Shadow

பொன்னர் சங்கர் விமர்சனம்

Ponnar Sankar

பொன்னர் சங்கர் – கலைஞரின் கைவண்ணத்தில் அண்ணன்மார் கதை.

கொங்கு நாட்டின் செவி வழி கதைகளால் உந்தப்பட்டு, அதைப் பற்றி மேலும் தேடிப் பிடித்துப் படித்து கலைஞர் அவர்களால் எழுதப்பட்ட பொன்னர் சங்கர் என்னும் வரலாற்று காவியம் இயக்குநர் தியாகராஜனால் திரைப்படமாக்கப்பட்டுள்ளது.

நிச்சயிக்கப்பட்ட மாந்தியப்பன் என்பவரை மறுத்து தன் மனதிற்கு உகந்த மணாளான அப்பாவி நெல்லியன் கோடனை மணக்கிறார் தாமரை நாச்சியார். அதனால் சினமுறும் தாமரையின் மூத்த சகோதரனான சின்னமலை கொழுந்து, தங்கையை வீட்டை விட்டு வெளியேற்றுகிறான். பொன்னி வளநாட்டை ஆளும் தாளையார் காளி மன்னன், தாமரையின் மைந்தர்களால் மரணம் ஏற்படும் என்ற ஆருடத்தை நம்பி பிறந்தவுடன் அக்குழந்தைகளை அழிக்க சதி திட்டமிடுகிறார். அச்சதித் திட்டத்தில் இருந்து இரட்டையர்களான அக்குழந்தைகள் எப்படி எவரால் தப்பித்து, வளர்ந்து தாளையார் காளியுடன் போரிட்டு வெல்கிறார்களா என்ற கேள்விக்கு பதிலுடன் படம் நிறைவுறுகிறது.

நாயகர்களாக இரு வேடங்களில் பிரஷாந்த். படத்தில் அவருக்கு அளிக்கப்பட்டிருக்கும் பிரதான வேலை தோள்களைத் தட்டியவாறே பறந்து பறந்து எதிரிகளை அடித்தல்; வாளைச் சுழற்றுதல்; ஈட்டி எறிதல்; அம்பு தொடுத்தல்; சரசமாடும் நாயகிகள் மேல் விழிகளைப் பொறுத்தியவாறு இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் பூனை- நடைப் போடுதல்.

மாயவர் என்னும் கிழவராக நாசர். அரசியல் சூதாட்டத்தில் அழையா விருந்தாளியாக புகுந்து நாயகர்களுக்கு நல்லது செய்ய நினைக்கும் பிரதான பாத்திரம். ’23ம் புலிகேசி’ படத்தில் போட்டிருந்த ஒப்பனையின் நீட்சியாக வேண் தாடி, கேசங்களோடு வருகிறார். முன்னதில் குடும்பத்தைப் பிரிப்பவராக, பின்னதில் சேர்ப்பவராக.

ராக்கி ஆசானாக ராஜ்கிரண். தன் குழந்தைகளின் உயிரை தியாகம் செய்து, தாமரை நாச்சியாரின் குழந்தைகளைக் காப்பாற்றி வளர்க்கிறார். குழந்தைகளை இழந்தோமோ என வருத்தத்தில் இறந்து விடும் மனைவியின் கல்லறையில் அமர்ந்து, தான் தியாகம்(!?) செய்ய காரணமாக இருந்தவர்களைப் பழி வாங்குவதாக சபதமேற்கிறார். சபதத்தை நிறைவேற்ற வளர்த்த கடாக்களை எதிரியின் மார்பில் ஏவுகிறார். பழி வாங்கும் வரை பொன்னரும், சங்கரும் பிரம்மச்சாரிகளாக இருக்க வேண்டும் என்பதும் சபதத்தில் அடக்கம்.

