Search

மனுஷ்ய புத்திரனும் பதினாறு நாற்காலிகளும்

நடு நாயகமாக மனுஷ்ய புத்திரன் வீற்றிருக்க அவரின் இரு பக்கமும் 16 காலி நாற்காலிகள் மேடையில் இருந்தது. உயிர்மையின் ஆதர்ச தொகுப்பாளர் ரோகினி நாற்காலிகளை நிரப்ப ஒவ்வொருவராக அழைத்தார். முதலில் வெள்ளை பைஜாமாவில் வந்திருந்த கவிப்பேரரசு வைரமுத்துவை மேடைக்கு அழைத்தார். அரங்க விதிமுறையின் படி மேடையில் எவரேனும் ஏறினால் கை தட்டல் ஒலி எழுந்தது. அப்படியே நாற்காலிகள் கை தட்டலின் ஊடே நிரம்பத் தொடங்கியது. எழுத்தாளர் இமையம் என்று ரோகினி அழைத்ததும், யாராவது எழுகிறார்களா என அனைவரையும் போல அரங்கைச் சுற்றும் முற்றும் பார்த்தேன். யாரோ ஒருவர் வெள்ளை வேட்டி சட்டையோடு எழுந்து மேடைப் பக்கமாக நடந்தார். சரி அவர் தான் இமையம் போலும் என மெல்ல கை தட்டத் தொடங்கினார்கள். ஆனால் அவரோ தனக்கும் அந்த விழாவிற்கும் சம்பந்தம் இல்லாதது போல் தலையைக் குனிந்து கொண்டு மிக அசிரத்தையாகவும், நிதானமாகவும் நகர்ந்தார். மெல்ல எழுந்த கை தட்டல் அடங்கியது. மீண்டும் இமையம் யாராக இருக்கும் என அனைவரும் அரங்கத்தில் சுற்றும் முற்றும் பார்வையால் துழாவினர். அதற்குள் வெள்ளை வேட்டிக்காரர் மேடை அருகில் சென்று இடதுப் பக்கமாக படிகள் நோக்கிச் சென்றார். மீண்டும் கை தட்டல் மெல்லத் தொடங்கியது போல் இருந்தது. அதற்குள் அடுத்த நாற்காலிக்கான நபரின் பெயரைச் சொல்லி விட்டார் ரோகினி. பதினாறில் பதினைந்து நாற்காலிகள் நிரம்பியது. பாரதி கிருஷ்ணகுமார் ஏனோ வரவில்லை. மேடையில் ஒவ்வொருவரும் அஞ்சஞ்சு நிமிஷம் பேசினாலே இந்த விழா எப்படி இருக்கும் என்ற கணக்கு தீர்க்கதரிசணம் மனதில் ஓடியது.

வைரமுத்து நல்ல கன்னங்கரேர் “டை”யாகப் பார்த்து நேர்த்தியாய்த் தலைமுடிக்கு அப்பி இருந்தார். மேடையில் இருந்தவர்களில் அதிஷா மட்டும் தான் டீ-ஷர்ட் அணிந்திருந்தார். ரோகினி (புடவை) மற்றும் வைரமுத்து (பைஜாமா) தவிர்த்து மற்றவர்கள் எல்லாம் சட்டை அணிந்திருந்தனர். அழகிய பெரியவன் மட்டும் மிகச் சாதாரணமாக இலக்கியப் பிரக்ஞை அற்று எளிய உடையில் வந்திருந்தார். அவர் அடிக்கடி அரங்கத்தின் கூரையையே அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தார். மேடையில் 12 பல்ப்கள், அரங்கத்தில் 54 பல்ப்புகள் என்பது என் கணக்கு. என்றேனும் அவரது அறிமுகம் கிடைத்தால் அவரது கணக்குடன் நேராகிறதா என உறுதிபடுத்திக் கொள்ள வேணும். இரா.முருகன் HP லேப்-டாப்பை வலதுக் கையால் இறுக அணைத்தபடியே மேடையில் ஏறினார். அவர் மட்டும் தான் தொடக்கம் முதல் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தார். சட்டையை இன் செய்து கொண்டு ஆஃபீஸர் போலவே காட்சி அளித்தார். அடிக்கடி லேப்-டாப்பை 35 பாகை கோணத்தில் திறந்து பார்த்துக் கொண்டே இருந்தார். விழா தொடங்கிய இரண்டு மணி நேரத்திற்குப் பின்.. இலஷ்மி சரவணக்குமாரும், சுகுமாறனும் கால் மேல் கால் போட்டுக் கொண்டார்கள்.

