Search

மங்கம்மா சபதம் (1943)

(முக்கிய நடிகர்கள்: ரஞ்சன், வசுந்தரா தேவி, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், புளி மூட்டை ராமசாமி, குளத்து மணி)

Mangamma Sabatham

டைரக்டர் கே.சுப்ரமணியம் அவர்களின் மோஷன் பிக்சர்ஸ் ஸ்டுடியோ ஏலத்திற்கு வந்த போது அதை ஏலத்தில் எடுத்தவர் எஸ்.எஸ்.வாசன். தான் வாங்கிய நிறுவனத்திற்கு ‘ஜெமினி பிக்சர்ஸ் சர்க்யூட்’ எனப் பெயர் சூட்டினார். இங்கிருந்து முதலில் தயாரான படம் ‘மதன காமராஜன்’. எழுத்தாளரும் இலக்கியவாதியுமான பி.எஸ்.ராமையா கதை, வசனம். இது ஜெமினியின் சொந்தத் தயாரிப்பல்ல. அமிர்தம் டாக்கீஸ் என்கிற நிறுவனத்திற்காக ஜெமினி தயாரித்துக் கொடுத்த படம்.

ஜெமினியின் முத்திரையில் முதன் முதல் தயாரிக்கப்பட்டு வெளிவந்த படம் நந்தனார். 20.09.1942 இல் வெளியான இப்படத்தில் நந்தனாராக எம்.எம்.தண்டபாணி தேசிகர் பாடி, நடித்திருந்தார். அபரிதமான வெற்றியை அடைந்த இப்படத்தில் பாடல்கள் அனைத்தும் மாபெரும் வெற்றியைப் பெற்று ஒரு சிறந்த இசைச்சித்திரமாக அமைந்தது. எஸ்,ராஜேஸ்வர ராவ் – எம்.டி.பார்த்தசாரதி ஜோடி இசையமைத்த இப்படம் பாடல்களுக்காகவே பெரும் வெற்றியைப் பெற்றது. எஸ்.ராஜேஸ்வர ராவ் என்னும் அபூர்வமான இசையமைப்பாளர் பின்னர் ஜெமினியின் ஆஸ்தான இசையமைப்பாளராகப் பல திரைப்படங்களுக்கு இசையமைத்தார். இப்படத்தைத் தொடர்ந்து ஜெமினியிலிருந்து வெளிவந்த வெற்றிச் சித்திரம் தான் ‘மங்கம்மா சபதம்’.

கதாநாயகன் ரஞ்சன். ‘மங்கம்மா சபதம்’ வெளிவருவதற்கு முன் ‘ரிஷ்யசிருங்கர்’ (1941), பக்த நாரதர் (1942) போன்ற படங்களில் இவர் நடித்திருந்தாலும், ‘மங்கம்மா சபதம்’ திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய பெயரை ஏற்படுத்திக் கொடுத்தது.

ரஞ்சன் அந்தக் கால சகலகலா வல்லவர். பட்டதாரி. நாட்டியமாடுவதிலும் நல்ல தேர்ச்சி. அத்துடன் விமானம் ஓட்டவும் அக்காலத்திலேயே அறிந்து வைத்திருந்தார். மேலும், வாள் சண்டை (FENCING) போடுவதில் நிபுணர். கேப்டன் ரஞ்சன் என்று கூட சிலர் இவரை அழைப்பார்கள். உலகளாவிய ‘பிளாக் மேஜிக்’ (BLACK MAGIC) அமைப்பின் உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். ‘நாட்டியம்’ என்கிற பெயரில் ஒரு பத்திரிகை கூட நடத்தியிருக்கிறார். ஆனால், அக்கால தகுதிப்படி ஒரு கதாநாயகனுக்குரிய அழகு அவரிடம் இருந்ததில்லை. 1948 இல் வெளிவந்த ‘சந்திரலேகா’ படத்தில் வில்லனாக நடித்தவர். சசாங்கன் எனப் பெயர். அப்படத்தில் ஓர் இடத்தில் ‘சசாங்கன் முரடன்’ என்றொரு வசனம் பேசுவார். உண்மையிலேயே ஒரு முரடனைப் போன்ற தோற்றம் கொண்டவர் தான் ரஞ்சன்.