விரல்களைக் காற்றில் பிசைந்தவாறு, கண்களில் வஞ்சத்தைத் தேக்கி ஏதேனும் திட்டம் தீட்டியவாறே உள்ளார் மாந்தியப்பனாக வரும் பிரகாஷ்ராஜ். குழப்பமான கூட்டணியில் இருந்தவாறு நிறைய பேசி, கூட்டணி ஆள் ஒருவராலேயே கொல்லப்படுகிறார் தாமரையின் தந்தையான பெரியமலை கொழுந்துவாக வரும் விஜயகுமார். அவரது மகன் சின்னமலை கொழுந்துவாக பொன்வண்ணனும், அவரது மகன் வையம்பெருமாளாக ரியாஸ்கானும், சோழ பெருவேந்தனாக பிரபுவும் நடித்துள்ளனர். ராக்கி ஆசானின் மனைவி அழகு நாச்சியாராக சில நொடிகள் வந்து மறைகிறார் சீதா. கேட்பார் பேச்சைக் கேட்டு மதியிழந்து, அதற்கு வருந்தும் தாளையார் காளியாக வேடமேற்றுள்ளார் மாவீரர் நெப்போலியன்.

தாமரை நாச்சியாராக குஷ்பு. தனது திருமணத்திற்காக இலவசங்களை ஏழைகளுக்கு வாரி வழங்கும் காட்சியில் அறிமுகமாகும் தாமரை நாச்சியாரைப் பார்த்தத்தும் ‘திக்’ என அதிர நேர்ந்தாலும், காலம் வெகு வேகமாக உருண்டோடி வயிற்றில் பாலை வார்க்கிறது. தாமரை நாச்சியாரின் வீரத்தையும், தியாகத்தையும் சுற்றியுள்ள பாத்திரங்கள் புகழ்வர். அதைக் கேட்டு புன்னகைக்கும் அப்பாவி கனவர் நெல்லியன் கோடனாக ஜெயராம் வருகிறார்.

தாமரை நாச்சியாரின் மகள் அருக்காணி தங்கமாக சிநேகா ஆடி பாட திரையில் தோன்றுகிறார். ஆடி பாட மட்டுமில்லாமல் நாயகிகளான பூஜா சோப்ரா மற்றும் திவ்யா பரமேஸ்வரன் இதர கிளர்ச்சிகளுக்காகவும் திரையில் உதவியுள்ளனர். இவர்கள் ஒப்பந்தம் ஆகும் முன், ஐஸ்வர்யா ராய் மற்றும் தீபிகா படுகோனை பொன்னர் சங்கருக்கு நாயகிகளாக நடிக்க வைக்க முயன்றுள்ளது தயாரிப்பு நிர்வாகம்.

பழசிராஜா படத்தின் பின்னணி இசையில் பிரமிக்க வைத்த இளையராஜவை இப்படத்தில் உணர முடியவில்லை.

படம் முழுவதும் வரைவியல் தொழில்நுட்ப உபயோகம் விரவி காணப்படுகிறது. சண்டைக் காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகள், இவை இரண்டுமே படத்தில் பெரும்பான்மையான நேரத்தை எடுத்துக் கொள்கிறது. டி.ஆர்.க்கு சவால் விடும் வகையில் ஒரு பாடலிற்கு ‘செட்’ அமைத்துள்ளனர். யானைகள், விளக்கொலியில் மிளிரும் கோட்டை, வாத்தியக் கருவிகள், கேடயம் தாங்கிய வீரர்கள், காலாட் படை, குதிரைப் படை என தயாரிப்பாளர் தியாகராஜன் பிரம்மாண்டம் காட்டியுள்ளார். ஆனால் நாடக பாணி வசனங்கள், கோர்வையற்ற காட்சி மாறுதல்கள் என மிக த்ராபையான அசுவாரசிய திரைக்கதையால் இயக்குனர் தியாகராஜனின் உழைப்பு விழலுக்கு இறைத்த நீராகி விடுமோ என்ற ஐயத்தினைப் பார்ப்பவர்களுக்கு தோற்றுவிக்கலாம்.

 

Leave a Reply