ஸ்ரீமந்த்துடு என்ற தெலுங்குப் படம் நேரடியாகத் தமிழிலும் வெளியாகிறது. மகேஷ் பாபுவின் முதல் நேரடி தமிழ்ப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. செல்வந்தன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.கே.ராஜராஜா தமிழ் வசனங்களை எழுதியுள்ளார். வெள்ளியன்று இப்படம் வெளிவரவுள்ளது.
“தமிழ் ரசிகர்களிடம் ஒரு விஷயம் பிடிக்கும். பெரிய ஹீரோ, சின்ன ஹீரோ, சின்ன படம், பெரியப் படம் என்றெல்லாம் பார்க்க மாட்டாங்க. நல்ல படங்களை ஒட வைப்பாங்க” என்றார் ஜெகபதி பாபு. மேலும், “நானும், மகேஷ் பாபுவும் சென்னையில் இருந்தவங்கதான். அங்க போய் நடிகர்கள் ஆயிட்டோம். அவருக்கு இந்தப் படத்தில் அப்பாவா நடிச்சிருக்கேன். ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்றார்.
“ஒரு எமோஷனலான சீன்ல ஹீரோஸ்லாம் பொதுவா ஆ..ஊ..ன்னு கத்துவாங்க. ஆனா மகேஷ் பாபு ஒரு லுக்தான் விடுவார். இதை எங்கிருந்து பிடிச்சார்னு தெரில? ஒருவேளை அவர் வொர்க் பண்ண ஆரம்பக் கால டைரக்டர்களிடம் ஐடியாவா அல்லது அவருக்குள் இருந்தே வந்ததான்னு தெரில?” என்றார் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்.
செல்வந்தன் இசை வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்த மகேஷ் பாபுவின் சென்னை வாழ் ரசிகர்கள், “அது அவருக்குள் இருந்துதான் வந்தது” என கே.எஸ்.ரவிக்குமாரை இடைமறித்தனர். “ஸ்டார்.. ஸ்டார்.. சூப்பர் ஸ்டார்.. “ என அவரது ரசிகர்கள் கூச்சலிட்டு விழாவையே அதகளப்படுத்திவிட்டனர்.
“மகேஷ் பாபு ஸ்க்ரீன்ல எப்படி இருக்கார் பாருன்னு ரவிட்ட சொல்லிட்டு இருப்பேன். ஒக்கடு படத்தில், அந்தப் பொண்ணைக் கூட்டிட்டுப் போறப்ப ஒரு பெட்டிக்கடையில் சிகரெட் வாங்கிப் பிடிக்கிற சீன் வரும். எனக்கு அவ்ளோ பிடிச்சுப் போச்சு. நான் குணசேகருக்கு (ஓக்கடு இயக்குநர்) ஃபோன் பண்ணி, அந்த ஒரு சீன் போதுமய்யா சொன்னேன். மகேஷ் பாபுவை அவ்ளோ பிடிச்சுப் போச்சு. அவருக்கு அப்பாவாக என் ஹீரோ ஜெகபதி பாபுவை எப்படி கொரட்டாலா சிவா நடிக்க வச்சார்னு தெரில. மதியோட கேமிரா கண்ணுல ஒத்திக்கலாம் போலன்னு இருக்கு. இந்தப் படம் ஹிட்டாகி, மகேஷ் பாபு நிறைய தமிழ்ப் படங்கள் செய்யணும்” என வாழ்த்தினார் படத்தொகுப்பாளர் மோகன்.
“ஊரிலிருந்து நிறைய எடுத்திருக்கீங்க; திரும்பிக் கொடுத்துடுங்க என்ற ஒரு வரிதான் படத்தின் கதை. ரொம்ப நல்லா பண்ணியிருக்கோம். மகேஷ் பாபு சார், அந்த டையலாகை ஒரு வார்னிங் டோனோடு சொல்றப்ப படம் அடுத்த லெவலுக்குப் போயிடுச்சு. படம் கண்டிப்பா எல்லோரையும் இம்ப்ரஸ் செய்யும்” என்றார் ஒளிப்பதிவாளர் மதி.
“இந்தப் படத்தை, ஒரே சமயத்தில் தமிழிலும் எடுத்து வெளியிடலாம் என ஐடியா கொடுத்தது கேமிரா மேன் மதிதான். அவருக்கு மிகவும் நன்றி. ஒரு நல்ல படத்தை எப்பவும் தமிழ் ஆடியன்ஸ் ஏத்துப்பாங்க. செல்வந்தன் ஒரு நல்ல படம்” என்றார் மகேஷ் பாபு.