கதாநாயகி வசுந்தரா தேவி. நமக்கெல்லாம் நன்கு அறிமுகமான நடிகை வைஜயந்தி மாலாவின் தாயார். இவரும் இப்படத்திற்கு முன்பே ‘ரிஷ்யசிருங்கர்’ படத்தில் ரஞ்சனுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

சுருக்கமாக கதையைச் சொல்லிப் பார்க்கலாம். படத்தில் ரஞ்சன் ஒரு ராஜகுமாரன். ஒரு பெண்பித்தன். பெண்களுடனான நெருக்கம் அவனுக்கு விளையாட்டு போன்றது தான். பல பெண்களுடன் பழகி அவர்களுக்கு ‘டீ’ கொடுப்பான் (குடிக்கும் Tea அல்ல). அதாவது பெண்களுடன் பச்சைக்குதிரை தாண்டுதல், வில் அம்பால் குறி வைத்து அடித்தல் போன்ற பல விளையாட்டுக்களை விளையாடுவான். தோற்ற பெண்களை நிற்க வைத்து அவர்களது தலையை குனிய வைத்து, ‘டீ’ என்று கத்திக் கொண்டே ஓடி வந்து தனது தலையை அவர்களது தலையுடன் மோதுவான். இது அவனுக்கு ஒரு விளையாட்டு. அத்துடன் அவர்களுடன் உல்லாசமாகப் பொழுதைக் கழிப்பான்.

மங்கம்மா ஒரு சாதாரணக் குடும்பப் பெண். ஆனால் மிகவும் அழகி. புறாக்களிடம் அவளுக்கு ஒரு அபரிதமான ஈடுபாடு. பல புறாக்களை வளர்த்து வருகிறாள். ஒரு நாள் அவளிடமிருந்த புறா ஒன்று தப்பிப் பறந்து சென்று விடுகிறது. அதைத் தொடர்ந்து செல்கிறாள் மங்கம்மா. அப்புறா ஒரு தோட்டத்திற்குள் புகுந்து விடுகிறது. அது அரண்மனைக்குச் சொந்தமான தோட்டம். நுழைந்த புறா அரண்மனைக்குள்ளும் சென்று விடுகிறது. மங்கம்மா அங்கு வந்து சேருகிறாள்.

தோட்டக்காரன் அவளை விரட்டுகிறான். தந்திரமாக அவனிடமிருந்து தப்பி, புறா சென்ற அரண்மனைப் பக்கம் சென்று விடுகிறாள்.

அந்நேரம், வழக்கம் போல் பல பெண்களுடன் உல்லாசமாக விளையாடிக் கொண்டிருக்கிறான் ராஜகுமாரன். இப்படத்தில் ராஜகுமாரனது பெயர் சுகுமாரன்.

Tamil actor Ranjanஉள்ளே வந்து விட்ட மங்கம்மா, புறாவை அழைக்கும் விதமாகக் குரல் கொடுக்க அதை கவனித்து விட்ட ராஜகுமாரன் சுகுமாரன் அங்கே வருகிறான். அவளது அழகில் மயங்கி, அவளிடம் நைச்சியமாகப்ப் பேசி, அரண்மனையின் உள்ளே அழைத்துச் சென்று விடுகிறான். புறா சுகுமாரனின் படுக்கையில் அமர்ந்திருக்கிறது. அதைக் கையிலெடுத்த சுகுமாரன், அதைப் பெற்றுக் கொள்ளுமாறு மங்கம்மாவை தன்னருகிலே அழைக்கிறான். அருகிலே சென்றதும், அவளது கையைப் பிடித்து இழுத்து படுக்கையில் தள்ள, சாமர்த்தியமாக அவனிடமிருந்து தப்பி ஓடி விடுகிறாள் மங்கம்மா.

தனது நம்பிக்கைக்குரிய அடைப்பக்காரன் மூலம் அப்பெண் யாரென அறிந்து கொள்கிறான்.

