Shadow

“மக்கள் நல்லவர்கள்!” – சேரன்

C2H

‘ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை’ படத்தினை சேரன் முடித்து எட்டு மாதங்கள் ஆகிறது. தன் படத்தை வெளியிட்டால், வாங்கிய கடனை அடைக்க முடியாத நிலை நிலுவுகிறது என்பதால் மாற்றுவழியை யோசித்தார். 2013இல், 298 படங்கள் தணிக்கைச் சானிறிதழ் பெற்றுள்ளன. அவற்றில் 155 படங்கள்தான் வெளியாகியுள்ளன. மீதி படங்களுக்கு திரையரங்கு கிடைக்கவில்லை. இதற்குத் தீர்வு காண, கடந்த எட்டு மாதமாக மக்களை அணுகி, திரையரங்கிற்கு வராமல் ஏன் திருட்டு டி.வி.டி.களையும், இணையத்தில் தரவிறக்கம் செய்தும் படம் பார்க்கிறார்கள் என ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அதை வீடியோவாகத் திரையிட்டனர். அனைவருக்குமே தெரிந்த பதிலைதான் ஆய்வில் சேரன் பெற்றுள்ளார். டிக்கெட் விலை ஏற்றம் மற்றும் தியேட்டர் கேண்டீனில் விற்கப்படும் பாப்-கார்ன், கோலா முதலியவைகளுக்கு ஆகும் செலவுதான் பிரதான குறையாக மக்களால் சொல்லப்படுகிறது. மல்ட்டிஃப்ளக்ஸில் நடக்கும் பார்க்கிங் கொள்ளையைப் பற்றி அவர் ஆய்வில் ஏதும் சொல்லப்படாதது ஆச்சரியமளிக்கிறது.

தனி நபருக்கு சுமார் 250 ரூபாயும், ஒரு குடும்பத்திற்கு 2000/- ரூபாயும் ஒரு படம் பார்க்க செலவாகிறது. அப்படி செலவு செய்து படம் பார்க்க வேண்டிய அவசியமென்ன என்று ஒருவர் கேள்வி எழுப்புகிறார். அந்தக் கேள்வி சேரனுக்கு நியாயமாகப் பட்டுள்ளது. மேலும் பர்மா பஜாரிலும் சேரனின் ஆய்வு நீண்டுள்ளது. நட்சத்திர நடிகரின் படங்கள் என்றால் சுமார் 70 லட்சம் டி.வி.டி.களும், தியேட்டரில் ஒருநாள் கூட ஓடாத படங்களின் டிவிடிகள் 20-25 லட்சமும் விற்கப்படுகின்றனவாம்.

“என் படம்லாம் எவ்ளோ போகும்?” என சேரன் கேட்டுள்ளார்.

“30ல இருந்து 35 லட்சம் வரை விற்கும்” எனச் சொல்லியுள்ளானர்.

“அடேயப்பா.. மாசம் 50,000 எனக்குத் தாங்களேன்ப்பா.”

“என்ன சார்.. மாசத்துக்கு 2 லட்சம் வரை நாங்களே சம்பாதிக்கிறோம். சினிமாவில் நீங்க எவ்ளோ சம்பாதிப்பீங்க?”

‘சினிமாவில் இருப்பவர் எல்லாம் பணக்காரர்களாக இருப்பாங்க என நினைச்சுட்டிருக்காங்க. இங்க இருக்க வீடே இல்லையாம்! யாரோ ஒரு சிலர் அப்படி இருக்கலாம். சினிமாவில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் அன்றாடங்காய்ச்சிகளாகத்தான் இருக்காங்க என இவங்களுக்குப் புரியமாட்டேங்குது’ என ஆதங்கப்பட்டார் சேரன்.

ஆய்வின் முடிவாக C2H எனும் நிறுவனத்தின் மூலமாக ஒரு திட்டத்தை வகுத்துள்ளார். வீட்டிற்கே நேரடியாக சினிமாவைக் கொண்டு செல்வதுதான் அந்தத் திட்டத்தின் பிரதான நோக்கம். இந்தத் திட்டத்தால்,  புது படங்களின் டி.வி.டி.யை மக்களின் வீட்டிற்கே சென்று விநியோக்கிக்கயுள்ளார். தமிழ்நாட்டில் 2 கோடி குடும்பங்கள் உள்ளது. அவற்றிற்குக் கொண்டு போய் சேர்க்க 7000 முகவர்களையும் பணியில் அமர்த்தியுள்ளார். மக்களால் வளர்ந்த சினிமாவினைக் கொண்டு மக்களுக்கே வேலைவாய்ப்பு தருவது இந்தத் திட்டத்தில் தான் பெற்ற மிகப் பெரிய மகிழ்ச்சி எனச் சிலாகித்தார் சேரன்.

திருட்டு டி.வி.டி.களால், திரைத்துறைக்கு ஏற்படும் பாதிப்பு 350 கோடியாம்.

