Shadow

போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 7

போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 6

ஒன்பது வருடங்களாக குகையில் ஆடாமல் அசையாமல் உண்ணாமல் தியானத்தில் அமர்ந்து இருக்கும் போதி தர்மரின் புகழ் பரவுகிறது. மக்கள் சாரை சாரையாக ஷவோலின் மடத்திற்குப் படையெடுத்து காணிக்கைகளை சிரத்தையாக ஷவோலின் மடத்தில் செலுத்துகின்றனர். போதி தர்மர் தன் சீடனாக சன் க்வாங்கை ஏற்றுக் கொண்ட அதே வேளையில் ஷவோலின் மடத்தைக் கொள்ளையடிக்க கொள்ளையர்கள் வருகின்றனர். தடுக்க வரும் இளம் பிக்குக்களைத் தாக்குகின்றனர். அரவத்தைக் கேட்டு எழுந்து வரும் தலைமை குரு திருடர்களைப் பார்த்து, “இந்தப் புனிதமான இடத்தில் சண்டையிடக் கூடாது. புத்தருக்கு மரியாதை செலுத்த வேண்டும்” என்கிறார்.

திருடர்களின் தலைவர் கேலியாக பிக்குக்களைப் பார்த்து சிரிக்கிறார். தலைமை குரு மண்டியிட்டு திருடர்களின் தலைவர் நிற்கும் திசை நோக்கி வணங்குகிறார். மற்ற பிக்குகளும் வணங்குகின்றனர். திருடர்களின் பின்னால் போதி தர்மர் நின்றுக் கொண்டிருக்கிறார். திருடர்களின் தலைவர் போதி தர்மரைத் தாக்க முனைகிறார். தலைவருடன் சக திருடர்களும் இணைந்துக் கொள்கின்றனர். திருடர்களின் அடிகள் தன் மேல் விழாமல் நகர்ந்து தன்னை தற்காத்துக் கொள்கிறாரே அன்றி போதி தர்மர் எவரையும் திருப்பி தாக்கவில்லை. சோர்வுறும் திருடர்கள் போதி தர்மரைக் கண்டு பயப்படுகின்றனர். கோபப்படும் திருடர்களின் தலைவர் அம்புகளை போதி தர்மர் மீது எய்துகிறார். அனைத்து அம்புகளையும் விரல்களாலேயே அநாயாசமாய் தட்டி விடுகிறார்.

திருடர்களின் தலைவன் அம்பின் முனையை நெருப்பில் காட்டி, நெருப்பு அம்பினை போதி தர்மர் மீது எய்துகிறார். போதி தர்மர் தியானத்தில் அமர்வது போல் அமர்ந்துக் கண்களை மூடிக் கொள்கிறார். போதி தர்மரின் வயிற்றில் அம்பு சொருகுகிறது. கண்களை ஒரு முறை திறந்து பார்த்து விட்டு மீண்டும் மூடிக் கொள்கிறார். திருடர்களின் தலைவர் திடுக்கிடுகிறார். அதற்குள் மற்ற திருடர்கள் நெருப்பு அம்புகளை போதி தர்மர் மீது பாய்ச்சுகின்றனர். எரிந்துக் கொண்டிருக்கும் போதி தர்மரைச் சுற்றி புத்த பிக்குகள் அமர்ந்துக் கொள்கின்றனர். திருடர்களின் தலைவர் கையில் இருக்கும் வில் நழுவுகிறது. ஷவோலின் மடத்தின் தலைமை குரு திருடர்களின் தலைவனிடம் சென்று பண மூட்டையைத் தந்து எடுத்துக் கொள்ள சொல்கிறார். அடிப்பட்டவர் போல் நின்றுக் கொண்டிருக்கும் திருடர்களின் தலைவர் வருத்தத்துடன் திரும்பி நடக்கிறார். அப்பொழுது மடத்தின் பிரார்த்தனைக் கூடத்தில் இருந்து சத்தம் கேட்கிறது. பிக்குக்களும், அவர்களின் பின்னால் திருடர்களும் ஓடிச் சென்று பார்க்கின்றனர். போதி தர்மர் அங்கே புத்தர் சிலை முன் அமர்ந்துள்ளார். பிக்குக்களும், திருடர்களும் மண்டியிடுகின்றனர்.

போதி தர்மர் அவர்களை நோக்கி, “நீங்கள் மிகவும் பலவீனமாக உள்ளீர்கள். நான் விடைப் பெறும் முன், உங்கள் உடல்களை எப்படி வலுப்படுத்த வேண்டும் என்று கற்றுத் தருகிறேன். குங் ஃபூவால் உங்கள் உடல் உறுதிப் பெறும். நமது அன்றாட வாழ்வு அகத்தினோடு இணைக்கப்பட்டுள்ளது. நிறைய கற்றுக் கொள்ள வேண்டுமெனில், நிறைய கவனிக்க வேண்டும். ஒவ்வொரு அசைவிலும் ஜென் உள்ளது” என்று கூறி விட்டு பிக்குக்களுக்கு தற்காப்புக் கலையைப் பயிற்றுவிக்கிறார்.

சின் சிங் மடம். வெண் தாடி போதி தர்மர், “நான் இந்தியாவிற்கு விரைவில் சென்று விடுவேன். தாங்கள் இதுவரை என்னத் தெரிந்துக் கொண்டீர்கள் என்று சொல்லுங்கள்” என அவர் முன் எழுந்து நிற்கும் சீடர்களைப் பார்த்து கேட்கிறார்.