கெட்ட நோக்கத்துடன், ஒரு நாள் மங்கம்மாவை அவளது களத்து மேட்டிலே எதிர்கொள்கிறான் சுகுமாரன். ‘டீ’ விளையாட அழைக்கிறான். அவ்விளையாட்டில் அவனை தந்திரமாக கீழே விழவைத்து விட்டு நகைக்கிறாள் மங்கம்மா. கோபமடைந்த இளவரசன் சுகுமாரன், அவளையே மணந்து, அவளைச் சிறையில் அடைத்து, வாழவிடாமல், சித்திரவதை செய்துவிடுவதாக மிரட்டுகிறான்.

அப்படி அவன் செய்ய நேரிட்டால், அவன் மூலமாகவே ஒரு மகனைப் பெற்று அவனைக் கொண்டு, சவுக்கால் அடிக்கவைத்துப் பழி வாங்குவேன் எனச் சபதமிடுகிறாள். இதுவே மங்கம்மா சபதம்.

தனது அதிகார பலத்தால் மங்கம்மாவைத் திருமணம் செய்து, தனிமையில், அவளை ஒரு மாளிகையில் வைத்து காவலும் போட்டு விடுகிறான். அவளால் எங்கும் வெளியே செல்ல முடியாதபடி தனிமைப்படுத்தப் படுகிறாள் மங்கம்மா.

ஆனால், அவளது தந்தை அவ்வப்போது அங்கு வந்து போக அனுமதியுண்டு. மங்கம்மாவின் ஆலோசனைப்படி, எவரும் அறியாமல் அடைத்து வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து தனது வீட்டிற்கு ஒரு சுரங்கப்பாதை அமைத்து விடுகிறார் மங்கம்மாவின் தந்தை. அவ்வழியாக அவள் அடிக்கடி வெளியே வந்து போகிறாள்.

தந்தை, சில கழைக்கூத்தாடிகளின் உதவியை நாடி, மங்கம்மாவை அக்கூட்டத்தில் ஒருவர் போல் உருமாற்றி, புதிய பொலிவுடன், புதிய எவருக்கும் புரியாத மொழியுடன், இளவரசன் சுகுமாரனிடம் அழைத்துச் சென்று, அவனை மயக்க, காலத்தில் ஒரு ஆண் மகவையும் ஈன்றெடுக்கிறாள் மங்கம்மா. அந்தக் குழந்தை வளர்ந்து பெரியவனாகிறான். இவன் மூலம் சுகுமாரனை எப்படிப் பழி வாங்குகிறாள் என்பது தான் கதை.

இவளது சபதத்தை நிறைவேற்றுவதில் மிக்க உறுதுணையாக இருக்கும் பாத்திரங்களில் என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் மற்றும் குளத்து மணி குழுவினர் திறம்பட நடித்திருந்தனர்.

என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ,மதுரம் ஜோடியின் நகைச்சுவைக் காட்சிகள் இப்படத்தில் அக்காலத்தில் வெகுவாக ரசிக்கப்பட்டு மக்கைடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

இளைஞனான என்.எஸ்.கிருஷ்ணன், வேலை வெட்டியின்றி விளையாட்டுப்பிள்ளையாக, வீணாகப் பொழுதைக் கழித்துக் கொண்டிருப்பார்.தனது வீட்டுத் திண்ணையில் அமர்ந்து தெருவில் போவோர் வருவோர் மீது சிறு சிறு கற்களை அவர்கள் பார்க்காதவாறு அவர்கள் மேல் எறிந்து விட்டு, ஒன்றும் அறியாத அப்பாவி போல் முகத்தை வைத்துக் கொண்டு பாசாங்கு செய்வார். ஒருநாள் அவ்வழி போன சாது (சாமியார்) ஒருவர் மீது கல்லெறிந்து விடுகிறார். கவனித்து விட்ட சாமியார் நேராகக் கிருஷ்ணனிடம் வந்து, தன்னைப்போல் சாதுக்கள் மீது கல் எறிவதால் பயனொன்றுமில்லை எனக் கூறி ஒரு சிறிய நாணயத்தையும் கொடுத்து விட்டு, நல்ல வாட்டசாட்டமான நபர்கள் மீது வீசினால் ஏராளமான வெகுமதிகள் கிடைக்குமெனவும் கூறிச் சென்று விடுவார்.

