இதோ மரணத்தின் மர்மங்கள் இவை தான் என்று திட்டவட்டமாக வலியுறுத்திக்கூற எவராலும் முடியாது. இறந்தவர் எவரும் கல்லறையிலிருந்து வெளிக்கிளம்பி வந்து மரணத்தின் மர்மங்களைத் துலக்கியதாக வரலாறு இல்லை.
மரணத்தைப் பற்றி எழுதும்பொழுது வேதங்கள் கூறுவதையும், வேதாந்த பாஷ்யங்கள் எடுத்துரைப்பதையும், உலகத்தின் பல்வேறு சமயத் திருமுறைகள் விளம்புவதையம் மரபுவழியாக வந்த சான்றுகளையும் நம்பிக்கைகளையும் ஆய்வு செய்தல் அவசியமாகின்றது.
ரிஷிகளும் ஞானிகளும் யோகிகளும் சுவானுபூதியில் தாம் உணர்ந்த பேருண்மைகளை உலகுக்கு எடுத்துக்கூறியுள்ளார்கள்.
பிரம்மஞான சங்கத்தைச் (theosophical Society) சேர்ந்த சிலர் தாம்பெற்ற நுண்நோக்காற்றலால் (clairvoyance) நேரடியாக அறிந்து ஆய்வுசெய்த உண்மைகள் எனக் கூறி மரணத்தைப் பற்றிய மர்மங்களைத் துலக்கியுள்ளார்கள்.
மகாரிஷிகளும் சத்தியவழியில் வாழ்ந்த மகான்களும் கூறுபவைகள் உண்மையாகவே அவர்களால் உணரப்பெற்றவை என்பதை நாம் ஏற்காதிருக்க முடியாது. ஆனால் அவர்களுடைய சிந்தனைகளை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த கற்பனைகள் தான் பொய்த் தோற்றங்களாக அவர்களுக்கு வெளிப்பட்டனவோ என்ற ஐயம் ஏற்படுவதும் நியாயமே.
எவ்வாறாயினும் மகாத்மாக்கள் உலகுக்கு எடுத்துரைக்கும் உண்மைகள் தீர்க்கமான ஆய்வுக்குப்பின் வெளிப்படுத்தப்படும் துணிபுரைகள் என்று நாம் கொள்ளுதலே பொருத்தமாக இருக்கும்.
மூவாயிரம் வருடங்களுக்கு முன்னர் சாங்கீயம் என்னும் தத்துவ விளக்கத்தை உலகுக்கு அளித்த கபிலமுனிவர் அண்டத்தைப் பற்றிக் கூறிய உண்மைகளைத்தான் இன்றைய விஞ்ஞானிகள் பலவித ஆராய்ச்சிகளின் பின்னர் கண்டு பிடித்து வெளியிடுகிறார்கள்.
மகரிஷி பரத்வர்ஜர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதி வைத்த சுவடிகளில் ஆகாய விமானங்களைப் பற்றியும் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளைப் பற்றியும் பிற கோளங்களை ஆராயவ்தற்கான விண்வெளி விசையூர்திகளைப் பற்றியும் பல தொழில்நுட்ப விடங்களைக் கூறியுள்ளார். மைசூர் சமஸ்கிருத ஆராய்ச்சிக் கழகத்தினரால் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ள இவ்வோலைச் சுவடிகளை ஆய்வு செய்ய மேலை நாட்டு அறிஞர்கள் வந்தவண்ணமிருக்கிறார்கள்.
இந்த ரிஷிகள் கடுமையான தபஸ் மூலம் அடைந்த ஞானத்தினாலம் நுண்நோக்காற்றலாலும் அறிந்துக்கொண்ட உண்மைகளே நம்மை அதிர்ச்சியடையச் செய்யும் இவ்விஞ்ஞான விளக்கங்கள். மரணத்தின் மர்மங்களும் இதேபோல ரிஷிகளால் வெளிப்படுத்தப்பட்ட உண்மைகளே.
ஒவ்வொரு மனிதனும் தன்னகத்தே முதிர்வுறாத புலனுணர்வுகளைக் கொண்டவனாயுள்ளான். பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் பரிணாம வளர்ச்சியின் மூலம் மனிதனுக்கு இயல்பாக வெளிப்படக் கூடிய உணர்வுகள் இப்போதைய மனிதனிடம் மறையாற்றலாகவுள்ளன. அவ்வுணர்களைத் தக்க யோக முறைகளைக் கையாண்டு கடும் முயற்சியினால் மலர்வுறச் செய்கிறார்கள் ரிஷிகளும் யோகிகளும் மனவாற்றல் பெற்ற மகான்களும்.
அவ்வாறான ஆற்றலைப் பெற்றவர்களால் மரணத்தின் பின் உள்ள மர்மங்களை ஒரு சூட்சும தள நிலையில் இருந்து அவதானிக்கக் கூடியதாயிருக்கும்.
அது என்ன சூட்சும தளம்?
அடுத்துப் பார்க்கலாம்.
– தோழி