மனுஷ்ய புத்திரன் பேசியதும் விருதுகள் வழங்கப்பட்டது. பின் நன்றாக ஏற்ற இறக்கத்துடன் வைரமுத்து பேசினார். பீரங்கியில் இருந்து குண்டு கிளம்பியதும், பீரங்கி குழாய் சற்று பின்னகர்ந்து பழைய நிலைமைக்கு வரும். அதே போல் தான் வைரமுத்துவின் தலையும் சற்றுப் பின்னால் சென்று முன் வந்தது, அவர் ஒவ்வொரு முறையும் தம் கட்டிப் பேசத் தொடங்கும் பொழுது. அடுத்து கார்ட்டூனிஸ்ட் மதன் வந்தார். சுவாரசியமாகப் பேசுபவர் ஆச்சே எனக் கொஞ்சம் குதூகலம் ஆனேன். ஆனால், பேசத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே கிரேக்கம், அங்க இங்கன்னு தமிழ்ப்பட ஹீரோ-ஹீரோயின் டூயட் சாங்கிற்குப் போகிற மாதிரி போயிடுவார். அதே தான் இந்தத் தடவையும் நடந்தது. நா.மம்மதுவின் “ஆதி இசை அதிர்வுகள்” பற்றிச் சிலாகிக்கத் தொடங்கி, அங்க இருந்து அப்படியே டார்வின் கிட்ட பாஞ்சு, அமெரிக்க அர்னால்ட், சீன ஜாக்கி சான், இங்கிலாந்து ஹாரி பாட்டர் மற்றும் இன்னும் பிற பீட்டர்ஸ் எல்லாம் ஆங்கிலத்தில் விஞ்ஞானம் பற்றி எழுதித் தள்றாங்க என்று ஆற்றத் தொடங்கினார் பாருங்க? ஷ்ஷ்ஷ்ப்பாஆ.. விழாவின் இந்த இடத்தில் தான் அது தொடங்கியது. அது என்றால், ‘ஆகா வந்து சிக்கிட்டோமோ?’ என்ற நினைப்பு. தமிழில் விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட நூல்கள் மிகக் கம்மி. உயிர்மை அக்குறையைக் கலைந்தால், அது சுஜாதாவிற்கு செய்யும் tribute ஆக இருக்கும் என்பது தான் அவர் சொல்ல வந்தது. நல்லவேளையாக ஏதோ கல்யாணத்திற்குப் போகணும் என்று அவருக்கு நினைவிற்கு வந்தது. என்னைப் போதுமான அளவு மயக்கத்தில் ஆழ்த்தி விட்டு பாதி பேச்சிலேயே விடைப் பெற்றவர், அப்படியே மேடையை விட்டு இறங்கி வெளியில் சென்று விட்டார்.