இதை உண்மை என நம்பிய என்.எஸ்.கே., சாமியார் சொல்லிச் சென்றது போல் ஒரு நாள் அவ்வழி சென்ற ஒரு வாட்டசாட்டமான ஆசாமி மீது கல்லெறிய, அடிபட்ட அந்த நபர், கோபாவேசமாகக் கிருஷ்ணனை நோக்கி வந்து நாலைந்து அடிகளும் கொடுத்து விடுவார். பயந்து போன கிருஷ்ணன் வீட்டிற்குள் சென்று கதவைத் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு விடுவார். பிறகு வீட்டுக் கூடத்தில் கிடந்த உரல் ஒன்றில் உலக்கையைப் போட்டு ஓசை உண்டாக்கி, விளக்குமாறால் அடிபடுவது போல் பொய்யாக நடித்து, ‘அம்மா அடிக்காதே’ எனக் கத்துவார். வெளியில் நின்று கொண்டிருந்த கல்லடிபட்ட ஆசாமி, மனம் இளகி, தான் எதுவும் செய்யமாட்டேன் என உறுதியளித்த பிறகு கிருஷ்ணன் கதவைத் திறப்பார்.

தன் மகன் தறுதலையாக, வேலை வெட்டியில்லாமல் திரிவதை, வந்த ஆசாமியிடம் கூறுவார் கிருஷ்ணனின் தாயார். தான் வேலை தருவதாகக் கூறி தன்னுடன் அழைத்து சென்று விடுவார்.

அவர் ஒரு கழைக்கூத்தாடி. மீசை, தலைப்பாகை, எல்லாம் இருந்தும் கூட அடிப்படையில் ஒரு சாதுவான மனிதர். தன்னுடன் அழைத்துச் சென்று பல வித்தைகளைக் கற்றுக் கொடுக்கிறார்.

ஒருநாள் ஏராளமான மண்பானைகளை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிய நிலையில் எவ்விதப் பிடிமானமுமின்றி, தன் தலை மேல் வைத்துக் கொண்டு, ‘ஜம்’மென்று சர்வ சாதாரணமாக நடந்து வந்து குழுவினரை வியப்பில் ஆழ்த்துவார். ‘இது எப்படி?’ என கேட்க, தன் தலையில் வைத்திருந்த பானைகளை ஒன்றொடொன்று ஒட்டிக் கொண்டிருக்கும் படியான ஏற்பாட்டைக் காண்பிப்பார் என்.எஸ்.கே. மனம் மகிழ்ந்து அவரது குரு அவரைப் பாராட்டி ‘மந்திரம் கால், மதி முக்கால்’ எனச் சொல்லி மகிழ்வார்.

வித்தையில் மாங்கன்றை வரவழைப்பது அக்காலத்தில் ஒரு பிரபலாமன நிகழ்ச்சி. பல வித்தைக்காரர்களும் இதைச் செய்து காண்பிப்பார்கள். அதற்கு ஒரு மாங்கன்றை அவர்கள் யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்திருப்பார்கள். ஜனங்களுக்கு அது தெரியாது! வித்தைக்காரர்கள் தந்திரமாக மாங்கன்று ஒன்றைப் புதிதாக வந்தது போல் தங்களது சாமர்த்தியத்தால் ஒளித்து வைத்திருந்த மாங்கன்றை வரவழைத்து கைத்தட்டல் பெற்று விடுவார்கள். ஒருநாள் வித்தையின் பொழுது என்.எஸ்.கே., அப்படி மாங்கன்று ஒன்றை வரவழைப்பது குறித்து அறிவிப்பார். எப்படி? ‘இந்த மாங்கன்றை அங்கு அந்தக் கூடையின் கீழே வரவழைக்கிறேன்’ எனக் கூறி குட்டை உடைத்து விடுவார். நல்ல வரவேற்பைப் பெற்ற நகைச்சுவைக் காட்சி இது.

