“ஞான ஒளி தான் மிகுந்த மதிப்பு மிக்கதென நினைக்கிறேன்” என்கிறார் போதி தாரா.
“ஞான ஒளி என்றால் என்ன?”
“ஞான ஒளி நுண்ணறிவைத் தரும். நுண்ணறிவு நன்மை, தீமைகளைப் பிரித்துப் பார்க்க உதவும்.”
போதி தாராவின் பதில்களால் திருப்தியுறும் ப்ரஜ்ன தாரா அரண்மனையை விட்டு கிளம்புகிறார். அவரை தடுத்து விருந்துண்ண அழைத்துச் செல்கிறார் போதி தாரா. சாப்பிடாமல் சிந்தித்துக் கொண்டிருக்கும் போதி தாராவைப் பார்த்து, “சிந்தித்தல் சோறு போடாது” என உண்ணத் தொடங்கி ஜென்னின் பால பாடத்தை ப்ரஜ்ன தாரா இனிதே தொடங்குகிறார். ப்ரஜ்ன தாரா சைவ உணவை மட்டுமே சாப்பிடுவதைக் கேள்வி எழுப்பும் போதி தாரா, “வானத்தைப் பார்த்தவாறு முதுகு கொண்ட எந்த உயிரினத்தையும் மனிதன் சாப்பிடலாம்” என்று வாதாடுகிறார். கூன் முதுகு கொண்ட வேலைக்காரனைப் பார்த்து, “இவனையும் சாப்பிடுவாயா?” என கேள்வி எழுப்பி விட்டு சென்று விடுகிறார். ப்ரஜ்ன தாரா விட்டுச் செல்லும் ஓலையைப் பிரித்துப் படிக்கிறார் போதி தாரா.
“பிறக்கும் முன் நான் யார்? பிறந்த பின் நான் யார்” என்று அவ்வோலையில் இருக்கிறது.‘காதறுந்த ஊசியும் வாராது காண் கடைவழிக்கே!’ என்ற குறிப்பு எப்படிப் பட்டினத்தாரை லெளகீக வாழ்க்கையில் இருந்து விடுபட வைத்ததோ அவ்வாறே ப்ரஜ்ன தாராவின் குறிப்பும் போதி தாராவிடம் வேலை செய்யத் தொடங்குகிறது. ‘நான் யார்!?’ என்ற கேள்வி போதி தர்மருள் எதிரொலித்த வண்ணம் உள்ளது. போதி தாராவின் தந்தை இறந்ததும் அவரது மூத்த சகோதரன் கிரீடத்தை கையில் ஏந்தியவாறு போதி தர்மரைத் தேட, போதி தர்மர் ப்ரஜன தாராவைத் தேடி ஜோல்னா பையை மாட்டிக் கோண்டு கிளம்பி விடுகிறார் (அக்காலத்தில் ஜோல்னா பை இருந்ததா என்பதெல்லாம் தேவையில்லாத ஆராய்ச்சி).
போதி தாராவும், மற்றொருவரும் ப்ரஜ்ன தாராவின் முன் வணங்குகின்றனர்.
“உன்னை யார் துறவியாக சொன்னது!?” என்று ப்ரஜ்ன தாரா கேட்கிறார்.
“என் குரு” என்கிறார் மற்றொருவர். உடனே அவர் தலையில் தட்டும் ப்ரஜ்ன தாரா, “நீயாக முடிவு எடுக்க மாட்டியா?” என கேட்டு விட்டு, “இப்ப சொல்லு?” என்று மீண்டும் கேட்கிறார்.
“நான் சுயமா தான் துறவியாக நினைக்கிறேன்.”
உடனே அவர் தலையில் தட்டும் ப்ரஜ்ன தாரா, “நீ உன் குருவை அவமதிக்கிற!! எப்படி நீயாக முடிவெடுப்ப?” என கேட்டு விட்டு, “இப்ப சொல்லு?” என்று மீண்டும் கேட்கிறார். என்னப் பதில் சொல்வது என்று தெரியாமல் திகைப்பவரிடம், “நீ பார்க்க அப்பாவியாவும், அறிவுள்ளவனாவும் இருக்கிறாய். உன்னை என் சீடனாக ஏற்கிறேன்” என போதி தாராவிடம் செல்கிறார்.