கண்கள் பயங்கரமாகச் சொக்கத் தொடங்கிவிட்டது. ஒன்னும் முடியலை. அரங்கத்தை விட்டு வெளியில் வந்து விட்டேன். சரி அரங்கத்தைச் சுற்றிப் பார்க்கலாம் என்று சுற்றினால் அங்க ஒன்னுமே இல்லை. ஓய்வறைக்குச் (rest room) சென்றேன். தண்ணீர் பஞ்சமோ என்னமோ தெரியவில்லை. மயக்கம் இரட்டிப்பு ஆனது. அமர்ந்திருந்த இடத்தை ஒருவழியாகத் தேடிக் கண்டுபிடிச்சு உட்கார்ந்தது தான். யார் பேசுறாங்க, எதுக்கு பேசுறாங்கன்னு ஒன்னுமே புரியல. எப்படியும் விழா ஒரு கட்டத்தில் முடியும் என்ற நம்பிக்கையைக் கையில் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தேன். சுகுமாரன் மேடையில் பேசிக் கொண்டிருப்பதைக் கலங்கலாகப் பார்த்தேன். அப்புறம் தூங்கிட்டேன் போல. வலதுப் பக்கத்தில் அமர்ந்திருந்த ‘டிஸ்கவரி புக் பேலஸ்‘ வேடியப்பன் என் கையைத் தொட்டு எழுப்பினார். எனக்கு முன் என் கெளரவ உணர்ச்சி விழித்துக் கொண்டது. அவசரமாக, “ஹிஹி.. லேசா தூங்கிட்டேன்” என்பதை ஒப்புக் கொண்டேன். அவ்வ்.. ஆனா அவர் அதைக் கவனிக்காமல் வேறு என்னவோ கேட்டார். அவசரப்பட்டு உண்மையை உளறிட்டோமோ என்று வேறு வருத்தமாகி விட்டது. இப்படி எசகு பிசகாக கல்லூரியில் தூங்கியதோடு சரி. இதே போன்று தூக்கம் வந்தால் வலு கட்டாயமாக கவனத்தைத் திசை திருப்பிடுவேன். ஆனா மதன் பேசும் பொழுதே பல்ப்புகளை எண்ணி விட்டேன். இன்னொரு முறை எண்ணும் அளவு பொறுமையும் எனக்கு இல்லை.

 

எஸ்.ரா. வருவார், சோடா தெளிப்பார் என்று நம்பி இருந்தேன். அவர் இலக்கியப் பேருரையின் பொழுது 2 மணி நேரத்தை நொடிகளாக மாற்றி பட்டையைக் கிளப்பியவர். ஆனால் பாவம் அவரே மயக்கத்தில் தான் இருந்திருப்பார் போல. எனினும் அவரது பங்கிற்கு எண்ணெய் ஊற்றாமல் முடிந்தவரை சமாளித்தார். இலக்ஷ்மி சரவணக்குமாரின் “உப்பு நாய்கள்” நாவலை நன்றாக உயர்த்திப் பேசினார். எனது வரிசையில் அமர்ந்திருந்த விமலாதித்த மாமல்லன் சாரை திரும்பிப் பார்த்தேன். அவர் சிலை போல் அசைவற்று எஸ்.ரா. பேசுவதையே உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தார். நாளைக்கு ஓர் இலக்கியக் கச்சேரி கூகிள் பிளஸ்சில் அரங்கேறும் என ஏக குஷியாகி விட்டேன். இரா.முருகன், “சரியா 5 நிமிஷம் தான் பேசுவேன். டைம் பார்த்துக்குங்க” என்று ப்ளாக் (blog) எப்படி எழுதணும் என யோசனை சொன்னார். அவர் லேப்-டாப்பைத் திறந்து வைத்து கொண்டு, அதைப் பார்த்து தான் பேசினார். ஆனால் அவர் மொத்தமாக 7 நிமிடம் பேசினார் என நினைக்கிறேன். ‘ரொம்ப சலிப்பாக உணர்கிறேன்’ என்று என் எண்ணத்தை பிரதிபலித்த வண்ணம் தன் பேச்சைத் தொடங்கினார் அழகிய பெரியவன். 361 டிகிரி சிற்றிதழை ஏன் தேர்ந்தெடுத்தார் எனச் சொன்னார். மற்றவர்களைப் போல் அல்லாமல், 361 டிகிரி பற்றிய குறைகளையும் பதிந்தார். பாலுறவு சம்பந்தப்பட்ட கதைகள் அதிகம் இருந்தனவாம் 361வில். அது மட்டும் தானா உலகில் நம்மைச் சுற்றி நிகழ்கிறது எனக் கேள்வி எழுப்பினார். ஆனால் நாலைந்து நபர் கோரசில் கேள்வி கேட்பது போல் இருந்தது. அவர் ‘மைக்’கை விழுங்கிக் கொண்டு பேசியது போல் இருந்தது. இரண்டெட்டு பின்னால் நகர்ந்து அவர் பேசி இருக்கலாம். மனிதருள் மாணிக்கங்களாக நிலா ரசிகனும், அதிஷாவும் நன்றி மட்டும் சொல்லிக் கொண்டு விடைப் பெற்றனர்.

ஒருவழியாக விழா முடிந்து விட்டது. 🙂

– தினேஷ் ராம்
Leave a Reply