டி.ஏ.மதுரம் கழைக்கூத்தாடியின் மகள். ஒருநாள் அவரது தந்தை என்.எஸ்.கே.யிடம் வீட்டினுள்ளே மாம்பழம் இருப்பதாகவும், அதைத் தான் வாங்கி வரச் சொன்னதாகச் சொல்லி வாங்கிவரும்படிக் கூறுவார் திண்ணையில் அமர்ந்தபடி. உள்ளே சென்ற என்.எஸ்.கே., மதுரத்திடம் மாம்பழத்திற்குப் பதில் முத்தம் கேட்பார். உடனே மதுரம் ‘அப்பா’ எனக் கத்துவார். வெளியே இருந்த அப்பா விபரம் அறியாமல், மாம்பழம் தானே என நினைத்து ‘கொடம்மா’ எனக் கூறுவார். அந்நேரம், மதுரம் அறியாதவாறு ஒரு மாம்பழத்தை எடுத்து ஒளித்து வைத்துக் கொண்டு விடுவார். மதுரம், என்.எஸ்.கே.யின் கையில் ஒரு முத்தம் கொடுப்பார். பின் என்.எஸ்.கே. ஒளித்து வைத்திருந்த மாம்பழத்தை, அவளது தகப்பானாரிடம் சென்று கொடுத்து விட்டு மறுபடியும் உள்ளே வந்து மீண்டும் முத்தம் கேட்பார். மதுரம் கோபமடைய, உன் தகப்பனார் தான் கொடுக்கச் சொன்னார் எனக் கூறுவார். தகப்பனாரிடம் சென்று கேட்க, அவரும் மாம்பழம் என நினைத்து கொடுக்கச் சொல்லி விடுவார். மற்றொருமுறை இதே மாதிரி முயற்சி செய்ய, தகப்பனாருக்கு சந்தேகம் வந்து விடும். அவர் வீட்டினுள்ளே வர, அப்போது கிருஷ்ணன் கன்னத்தில் முத்தம் கேட்பதை கவனித்து கோபமாக அவர்கள் அருகில் வர, மதுரம் நிலைமையை சமாளிக்க, மொத்தமாகக் கேட்டார் எனக் கூறி, அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தும் காட்சி வெகுவாக ரசிக்கப்பட்டது.

இனி மங்கம்மாவின் சபதம் நிறைவேறும் படலம். மங்கம்மாவுக்கு உறுதுணையாக இருந்த கழைக்கூத்தாடிகள் இப்போது அவருக்கு வேற்று தேசத்துப் பெண்ணைப் போல் உடை அலங்காரம் செய்து, அவரது கிராமியத் தோற்றத்தை மாற்றியமைத்து, பழைய அடையாளம் தெரியாதவாறு உருமாற்றுகிறார்கள். புதிய பாஷை ஒன்றை கற்றுக் கொடுக்கிறார் என்.எஸ்.கிருஷ்ணன். சீன மொழி போன்ற ஒலியில் ‘லூடார் லிஃப், வீசிங்சங்’ என கற்பனையான ஒரு மொழி. வார்த்தைகளுக்கு அர்த்தம் கேட்க, ‘எனக்கே தெரியாதே!’ எனக் கூறி அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்துவார் என்.எஸ்.கிருஷ்ணன்.

மங்கம்மா, தனது புதிய பொலிவுடன், கழைக்கூத்தாடிகளுடன் அரண்மனை செல்கிறாள். சுகுமாரனின் முன், ‘அய்யய்ய சொல்ல வெட்கமாகுதே’ எனப்பாடி, நடனமாடுகிறாள். அவளது அழகில் சொக்கிப் போகிறான் சுகுமாரன். அரண்மனைக்கு அழைத்துச் செல்கிறான். நாளடைவில் அவன் மூலம் கருத் தரித்து எவரும் அறியா வண்ணம் குழந்தை ஒன்றையும் பெற்றெடுக்கிறாள். நாட்கள் செல்கின்றன. குழந்தை வளர்ந்து பெரியவனாகிறான். பார்ப்பதற்கு உருவத்தில் சுகுமாரனைப் போலவே இருக்கிறான். இந்த மகன் மூலம் சுகுமாரனைக் கடைசியில் பழி வாங்குகிறார். வெகு சுவாரஸ்யமான படம்.

‘வண்ணப்புறாவே நீயார்? – உன்னை
வளர்க்கும் அச்சீமாட்டி
ஊரென்ன, பேரென்ன – வண்ணப்புறாவே’

என ரஞ்சன் பாட்டு பெரிய ‘ஹிட்’ ஆனது.

