்டியின் மகளான ஆரா கூறுகையில், “எனக்கு நடிப்பின் மேல் ஆர்வம் வர காரணமாக இருந்தவர் எனது தந்தை தான். என்னுடைய இக்கட்டான நேரங்களில் எனக்கு உறுதுணையாக இருந்து ஆர்வம் ஊட்டிய அவருக்கு எனது நன்றிகளைச் சமர்பித்துக் கொள்கிறேன். மக்களின் ரசனைகளையும், எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்வதே ஒரு நடிகரின் முக்கியமான கடமை. அந்த வகையில் எனது பங்கு பெருமளவு இருக்கும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்” என்கிறார் ஆரா. சின்ன பட்ஜெட் படமாக இருந்தாலும், ரசிகர்களின் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்டு சென்ற ‘சாட்டை’, ‘கோலி சோடா’ மற்றும் ‘காக்கா முட்டை’ படங்களின் வரிசையில் இந்த ‘பைசா’ திரைப்படமும் இடம் பெறும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர்கள்:

>> ஸ்ரீராம்
>> நாசர்
>> ராஜசிம்மன்
>> செண்ட்ராயன்
>> மதுசூதனன்
>> ராம்ராஜ்
>> ஆரா
>> தீபிகா

பணிக்குழு:

>> தயாரிப்பு – அப்துல் மஜீத், ரகுநாதன் ராஜூ, கண்ணன் பாஸ்கர்
>> இணை தயாரிப்பு – கராத்தே கே.ஆனந்த்
>> இயக்கம் – அப்துல் மஜீத்
>> ஒளிப்பதிவு- வேல்முருகன்
>> இசை – ஜே.வி. (அறிமுகம்)
>> படத்தொகுப்பு – S.P.அஹமத்
>> பாடல்-நா.முத்துக்குமார்
>> நடனம் – பாபா பாஸ்கர்
>> மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா