
விமர்சனம் என்ற பெயரில், தாங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் முடியும் முன்பாகவே, கிழிக்கிழி எனக் கிழிக்கும் பதிவர்களையும் (Bloggers), ஃபேஸ்புக் பயனர்களையும், ட்வீட் போடுபவர்களையும் பகடி செய்வது போல் தொடங்குகிறது படம். இணைய விமர்சகர்களைக் கலாய்த்து ஒரு படமா? அடடே.. ‘செத்தான்டா சேகர்’ என விமர்சகர்களுக்காக உச்சுக் கொட்டும்போது ட்விஸ்ட் வைத்து விடுகின்றனர். அங்கே ‘கட்’ செய்தால் இடைவேளை. படம் தொடங்கிய சில நிமிடங்களுக்குள்ளாகவே இடைவேளை வந்துவிட்டதே என ஆச்சரியப்பட வைக்கிறது. படத்தின் மொத்த நீளமே 110 நிமிடங்கள்தான்.
ஆறு மாதத்துக்குள் ஒரு கதை சொல்லவேண்டும் என விமர்சகர்களுக்கு தயாரிப்பாளர் ஒரு சவால் விடுக்கிறார். அந்தக் கதையை, பெரிய ஹீரோ பெரிய இயக்குநர் வைத்து தயாரிப்பதாகவும் ஒத்துக் கொள்கிறார். இரண்டாம் பாதியில், விமர்சகர்களின் கதைத் தேடலில் படம் தொடங்குகிறது.
கதையில் எதார்த்தம் வேண்டுமென மூன்று மனிதர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். ஒருவர் மாத சம்பளம் வாங்கும் மிடில் கிளாஸ்; உருப்படியாய் எதுவும் செய்யாத பணக்காரன் மற்றொருவர்; இறுதியாக சுடுகாட்டில் வசிக்கும் அநாதை ரெளடி. மூன்று ‘கேரக்டர்’-ஐயும் இணைக்க ஒரு ‘நாயகி’யைத் தேடித் திணிக்கின்றனர். திணித்ததும், விமர்சகர்களின் எதார்த்த கதைத் தேடல் பணால்; நாம் பார்த்துக் கொண்டிருக்கும் படத்தின் சுவாரசியம் டணால்.
சவாலில் வென்றது யார்? விமர்சகர்களா? தயாரிப்பாளரா?
மிடில் கிளாஸ் மணியாக வரும் மிர்ச்சி சிவா படத்தின் கலகலப்புக்கு உதவுகிறார். அந்த மூன்று கேரக்டர்களில், இவருடையது மட்டும் முழுமையாக உள்ளது. மற்ற இருவரும், கதை தேடும் விமர்சகர்களின் கருத்துபடி சொல்லவேண்டும் எனில் படு பயங்கர “க்ளிஷே”க்கள். ரெளடியாக வரும் பாபி சிம்ஹாவும், பணக்காரனாக வரும் அறிமுக நடிகர் கெளரவ்வும் க்ளிஷே காட்சிகளால் மனதில் நிற்காமல் போய்விடுகின்றனர்.
“உங்களுக்குப் பிடிச்ச எதார்த்த படம் எது?” – டி.வி. தொகுப்பாளினி
“பாட்ஷா” – மணி (மிர்ச்சி சிவா)
“!!”
“தலைவர் அதில் வாழ்க்கையை எட்டு எட்டாகப் பிரிச்சுச் சொல்லும் எதார்த்தம் எனக்குப் பிடிக்கும்.”
இத்தகைய முதல் பாதி கலகலப்பை, இரண்டாம் பாதி தவறவிட்டு விடுகிறது.
படத்தில் மசாலா வேண்டுமென்பதும், அதுவே சாமானியனுக்குப் பிடிக்குமென்பதே படம் சொல்லும் நீதி, நியாயம், தர்மம், இத்யாதி எல்லாம். அதை இன்னும் கொஞ்சம் சுவாரசியமாகவும், அழுத்தம் திருத்தமாகவும் சொல்லி இருக்கலாம் இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான லக்ஷ்மன்.