Shadow

ப்ரெடேட்டர்ஸ்

திடீரென வானத்தில் இருந்து மயக்கமுற்ற மனிதர்கள் தரை நோக்கி வீசப்படுகின்றனர். தரை தட்டும் முன் விழிப்படைவர்கள் அவசர அவசரமாக ‘பாராச்சூட்’டினை இயக்கி காட்டினுள் இறங்குகின்றனர். அவர்கள் மொத்தம் 8 பேர். அந்த காட்டில் இருந்து வெளியேற ஏதேனும் வழி உள்ளதா என தேடி மலை உச்சியினை அடைகின்றனர். அங்கு அவர்கள் காணும் காட்சி அவர்களை உறைய வைக்கிறது.

அவர்கள் வெறொரு கிரகத்தில் உள்ளனர். விசித்திர மிருகக் கூட்டம் ஒன்றால் தாக்கப்படுகின்றனர். அந்த கிரகத்தில் வேட்டையாடப் படுவதற்காக வரவழைக்கப் பட்டிருப்பதை உணர்கின்றனர். ஒருவர் பின் ஒருவராக இறக்க நாயகன் நாயகி மட்டும் உயிருடன் மிஞ்சும் பாரம்பரிய ‘ஹாலிவுட் படம். வேற்று கிரகம், ப்ரெடேட்டர்ஸ், ஸ்பேஸ் ஷிப் என்ற வார்த்தைகள் எல்லாம் வருவதால் ‘சையின்ஸ்- ஃபிக்ஷன் பிரிவில் இப்படம் அடக்கும்.

ப்ரெடேட்டர்ஸ் முற்றும்.

நாயகன், நாயகியை தவிர்த்து மீதமுள்ள ஆறு பேர் யார் என்று பார்ப்போம். வேட்டையாடப்படும் அந்நிய கிரகத்தில் நடக்கும் முதல் பலி போதைப்பொருள் கடத்தும் மெக்சிகோ நாட்டுக்காரன். அவன் அமெரிக்காவிற்கு குடைச்சல் தரும் ‘லாஸ் ஜெட்டாஸ்’ என்னும் உலகளாவிய போதைப் பொருள் கடத்தும் நிறுவனத்தைச் சேர்ந்தவன். இரண்டாவதை இறப்பது ஆஃப்ரிக்க நாடான ‘சியாரா லியோன்‘னின் புரட்சி அமைப்பான ரஃப்-பை சேர்ந்த ஒரு கறுப்பினன். அடுத்து ரஷ்ய பிரத்யேக படையில் போரிட்டுக் கொண்டிருக்கும் போர் வீரன். இந்த பாத்திரத்தில் நடித்தவர் ஒரு ரஷ்யரே என்பது குறிப்பிடத்தக்கது. ‘ஒரு அமெரிக்க படத்தில் ஒரு ரஷ்யனை நல்லவனாக காட்டியிருப்பது இதுவே முதல் முறை’ என அவர் வியந்துள்ளார். அந்தோ பரிதாபம்.. நல்லவனாக இருந்தாலும் ரஷ்யன் இறந்து தான் ஆக வேண்டும் என்பதே அமெரிக்க தர்மம் போலும்.

மூன்றாவதாக உயிரினை தியாகம் செய்வது ஓர் அமெரிக்க குற்றவாளி. மரண தண்டனைக்காக காத்திருக்கும் அவன் ப்ரெடேட்டரின் கிரகத்தில் வீசப்படுகிறான். இறந்து போகும் கறுப்பினனுக்காக கண்ணீர் சிந்தும் அளவு நல்லவனும் கூட. நான்காவதாக ப்ரெடேட்டருடன் நேருக்கு நேர் மோதி ப்ரெடேட்டரைக் கொன்று வீர மரணம் அடைவது ஒரு ஜப்பானியன். அவன் ஜப்பானின் மாஃபியா குழுவான ‘யகுசா’வை சேர்ந்தவன். கடைசியாக நாயகியை கொல்லப் பார்க்கும் ஒரு மருத்துவன். அவன் பூமியில் ஒரு ‘சைக்கோ’ கொலைக்காரனாம். ‘நானும் உங்களில் ஒருத்தவன் தான்’ என இறக்கும் முன் ப்ரெடேட்டரிடம் சொல்கிறான்.

ப்ரெடேட்டர்சின் வேட்டைக்களமாக இருக்கும் கிரகத்தினை நரகம் ஆகக் கொள்ளலாம். அங்குக் கொல்லப்படுவர்கள் அனைவரும் அமெரிக்க நீதி தேவதையின் தீர்ப்பிற்கே இரையாகிறார்கள். நாயகன் அமெரிக்க இராணுவத்தில் பணி புரிந்து விட்டு, பணத்திற்காக கலகம் செய்யும் ஆயுதமேந்தும் குழுவில் இருப்பவன். நீதி தேவதையின் பார்வையில் நாயகன் நல்லவனாக தான் இருப்பான். நாயகனுக்கு ஒரு துணை தேவை என்ற அமெரிக்க நீதி தேவதையின் கரிசனத்தால் இஸ்ரேல் நாட்டு தற்காப்புப் படையில் குறி தவறாது துப்பாகியால் சுடும் நிபுணத்துவம் பெற்ற நாயகியும் காப்பாற்றப் படுகிறாள்.

படத்தின் முடிவில் மேலும் சிலர் பாராஷுட்டில் இருந்து குதிக்கின்றனர். அவர்களில் யாரெல்லாம் அமெரிக்க நீதி தேவியின் அருள் பெற்றுள்ளனரோ அவர்கள் மட்டுமே பிழைப்பார்கள்.

இன வன்மம் தொடரும்.

– மணவாளன்