“நான் காசு கொடுத்து வாங்குறேன். அதெப்படி திருட்டு டி.வி.டி. ஆகும்? நானென்ன திருடுகிறேனா?” என ஒரு சாமான்யனின் கேள்விதான் அந்த வீடியோவில் மிக முக்கியம். ஆக, இனி இடையில் பயனடையும் சமூக விரோதிகளிடமிருந்து(!?) (C2Hஇன் அறிக்கையிலிருந்து கையாளப்பட்டது) டி.வி.டி.களின் வருமானத்தைக் காப்பாற்றி, தயாரிப்பு நிறுவனத்திற்கு அளிப்பதுதான் C2H இன் முக்கியமான வேலை. திருட்டு டி.வி.டி.களும் வராமலும் C2H நிறுவனத்தினரே பார்த்துக் கொள்வார்கள்.

C2H“வெளியில் சொன்னா வெட்கக்கேடு. இருந்தாலும் உண்மையைச் சொல்றதுக்கு தைரியம் வேணும்ல. அன்னக்கொடி படத்திற்கு வந்த வருமானம் 30 லட்சம். அதிலும் 15 லட்சம் ஒருவரிடம் ஏமாந்துட்டேன். என்ன பாரதிராஜாவா ஏமாந்தான்னு கேட்பீங்க? நானும் மனுஷன்தானய்யா? தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயாரிடம் இன்னும் அந்த பணத்தைத் திருப்பி வாங்கித தரச் சொல்லிக் கேட்டுட்டு இருக்கேன். இதுல சிலர் பேசைக் கேட்டு, நான் பப்ளிசிட்டிக்காக ஒன்றரை கோடி செலவு பண்ணேன். அதையாவது பண்ணாம இருந்திருந்தா ஒன்றரை கோடி என்னிடமே இருந்திருக்கும்” என்றார் இயக்குநர் பாரதிராஜா.

“இத்தகைய பிரச்சனையில் இருந்து மீள அப்பா பாரதிராஜா மாதிரி பெரியவர்கள் கலந்து பேசி என்னப் பண்ணணும் எங்ககிட்ட சொன்னா போதும். ஏன்னா அவர் சொன்னா சாகவும் தயாரா இருக்கோம்; சாகடிக்கவும் தயாரா இருக்கோம்” என்றார் சீமான்.

“இதுல ஒரு L சேர்க்கணும். C2H முன்பே இருக்கு. திருட்டி டி.வி.டி., திருட்டுவிசிடி.காம் என்ற பெயரில் மக்களின் வீட்டுக்குப் போயிட்டுத்தான் இருக்கு. லீகல் சினிமா டூ ஹோம் என இந்தத் திட்டத்தைச் சொல்லணும்” என்றார் கே.எஸ்.ரவிக்குமார். சேரனின் திட்டத்திற்குத் துணையிருப்போமென இயக்குநர் அமீரும், தயாரிப்பாளர் கேயாரும் சொன்னார்கள். திட்டம் வெற்றியடைய வாழ்த்தினார் பாக்கியராஜ்.

இத்தகைய திட்டங்களுக்கு முன்னோடியான கமல் பேசுகையில், “தொழில்நுட்ப மாற்றத்துக்கு யாராக இருந்தாலும் உட்பட்டே ஆகவேண்டும். இதனால் திரையரங்குகள் பாதிக்கப்படும் என்ற வாதம் அர்த்தமற்றது. எப்படி வீட்டில் எத்தனை சாமி படங்கள் கேலண்டரில் இருந்தாலும், கோயிலுக்குப் போகிறார்களோ அப்படி மக்கள் திரையரங்கிற்கு கண்டிப்பாகச் செல்வார்கள். கூட்டத்துடன் சினிமா பார்ப்பது என்பது இங்கு கலாச்சாரம் ஆகிவிட்டது. அந்தக் குணம் மாறாது” என அழுத்தம் திருத்தமாகச் சொன்னார் (கால் உடைந்து விழாவிற்கு வர இயலாததால் வீடியோ அனுப்பியிருந்தார்).

“என் படத்தை திருட்டு டி.வி.டி.யில் பார்ப்பவர்கள், படம் பார்த்துவிட்டு பணத்தை என் முகவரிக்கு அனுப்புங்க என விலம்பரம் பண்ணியிருந்தேன். சொன்னா நம்பமாட்டீங்க. 50, 100 என சின்னது பெரிதுமாக 70,000 ரூபாயை மக்கள் அனுப்பியிருந்தனர். மக்கள் நல்லவர்கள். அவர்களிடம் கொண்டு போய் சேர்க்கும் இத்திட்டத்தைக் கண்டிப்பாக ஆதரித்து திரையுலகை வாழ வைப்பார்கள்” என்றார் இயக்குநர் சேரன்.

C2H

C2H நிறுவனத்தின் மற்ற பங்குதாரர்கள் சேரனின் மகள் நிவேதா பிரியதர்ஷினி, முத்து மற்றும் அன்பழகன் ஆகியோர் ஆவர்.