Shadow

பொன்னியின் செல்வன் – நாடக அனுபவம்

மு.கு.: மேஜிக் லேண்டர்ன் தியேட்டரும், எஸ்.எஸ். இண்டர்நேஷ்னலும் இணைந்து நிகழ்த்தும் அற்புதமான 3½ மணி நேர ‘பொன்னியின் செல்வன்’ நாடகம், இன்று 25வது முறையாக (2014 – 2015) மேடையேற்றப்படுகிறது

குந்தவைபழுவூர் ராணி நந்தினிசுமார் 60 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட, ஐந்து பாகங்கள் கொண்ட ஒரு பெரும் சரித்திரப் புதினத்தை மூன்றரை மணி நேரத்திற்குச் சுருக்கி, அதனை மிக நேர்த்தியான நாடகமாக உருமாற்றியுள்ளனர். அரங்கை நிர்மாணித்த R.K.ஜெயவேலுவும், கலை இயக்குநர் தோட்டா தரணியும், உடைகளை வடிவமைத்து குந்தவையாகவும் நடித்த பிரீத்தி ஆர்த்ரேயாவும், மனோரதத்தில் நாம் பார்த்த சோழப் பேரரசுக்கு பங்கம் விளைவிக்காமல் கண் முன் கொண்டு வந்துள்ளனர். பூங்குழலியின் காதலர்களான கொள்ளிவாய்ப் பிசாசுகளையும்கூட மேடையேற்றி இருந்தனர். அதே போல், T.பாலசரவணனின் ஒளியமைப்பு நாடகத்துக்கு பெரும்பலமாக அமைந்தது. உதாரணம், கோடிக்கரையில் இருந்து இலங்கைக்கு வந்தியதேவனும் பூங்குழலியும் படகில் பயணிக்கும் காட்சியின் பொழுது போடப்பட்ட ‘லைட்’டிங்கிற்கு அரங்கில் கரகொலி எழுந்ததைச் சொல்லலாம். பொன்னியின் செல்வரைக் கொல்ல யானைப் பாகனொருவன் யானையோடு மேடைக்குள் நுழைந்தான். அதன் நெற்றி தெரிந்ததும், நிஜ யானையைக் கொண்டு வந்துவிட்டார்களோ என ஒரு கணம் அதிர்ந்துவிட்டேன் (நான் அமர்ந்திருந்த இடம் காரணமாக இருக்கலாம். மேடைக்கு இடப்புறம் என்பதால், திரையை விலக்கும்போதே யார் வருகிறார்கள் என தெரிந்துவிடும்). பின் யானைக்கு மனித கால்களைப் பார்த்த பின்தான் மனம் சமாதனம் அடைந்தது. ஆனால் சமாதானம் அடைய முடியாமல் உறுத்திய விஷயம், மூடு பல்லக்கினுள்ளே நந்தினியோ/மதுராந்தகச் சோழனோ அமர்ந்து செல்லாமல் நடந்து சென்றதுதான். கால் முளைத்த பல்லக்கு பார்க்க வேடிக்கையாக இருந்தது.

அறுபத்து நாலு போர்க் காயங்கள் பெற்ற அஜானுபாகுவானான பெரிய பழுவேட்டரையராக பேராசிரியர் மு.ராமசாமி நடித்துள்ளார். நந்தினியாக விறைப்புடன் நடித்திருக்கும் மீரா கிருஷ்ணமூர்த்தியை விட குள்ளமாக இருப்பதாலோ என்னவோ, பழுவேட்டரையராக அவரை உருவகிக்க சிரமமாக இருந்தது. ஆனால் இடைவேளைக்குப் பின், மதுரை ஆபத்துதவிகளின் சதி தெரிந்த பிறகு மு.ராமசாமி வெளிப்படுத்தும் பதைபதைப்பும், மன வேதனையும் பேராசிரியரை பழுவேட்டரையராகவே பார்க்க வைக்கிறது.

பொன்னியின் செல்வன் நாடகம்

பசுபதியை ஆதித்த கரிகாலனாகப் பார்க்கும் பாக்கியம் இவ்வருடம் நாடகம் பார்ப்பவர்களுக்கு இல்லை. ஆனால், இது பசுபதி தானோ என சந்தேகமுறும் அளவு அவரைப் போலவே உள்ள பிரபு மணி நடித்துள்ளார். அவரின் ஆகிருதி முன் சிற்றரசர்கள், உண்மையிலேயே சிறியவர்களாகவே தெரிகிறார்கள். ஆதித்த கரிகாலன் இப்படித்தான் இருந்திருப்பாரென நம்ப வைக்கும் நடை, உடை, தோரனை, ஏற்ற இறக்க வசன உச்சரிப்பென பிரபு மணி மேடையை தன் வசம் எடுத்துக் கொண்டார். ஆனால், நாடகத்தின் சண்டையும் நடனமும் நடிகர் பசுபதிதான் இயற்றியுள்ளார். பிரபு மணியும், பழனி முருகனும் சண்டைப் பயிற்சியில் உதவி செய்துள்ளனர்.

