Shadow

மனிதன் விமர்சனம்

Manithan Tamil Review

சாமானியர்களுக்கு சட்டத்துறை மீது நம்பிக்கை ஏற்படுத்தும் படம். குடிப்போதையில் காரோட்டி, நடைப்பாதையில் படுத்திருப்பவர்கள் மீது காரேற்றிக் கொல்லும் பணக்கார வீட்டுப் பையனின் வழக்கை மையமாகக் கொண்டு நகர்கிறது கதையின் களம்.

பொள்ளாச்சியில் கிடைக்கும் ஒன்றிரண்டு வழக்குகளிலும் சொதப்பும் வக்கீல் சக்தியாய் அறிமுகமாகிறார் உதயநிதி. தான் ஓட்டப்படுகிறோம் என்பதைக் கூடப் புரிந்து கொள்ளாமல், அவர்களோடு இணைந்து சிரிக்கும் அப்பாவி வேடத்திற்குப் பொருந்துகிறார். பணத்துக்கு விலை போய், பின் காதலியின் உதாசீனத்தால் ‘ஏழைப் பங்காளன்’ ஆகிறார். வெள்ளைத் தோலினரைக் காதலிப்பதே தம் பிறவி நோக்கமென்ற கதாபாத்திரங்களில் இருந்து முற்றிலும் வெளிவந்து கெத்து காட்டுகிறார் உதயநிதி. அவரது கேரியரில் இது மறக்க முடியாததொரு படமாக அமையும். மதியின் ஒளிப்பதிவில் ஹன்சிகாவை விட உதயநிதி கூடுதல் பொலிவோடு தெரிகிறார். அதே போல், நிருபர் ஜெனிஃபராக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஹன்சிகாவினை விட முக்கிய பங்கு வகிக்கிறார் படத்தில்.

டத்தோ ராதாரவிஇந்தியாவிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் வழக்குரைஞர் ஆதிசேஷனாக பிரகாஷ்ராஜ். அவரது வழக்கமான முக பாவனைகள், வசன உச்சரிப்பு த்வனி, உடல்மொழி, வில்லத்தனம் என நம் எதிர்பார்ப்பை ஏமாற்றவில்லை. முதற்பாதியில் துணை நடிகர் போல் வரும் போல் வந்து செல்லும் டத்தோ ராதா ரவி, க்ளைமேக்ஸின் பொழுதெடுக்கும் விஸ்வரூபம் அருமை. நீதிபதி தனபாலாக, அவர் காட்டும் அலட்சியமும் அக்கறையும் ஆவேசமும் ஈர்க்கிறது. முதல் பெயராக ராதா ரவியின் பெயரும், இரண்டாவதாக பிரகாஷ் ராஜுடையதும் வந்த பிறகே உதயநிதியின் பெயர் வருவது குறிப்பிடத்தக்கது.

பிரதான கதாபாத்திரங்களையும் மீறி, படத்தில் நடித்த மூன்று துணை நடிகர்கள் கவனத்தை ஈர்க்கின்றனர். சாட்சி சொல்ல விழையும் விஜய் நாயராக வரும் கிருஷ்ண குமார்; சக்தியின் பாதுகாப்புக்கு வரும் கான்ஸ்டபிள் பலராமன்; பிரகாஷ் ராஜையே மிரளச் செய்யும் பணக்காரப் பையனின் தாத்தா ஆகிய மூன்று கதாபாத்திரங்களே அவர்கள். தங்களது உண்மையான குணங்களை இம்மூவரும் வெளிப்படுத்தும் காட்சிகளே ஈர்ப்புக்குக் காரணம்.

திரைக்கதையில் உள்ள இத்தகைய புத்திசாலித்தனம் வசனங்களில் இல்லாதது குறை. ராதாரவி மட்டும் தன் மேனரிசத்தால், சின்னஞ்சிறு வசனத்தையும் ரசிக்க வைத்து விடுகிறார். பிரகாஷ் ராஜ் தன் வழக்கத்தை மாற்றிக் கொள்ளா விட்டாலும் தேறி விடுகிறார். வழக்கின் க்ளைமேக்ஸில், உதயநிதியால் காட்சியை பிரகாஷ்ராஜிடம் இருந்து தனது வசத்திற்குக் கொண்டு வர அவரால் முடியவில்லை. உதயநிதியால் அந்தக் கனத்தை உள்வாங்கிச் சுமக்க முடியவில்லை என்பதோடு, அஜயன் பாலாவின் வசனங்களும் அத்தனை கூர்மையாக இல்லை. படத்தைக் காப்பாற்றுவது சுபாஷ் கபூரின் கதைதான்.

மதியின் ஒளிப்பதிவு அட்டகாசம். பின்னணி இசையில் ஆங்காங்கே ஈர்த்தாலும், முழுப் படமாக ஏதோ ஒன்று குறைவது போலுள்ளது சந்தோஷ் நாராயணின் இசை.

Jolly LLB என்ற இந்திப் படத்தால் கவரப்பட்டு, முறையான அனுமதி பெற்று இயக்கியுள்ள ஐ. அஹமத், அதற்கான முழு நியாயத்தையும் தன் படத்தின் மூலம் சேர்த்துள்ளார்.