Shadow

போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 4

போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 3

போதி தர்மரைக் காண சீன மாமன்னர் வூ விழைகிறார். செருப்பு கூட வாங்க முடியாத அளவு வறுமையில் உள்ளவர்களா இந்தியப் பிக்குகள் என வியந்து போதி தர்மருக்கு ஓர் இணை செருப்பினை அளிக்கின்றனர். போதி தர்மர் அரண்மனை நோக்கி செல்கிறார்.

போதி தர்மரும், மாமன்னரும் எதிர் எதிரே அமர்ந்து உள்ளனர். சுவரில் புத்தரின் படம் பெரிதாக வரையப்பட்டுள்ளது. காற்று மெலிதாக வீச, கூரையில் தொங்க விடப்பட்டிருக்கும் மணிகள் ஒலிக்கிறது. மாமன்னர் புன்னகைத்தவாறு ஒலிக்கும் மணியைப் பார்க்கிறார்.

“காற்று மணிகளை ஒலிக்கச் செய்கிறது.”

“மாட்சிமைப் பொருந்திய மன்னரின் மனம் அமைதியற்று உள்ளது என நினைக்கிறேன்” என்கிறார் போதி தர்மர்.

“நீங்கள் சொல்வது சரி தான். உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.”

“தாங்கள் பெளத்தத்தைத் தழுவிய மாமன்னர் என ரொம்ப காலத்திற்கு முன்பே கேள்விப்பட்டுள்ளேன். அதனாலேயே பெளத்தத்தைப் போதிக்க இங்கே வந்துள்ளேன்.”

“நீங்கள் சரியான நேரத்தில் தான் வந்துள்ளீர்கள். நான் அரியணையில் அமர்ந்த காலம் முதல்.. ஏராளமான புத்தர் சிலைகளையும் கோயில்களையும் கட்டியுள்ளேன்; பெளத்த சூத்திரங்களை அச்சிட்டுள்ளேன்; பிக்குகளுக்கு தாராளமாய் தானம் வழங்குகிறேன். இவை யாவும் எனது புண்ணியக் கணக்குகளில் சேரும் அல்லவா!?” என்று மன்னர் பெருமிதத்துடன் கேள்வி கேட்கிறார்.

“சேராது.”

மன்னனின் முகம் அதிர்ச்சியில் சுருங்குகிறது.

“புண்ணியங்கள் நிழல் போல. இருப்பது போல் தோன்றுமே தவிர உண்மையில் இருப்பதில்லை” என்கிறார் போதி தர்மர்.

“என்னச் செய்கைகள் நமக்குப் புண்ணியங்கள் அளிக்கும்?”

“தூய மனம் உடையவர்களுக்கும், அக ஒளி ஒளி பெற்றவர்களுக்குமே புண்ணியம் கிட்டும். ஆனால் அத்தகைய புண்ணியத்தைப் பெறுவது அரிதானது.”

“உலகில் புத்தர் உள்ளாரா!?”

“இல்லை.”

போதி தர்மரின் பதில்களால் அதிருப்தியுறும் மன்னர், ஏளனமாக புன்னகைத்துக் கொண்டே, “பிக்குவாக இருப்பதால்.. உங்களுக்கு நீங்கள் யார் என்று தெரிந்திருக்கும் அல்லவா!?” என்று கேட்கிறார்.

“எனக்குத் தெரியாது” என மறுக்கிறார் போதி தர்மர்.

பற்களைக் கடித்துக் கொண்டு, “நம் இருவருக்கும் இடையில் ஒத்துப் போகும் விஷயங்கள் எதுவும் இல்லை” என்று அருவருப்புடன் கூறி விட்டு, “யாரங்கே.. விருந்தாளிக்கு வாசலுக்கான வழியைக் காட்டவும்” என்று மன்னர் எழுந்து சென்று விடுகிறார்.

போதி தர்மரின் பதில்கள் மன்னரின் மனநிலையையே பிரதிபலித்தது. மன்னர் தான் செய்தவைகளைப் பெருமையுடன் கூறி, போதி தர்மரிடமிருந்து அதற்குரிய பாராட்டுதல்களையும், அங்கீகாரத்தையும் எதிர்பார்த்தார். மன்னன் மக்களுக்கு நலம் பேணுவதில் அக்கறை செலுத்த வேண்டுமே அன்றி கோயில்கள் கட்டி புண்ணியங்கள் பெற்று வருவதாக பெருமிதம் அடையக் கூடாது. தூய மனதுடன் காரியங்கள் இயற்றாமல் மன்னன் வெறுமனே பகட்டிற்காகவும், புகழுக்காவும் இயங்கியதை போதி தர்மர் சுட்டிக் காட்ட முயன்றார். புத்தரின் இருப்பைப் பற்றி ஐயமாக கேள்வி எழுப்பிய மன்னருக்கு போதி தர்மர் எதிர்மறையாக பதிலுரைத்தார். மனதிற்குள் புத்தர் (கடவுள்) வீற்றுள்ளாரா இல்லையா என்பது நம்பிக்கைப் பொறுத்தது. அவநம்பிக்கைக் கொண்டவர்களைத் திருப்தியடைய செய்வது போதி தர்மரின் வேலை அன்று.

அரண்மனையில் இருந்து வெளியேறிய போதி தர்மர் வடக்கு திசை நோக்கி நடக்கின்றார். வழியில் ஒரு நதி குறுக்கிடுகின்றது. நதியைக் கடக்க தோணி ஒன்றுள்ளது. மக்கள் அதில் ஏறுகின்றனர். ஆனால் போதி தர்மரும் அத்தோணியில் ஏறுவதை அவர்கள் விரும்பவில்லை.