“எழுத்துக்களில் காணப்படுவது பெளத்தத்தின் சுருக்கமே. நாம் எழுத்துக்களுக்குள் சிறைப்பட்டு விடக் கூடாது. அதே சமயம் நாம் அவற்றைத் தாண்டியும் சென்று விடக் கூடாது” என்கிறார் முதலாமவர்.

“நீ இன்னும் முதல் நிலையில் தான் இருக்கிறாய்.”

“நாம் புத்தரைக் கண்டு அக ஒளி ஒருமுறைப் பெற்று விட்டால், மீண்டும் அவரைக் காண வேண்டிய அவசியமில்லை” என்கிறார் இரண்டவதாய் பேசும் பெண் சீடர்.

“நீ பரவாயில்லை. பாதி நிலையில் உள்ளாய்.”

“நிலம், நீர், நெருப்பு, ஆகாயம் நான்கும் பூரணமற்றது. பார்த்தல், கேட்டல், நுகர்தல், உணர்தல் ஆகிவையும் நிச்சயமற்றது” என்கிறார் மூன்றாமவரான திருடர்களின் தலைவர்.

“நீ உயர்ந்த நிலையை அடைந்து விட்டாய்” என்று சொல்லி விட்டு போதி தர்மர், “நீ என்ன தெரிந்துக் கொண்டாய் வெய் ஹூ?” என்று கேட்கிறார் போதி தர்மர்.

வெய் ஹூ எழுந்து போதி தர்மர் முன் மண்டியிட்டு மூன்று முறை வணங்குகிறான். மற்ற மூன்று சீடர்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கின்றனர். ‘ஜென்’ போதனையற்ற ‘புத்தம்’. ஜென் குருக்கள் எதையும் யாருக்கும் போதிப்பதில்லை. தன்னை அறிய முற்படும் பிரத்தியேகமான தரிசன முறையே ஜென்.

போதி தர்மர் மென்மையாக புன்னகைத்து, “கடைசியில் உனக்காவது என் போதனைகள் புரிந்ததே!!” என்கிறார். பாதி நிலையில் உள்ள பெண் சீடரின் முகத்தைக் காட்டுகின்றனர். ‘கண்டவர்கள் விண்டதில்லை; விண்டவர்கள் கண்டதில்லை’ என நினைத்துக் கொள்கிறார் அப்பெண். போதி தர்மர் வெய் ஹூவிற்கு தன் பிச்சைப் பாத்திரத்தையும், உடையையும் அளித்து தன்னைத் தொடர்ந்து ஜென்னின் இரண்டாவது குருவாக இருப்பாய் என சொல்கிறார். பெளத்தத்தைப் பற்றிய நான்கு ஓலைகளையும் வெய் ஹூவிற்கு தருகிறார். பொய்யான பாவனைகளில் இருந்து மீட்டு பெளத்தத்தைக் கற்பிக்க வந்த தனது பணி நிறைவு பெற்றுவிட்டது என்றும்; தனக்கு பின் அயராது அப்பணியைத் தொடர வேண்டும் என்றும் வெய் ஹூவைக் கேட்டுக் கொள்கிறார் போதி தர்மர்.

போதி தர்மர் தனியாய் நடந்துச் செல்கிறார். போதி தர்மரை வழியில் ஒருவர் பார்க்கிறார்.

“தாங்கள் எங்கே செல்கிறீர்கள்!?”

“நான் மேற்கு நோக்கி செல்கிறேன்.”

“ஏன் தனியாக செல்கிறீர்கள்?”

“நீ ஊருக்குப் போனதும் தெரிந்துக் கொள்வாய்” என்று கூறி கொண்டே போதி தர்மர் செல்கிறார். அவரது கையில் உள்ள ஊன்றுக்கோலில் ஒரே ஒரு காலணியை மட்டும் தொங்க விட்டிருப்பதை அதிசயமாக பார்க்கிறார் போதி தர்மரை இடை மறுத்தவர். போதி தர்மரை வழியில் பார்த்தேன் என ஊரிற்குச் சென்றதும் சொல்கிறார். அவர் இறந்து மூன்று மாதங்கள் ஆகிறதே என யாரும் அவர் சொல்வதை நம்ப மறுக்கின்றனர். போதி தர்மரது கல்லறையைத் திறந்து பார்க்கின்றனர். அதனுள் ஒரே ஒரு காலணி மட்டும் இருக்கிறது.

படம் முற்றும்.

‘நான் மேற்கு நோக்கி செல்கிறேன்’ என்று படத்தில் வசனம் வருகிறது. அவரைப் பற்றிய குறிப்புகள் சிலவற்றில் வேறு மாதிரியும் காணக்கிடைக்கின்றன. அதில் ஒன்று, ‘நான் இந்தியாவிற்குச் செல்கிறேன்’ என்பது. அது படத்திலேயே சீடர்களைச் சோதித்தறியும் காட்சிகளில் சொல்லப்படுகிறது. மற்றொன்று, ‘நான் வீட்டிற்குச் செல்கிறேன்’ என்பதாகும்.

போதி தர்மர் தியானத்தில் அமர்ந்ததாக நம்பப்படும் குகை சீனாவின் முக்கியமான சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக பாவிக்கப்படுகிறது.

Leave a Reply