வந்தியதேவன்பழனி முருகன்பார்த்திபேந்திர பல்லவராக பழனி முருகன் நடித்துள்ளார். கிட்டத்தட்ட நாடகத்தின் நாயகன் (!?) போன்றவர் இவர். இவருக்கென பிரத்தியேகமாக நடனமும் சண்டையும் வைக்கப்பட்டுள்ளது. அதுவும் இரண்டு கைகளிலும் வாள்களைச் சுழற்றிக் கொண்டு இவர் செய்யும் சோலோ ஸ்டன்ட் காண அதி அற்புதமாக இருந்தது. கல்கியின் துணையின்றி கரகொலி பெற்றது இவர் மட்டும்தானென நினைக்கிறேன். வந்தியதேவன் மேடையில் நுழைய உள்ளான் எனத் தெரிய வந்ததுமே பலத்த கரகொலி எழத் தொடங்கிவிட்டது. அதே போல், பாடலற்ற பின்னணி இசைக்கு ரிச்-கேர்ள்ஸுடன் ஒரு க்ரூப்-டான்ஸும் இருக்கிறது பல்லவருக்கு (சோழ மக்களாக வரும் பெண்கள், 99% நேட்டிவிட்டி இல்லாமல் வெள்ளைத் தோலினராகவே இருக்கின்றனர்). பொன்னியின் செல்வருக்காக உணர்ச்சிப் பிழம்பாகக் கொதிக்கும் பார்த்திபேந்திரர், நந்தினியைப் பார்த்ததும் எப்படி ஸ்விட்ச்-ஆஃப் ஆகிறாரென்ற பார்க்கும் ஆவல் எழுந்தது. இடைவெளிக்குப் பின், கட்டியங்காரனான நல்லன் பல்லவர் மயங்கிட்டாரென எளிமையாக முடித்து விடுகிறார். ஏனோ பல்லவரை விட்டுக் கொடுக்க, புதினத்தை நாடகமாக்கிய குமரவேலுக்கு விருப்பமில்லை போலும். பார்த்திபேந்திரர் வந்தியதேவனை கைது செய்யத் தயங்கும்போது, ‘கைது செய்துதான் ஆக வேண்டும்’ என ஆழ்வார்க்கடியான் நம்பி பல்லவருக்கே கட்டளையிடுகிறான். ஙே!

ஆழ்வார்க்கடியான் நம்பி

திருமால் தூணிலும் துரும்பிலும் இருப்பாரோ என்னவோ, ஆனால் திருமலையப்பனாகிய ஆழ்வார்க்கடியான் நம்பி தோட்டா தரணி அமைத்திருந்த செட்டின் இண்டு இடுக்கு மூலை முடுக்கிலெல்லாம் ஒற்றேவல் புரிய மறைந்து கொண்டிருக்கிறார். அவரது முகத்தில் மந்தகாசப் புன்னகை நிரந்திரமாகக் குடிக் கொண்டுள்ளது. வீர வைஷ்ணவராக, ஹன்ஸ் கெளஷிக் பிரமாதப்படுத்தியுள்ளார். ஆனால், திருப்பதியில் லட்டுக்கு பதில் ஜாங்கிரி போடுகிறார்கள் என காதில் பூ சுற்றுவது போல, ஆழ்வார்க்கடியான் நெற்றியில் தோளிலும் திருநீறு பூசி குடந்தை ஜோதிடராக அமர வைத்து விடுகின்றனர். ‘என்ன ஓய்ய்.. எங்கே நாமம்? வேடதாரியாக இருப்பீர் போல!’ என வந்தியதேவன் கேட்டதற்கு, இளைய பிராட்டியார் குந்தவை சொல்லித்தான் அப்படிச் செய்தேன் என்கிறார். கடம்பூர் மணிமேகலையைச் சேர்க்காமல் விட்டதுபோல், குடந்தை ஜோதிடரையும் விட்டிருக்கலாம். அல்லது வேறு எவரையேனும் ஜோதிடராக அமர்த்தியிருக்கலாம்.

குமரவேல்நாடகமாக்கியதோடு மட்டுமின்றி ரவிதாசனாகவும் மேடையேறியுள்ளார் குமரவேல் (இயக்குநர் ராதாமோகன் படங்களில் நடிப்பவர்). தலைமுடியால் மலையை இழுக்கும் வேலையில் அவர் தேறி விட்டதாகவே தோன்றுகிறது. கல்கியின் புதினம் வாசித்திராதவர்களுக்கு, கதையைப் புரிந்து கொள்வதில் சற்றே குழப்பம் இருக்கத்தான் செய்கிறது; வாசித்தவர்களுக்கோ கொண்டாட்டம்தான். இயக்குநர் பிரவின் அசத்தியுள்ளார். சிறு பிழையின்றி, இத்தனை கதாப்பாத்திரங்களை ஒருங்கிணைத்து, இந்த நேர்த்தியின் பின்னாலிருக்கும் உழைப்பு மலைக்க வைக்கிறது. நான்கு மணி நேரம் அவர்களால் உங்களைக் கட்டிப் போடமுடிகிறதென்றால், உண்மையிலேயே மேஜிக் லேண்டர்ன் தியேட்டர்ஸ் செய்யும் மேஜிக்தான் அது என்பதில் சந்தேகமில்லை. தயாரித்து வழங்கும் எஸ்.எஸ்.இண்டர்நேஷ்னலுக்குப் பிரத்தியேக நன்றிகளும் பாராட்டுகளும்.

பி.கு.: ஜூலை 3 ஆம் தேதி தொடங்கிய நாடகம் 12 ஆம் தேதி வரை தினம் சென்னை மியூசிக் கதெமியில் அரங்கேற்றப்படுகிறது. வாய்ப்புள்ளவர்கள் தவறவிடக் கூடாத பொன்னான அனுபவம.