“இந்தியர்கள் மிகவும் அருவருக்கத் தக்கவர்கள். உண்பதற்கு கைகளைப் பயன்படுத்துகின்றனர். மலம் கழித்த பின்னர் கைகளைப் பயன்படுத்து சுத்தம் செய்கின்றனர்.” (படத்தின் ஆங்கில சப்-டைட்டில்களில் இப்படியொரு வசனம் வருகிறது.  தர்க்கப்படி அக்கால சீனர்கள்.. குறிப்பாக கிராமத்தில் வாழும் சாமான்ய மனிதர்களுக்கு இந்தியர்களைப் பற்றி இத்தகைய அபிப்ராயம் இருந்திருக்க வாய்ப்பே இல்லை. ம்ம்…)

போதி தர்மரை மட்டும் விட்டு விட்டு தோணியில் அனைவரும் செல்கின்றனர். போதி தர்மர் அமைதியாக கரையில் அமர்ந்து கண்களை மூடி தியானத்தில் அமர்கிறார். திடீரென கண்களைத் திறக்கும் போதி தர்மர் துள்ளி நதியில் பாய்கிறார். நதியில் மிதக்கும் ஒரு நாணலின் மீது காலை ஊன்றி அந்தரத்தில் பாய்கிறார். மக்கள் அதிசயிக்கின்றனர். மீண்டும் நாணலில் காலை ஊன்றி பாய்ந்து, நதியில் விழுந்து மூழ்கி தத்தளித்துக் கொண்டிருக்கும் தோணி இயக்குபவரின் மகளைக் காப்பாற்றி பத்திரமாக மறுகரைக்கு கொண்டு விடுகிறார்.

‘யாங்ட்ஜி நதியை (Yangtze River)’ நாணல் கொண்டு பயணித்ததாக போதி தர்மர் பற்றியக் குறிப்புகள் பலவற்றில் காணக் கிடைக்கின்றன. சீனாவின் மிக நீளமான ஆறு (உலகளவில் மூன்றாவது நீள நதி) என்பதோடு மட்டுமல்லாமல் வட மற்றும் தென் சீனாவைப் பிரிக்கும் எல்லைக் கோடாகவும் இருந்து வந்துள்ளது.

காட்டில் கிடக்கும் மரக் கிளைகள் ஒன்றை ஊன்றுக் கோலாக பயன்படுத்த சேகரித்து சுத்தம் செய்துக் கொண்டிருக்கிறார் போதி தர்மர். அவர் கையில் அம்பு அடிபட்ட பறவை ஒன்று விழுகிறது.

‘இவளின் முன் ஜென்ம வாழ்க்கை இவளை இன்று பறவையாக மாற்றி உள்ளது. விளைவுகள் மற்றும் சூழல்களால்.. அம்பால் அட்பட்டு துன்புற நேர்ந்தது. உன்னைக் காப்பாற்றுகிறேன். அடுத்து மனித பிறவி எடுத்து வாழ்க்கையைக் கற்றுக் கொள்’ என எண்ணியவாறே பறவைக்கு முதலுதவி செய்து பறக்க விடுகிறார்.

அடிபட்ட பறவையைத் தேடி வேடன் அங்கே வருகிறான்.

“விலங்குகளையா தேடுகிறாய்!?” என போதி தர்மர் கேட்கிறார்.

“ஆமாம்” என கூறிக் கொண்டே பறவையைத் தேடிக் கொண்டே இருக்கிறான்.

“ஓர் அம்பால் எத்தனை விலங்கை தைப்பாய்!?”

“ஒன்று” என சொல்லிக் கொண்டே நிமிர்ந்து, “அதிர்ஷ்டம் இருந்தால் இரண்டு” என்று சிரிக்கிறான் வேடன்.

“இரண்டு? ஓர் அம்பில் இரண்டு!?” என்று கேட்டு விட்டு, “எனக்கு அதிர்ஷ்டம் இருந்தால் கர்ப்பமான மிருகமொன்றை அடிப்பேன்” என்கிறார் போதி தர்மர்.

“ஆகா.. அப்ப இரண்டிற்கும் மேல்” என்று குதூகலிக்கிறான் வேடன்.

“நான் ஒன்றைக் கொன்றால்.. நான் கொல்லும் அந்த ஒன்று ஆயிரம் உயிர்களைக் காப்பாற்றும்” என்கிறார் போதி தர்மர்.

“என்ன அது!?”

“நீ தான்.”

“நானா!?” என்று யோசித்து விட்டு, “நான் கொல்லலன்னா கூட நிறைய வேடர்கள் இங்க இருக்காங்களே!!” என்று கேட்கிறான் வேடன்.

“சுவையான உணவிற்கு பதிலாக இரத்தமும், வலியும். அவைகள் வலியை உணர்த்தாது. இரண்டும் இடம் மாறி விட்டால், யார் தன்னைத் தானே கத்தியால் வெட்டிக் கொள்வார்கள்” என கேட்டுக் கொண்டே சென்று விடுகிறார் போதி தர்மர்.

பெளத்தம் மறுபிறவியில் நம்பிக்கைக் கொண்டது. இந்தப் பிறவியில் செய்யப்படும் கர்மாக்களுக்கு அடுத்தப் பிறவியில் விளைவுகளை அனுபவிக்கிறோம். ‘இப்பிறவியில் பறவையைக் கொன்றால், அடுத்தப் பிறவியில் நீ பறவையாக பிறந்து கொல்லப்படுவாய். அதாவது உன்னை நீயே கொன்றுக் கொள்கிறாய்’ என்ற அர்த்தத்தில் வேடனிடம் போதி தர்மன் இயம்பி விட்டு செல்கிறார்.

Yangtze River


Leave a Reply