
குப்பை பொறுக்கும் தொழிலாளியான முருகனுக்கு அடையாறு நதிக் கரையோரமாக 100 கோடி ரூபாய் கிடைக்கின்றது. அந்தப் பணம் அவனைப் படுத்தும் பாடு அல்லது அவனுக்குள் நேரும் அகப்போராட்டம் தான் படத்தின் கதை.
முதல்முறையாகத் தனி நாயகனாக நடித்துள்ளார் ஸ்ரீராம். ஒரு நாளைக்கு 100 ரூபாய் கூடச் சம்பாதிக்க முடியாமல் போகிறதென வருந்தும் முருகனுக்கு, சாலையில் கிடைக்கும் 3000 ரூபாய் பெரிதாகப் படவில்லை. ஆனால், 100 கோடியைப் பார்த்ததும் அவன் மனம் சபலமுறுகிறது. தனது பேன்ட்டின் கிழிசலை 1000 ரூபாய் தாள் கொண்டு அடைக்குமளவு போதை தலைக்கேறுகிறது. முருகனாக ஸ்ரீராம் நன்றாக நடித்துள்ளார். ஆனால், காதலோடு சிரிக்கும் பொழுதுதான் கொஞ்சம் பொழுதுதான் லேசாகத் தடுமாறுகிறார்.
டிப்பார்ட்மென்டல் ஸ்டோரில் பணி புரியும் வேணியாக அறிமுகமாகியுள்ளார் ஆரா. அவருக்கு எல்லாவிதமான ஆடையும் பொருந்துகிறது. முருகன், வேணிக்குள்ளான காதல் அத்தியாயம் மிக யதார்த்தமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. முதல் பாதியை இவர்கள் இருவருமே ரசிக்க வைக்கின்றனர். இரண்டாம் பாதியில் ஆராவிற்குப் பெரிதாக வேலையில்லை. நாயகனைத் திருத்தும் ஒரு காட்சியினைத் தவிர.!
வழக்கமானதொரு கொதிநிலை ரெளடியாக வருகிறார் ராஜசிம்மன். லிண்டா எனும் அசிஸ்டென்ட்டாக அவருடன் வலம் வரும் பாத்திரத்தில் தீபிகா நடித்துள்ளார். புகை பிடித்துக் கொண்டு பெரிய காரின் ஓட்டுநர் இருக்கையில் அசத்தலாக அறிமுகமாகிறார். ஆனால், அதன் பின் பெரிதாக அவர் மனதில் ஒட்டவில்லை. பெரும் தொழிலதிபர் அஜய் செல்லைய்யாவாக வரும் மதுசூதன் ராவின் பாத்திரமும் பெரிதாக மனதில் ஒட்டவில்லை.
வருமானத் துறை அதிகாரி சிவராஜாக வரும் நாசர் ‘தூய்மை இந்தியா’ பற்றி ஒரு காட்சியில் பேசிவிட்டுச் செல்கிறார். மணி எனும் பாத்திரத்தில் செண்ட்ராயன் நடித்துள்ளார். இவருக்கு மட்டும் தைரியமாக க்ளோஸ்-அப் ஷாட்களை வைத்துள்ளார் இயக்குநர். தனது பார்வைகளாலும், முக பாவனைகளாலும் தான் வரும் காட்சிகளைக் கலகலப்பாக்கி விடுகிறார். படம் நெடுக்கவே இவரை உபயோகித்து இருந்திருக்கலாம். எனினும், படம் நெடுகே வரும் கதாபாத்திரங்களும் கூட திரைக்கதையின் பலவீனத்தால் மனதில் பதிய மறுக்கின்றனர்.
கதையில் இருக்கும் வலு திரைக்கதையில் கொஞ்சம் கம்மிதான். வருமான வரித் துறை அதிகாரியாக நாசரை ஒரு காட்சியில் திணிக்கப் பட்டிருப்பதாலும், ‘அடுத்தவர் பொருள் மேல் ஆசைப்படுவரை எனக்குப் பிடிக்காது’ என்று ஒரு காட்சியில் நாயகி வலிந்து சொல்வதாலும், நாயகன் நல்லவன் என முதற்பாதியிலேயே அனைத்துக்கும் தனித்தனி காட்சி வைத்துச் சொல்லப்படுவதாலும் படத்தின் முடிவை யூகிக்க பார்வையாளர்களுக்கு அதிக சிரமம் இருக்கப் போவதில்லை. அதனாலேயே இரண்டாம் பாதியில், ஸ்ரீராம் பணத்தை வைத்துக் கொண்டு படும் அவஸ்தையை நீளமாகப் பதிவு செய்திருப்பது கொஞ்சம் பொறுமையைச் சோதிக்கிறது.
கோலி சோடா பாணியில் க்ளைமேக்ஸ் சண்டையை வடிவமைத்துள்ளார் ஸ்டன்ட் மாஸ்டர் கோட்டி. விஜய்யை வைத்து ‘தமிழன்’ படத்தை இயக்கிய இயக்குநர் அப்துல் மஜீத் தான் ‘பைசா’ படத்தின் இயக்குநரும் ஆவார். பணம் மனிதனை எப்படி அலைக்கழிக்கும் எனச் சொல்லியுள்ளார்.