என்.எஸ்.கிருஷ்ணன் பாடிய,

‘பொண்ணிருக்கு – உள்ளே
பொண்ணிருக்கு,
பூலோக ரம்பை போலே
பொண்ணிருக்கு’

என்ற பாடல் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

டி.ஏ.மதுரம் பாடிய, ‘உம்மேலே தான் ஆசை வச்சேன்’ என்கிற பாட்டில் வரும்,

‘ஆட்டுக்கடா கொம்பு போலே
அழகான மீசக்காரா,
குங்குமப் பொட்டுக்காரா,
கொள்ளேகாலு பட்டுக்காரா’

என்கிற பாட்டும் நன்கு ரசிக்கப்பட்டது.

எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா, டி.ஆர்.மகாலிங்கம், யு.ஆர்.ஜீவரத்தினம் என பல்வேறு நட்சத்திரங்களும் தமிழ்த்திரைகளில் கர்நாடக இசை மெட்டில் பாடல்களையும், கீர்த்தனைகளையும், விருத்தங்களையும் பாடி வலம் கொண்டிருந்த காலத்தில், மேற்கத்திய பாணியில் இசையமைத்துப் பாடப்பட்ட, ‘அய்யய்ய சொல்ல வெட்கமாகுதே’ என்கிற பாடலும், அதற்கான வசுந்தரா தேவியின் நடனமும் மிகப் பெரிய ‘ஹிட்’ ஆக அமைந்தது. மேலும், பாடலே இல்லாமல் வெறும் பின்னணி இசையுடன் மேற்கத்திய இசையமைப்பிற்கு ஒரு காட்சியில் நடனமாடியிருப்பார் வசுந்தரா தேவி. இவைகள் அக்காலத்தில் மிகவும் புதுமையான காட்சி என வருணிக்கப்பட்டது. இவைகளையெல்லாம் இசையமைத்த எஸ்.ராஜேஸ்வர ராவ் – எம்.டி.பார்த்தசாரதி இணையின் திறமைக்குச் சான்றாக விளங்கியது. உண்மையில் இவர்கள் தாம் தமிழ்த்திரையுலகின் முதல் மெல்லிசை மன்னர்கள் என்கிற புகழுக்குத் தகுதியுடையவர்கள்.

பின்னாளில் பிரபலமாக விளங்கிய இயக்குநர் கே.ராம்நாத் இப்படத்தின் ஒளிப்பதிவை கவனித்துக் கொண்டார். இப்பொழுது பார்த்தாலும் ஆச்சரியப்படும் அளவிற்கு மிகவும் சிறப்பான படப்பிடிப்பு. வசனம், இயக்கம் ஆசார்யா என்பவர்.

படத்தில் எள்ளளவு ‘லாஜிக்’கும் கிடையாது. எவருக்கும் தெரியாமல் தனிமைச் சிறையிலிருந்து சுரங்கம் அமைத்து விருப்பம் போல் வீடு செல்வது, மறுபடியும் தனிமைச் சிறைக்குள் வந்து விடுவது நம்பும்படியாக இல்லை. எவரது கவனிப்புமின்றி கர்ப்பிணியாக உலாவுவது, குழந்தையை வளர்ப்பது என்பதெல்லாம் ஒப்புக்கொள்ளக் கூடியவை அல்ல. என்றாலும் கதையின் சுவாரஸ்யமான போக்கில் இக்குறைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, பொழுதுபோக்கு அம்சம் ஒன்றையே முக்கியமாகக் கொண்டு வெற்றியடைந்த படம் ‘மங்கம்மா சபதம்’.

‘மங்கம்மா சபதம்’ ஜெமினிக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்த ஆரம்பகாலப் படங்களில் ஒன்று எனத் துணிந்து சொல்லலாம்.

சில வருடங்களுக்குப் பிறகு இப்படம் இந்தியில் ‘நிஷான்’ என்கிற பெயரில் தயாரிக்கப்பட்டு, வெளிவந்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. கதாநாயகன் ரஞ்சன் இதன் பிறகு பல இந்திப் படங்களில் நடித்தார்.

– கிருஷ்ணன் வெங்கடாசலம்