“நீ ஏன் துறவியாகணுங்கிற முடிவுக்கு வந்த!?”
போதி தாரா பதிலளிக்காமல் மெளனமாக இருப்பதைப் பார்த்து, “நீ ஊமை இல்லை. ஏன் நீ பேச மாட்டேங்கிற!!” என்று ப்ரஜ்ன தாரா கேட்கிறார்.
“பெளத்தத்தினை கற்றுக் கொள்ள என் மனம் எவ்வளவு விழைகிறது என வார்த்தைகளால் சொல்ல இயலாது. அதனால் தான் மெளனமாக இருக்கிறேன்.”
“சரி. உன் மனம் பெளத்தம் கற்பதிற்கு தயாராக இருப்பதால்.. உன் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ள வலுவானதொரு குடிலை அமைத்துக் கொள்” என்கிறார் ப்ரஜ்ன தாரா.
நதி தீரத்தில் குடில் அமைக்க மறு கரையிலிருந்து பொருட்களைக் கொணர்கிறார் போதி தாரா. குடில் தயாராகி விடுகிறது. எவரோ வழிப்போக்கர் இருவரின் சண்டையில் குடில் உடைபடுகிறது. போதி தாரா மீண்டும் குடிலை முதலில் இருந்து கட்டுகிறார். அன்றிரவு வரும் புயலில் மீண்டும் குடில் அழிகிறது. எத்தகைய புயலாலும் தகர்ந்து விடாத அளவு மீண்டும் குடிலை நிர்மாணிக்கிறார். குடில் முழுமை அடைந்ததும், குடிலை சுற்றி வருகிறார் போதி தாரா. திடீரென ஏதோ தோன்றியவராக குடிலை இடித்து தரை மட்டமாக்குகிறார்.
ப்ரஜ்ன தாராவுடன் வரும் சீடன் ஒருவன், “ஏன் கட்டிய குடிலை இடித்தாய்!?” என்று பதறுகிறான்.
“நான் மிகுந்த முட்டாளாய் இருந்து உள்ளேன். குடிலைக் கட்டி முடிக்க அதிக நேரம் எடுத்துக் கொண்டேன்” என்கிறார் போதி தாரா.
“என்ன.. இந்த இடிபாடுகளை குடில் என்கிறாயா!?” என்று பதற்றத்துடனே வினவுகிறான் சீடன்.
“ஆமாம். ஆனால் குடில் கட்டப்படவில்லை. கண்டுபிடிக்கப்பட்டது. மனம் தான் அந்தக் குடில்” என்கிறார் போதி தாரா.
போதி தாராவை மடத்திற்கு அழைத்துச் சென்று தலைமுடிகளை மழிக்கின்றார் ப்ரஜ்ன தாரா. நெற்றியில் இருந்து முடிகளை நீக்கியவாறு கத்தி பின்னந்தலை நோக்கிச் செல்கிறது.
“முதல் மழிப்பில்.. அனைத்து உலகியல் ஆசைகளில் இருந்தும் விடு படு. இரண்டாது மழிப்பில்.. சத்தியத்தின் கொள்கைகளைக் கற்பேன் என உறுதி எடு. மூன்றாவது மழிப்பில்.. அனைத்து உயிரினங்களையும் காப்பேன் என உறுதி எடு” என போதி தாரா மொட்டை அடிக்கப்படுகிறார்.
மொட்டையடிக்கப்பட்ட போதி தாராவிற்கு ‘போதி தர்மர்’ என பெயர் சூட்டி, “67 ஆண்டுகளுக்குப் பிறகு, நான் இறந்த பின், நீ சீனா செல்” என்கிறார் ப்ரஜ்ன தாரா.
– இனி சீனாவில்.