Shadow

மரண பயம்

பிறக்கும் உயிரினங்கள் அனைத்தும் இறந்தேயாக வேண்டும். இறப்பு நிச்சயமானது என்பது நம் எல்லோருக்கும் தெரியும். இருந்தும், மரணத்தைப் பற்றிச் சிந்தித்து மனதை நாம் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை.

இளம் வயதினர் தாம் இப்போதைக்கு இறந்து விடப் போவதில்லை என்ற உள்ளுணர்வு தரும் தன்னம்பிக்கையுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். வயோதிகர்களோ  மரணம் பற்றிய சிந்தனைகள் துன்பகரமானவை என்று நினைத்து அவ்வெண்ணங்களை மனதில் வளர விடுவதேயில்லை.

ஆனால், இறப்பு நாம் எதிர்பார்த்திருக்கும்போது இயல்பாகவும் வந்துவிடுகிறது. சற்றும் எதிர்பாராது இருக்கும்போது திடீரென்றும் வந்துவிடுகிறது. 

வாழவேண்டும் என்ற ஆசை பொதுவாக எல்லோரிடமும் உண்டு. இதை அபிநிவேஸ என்று சமஸ்கிருதத்தில் கூறுவர். எழுந்து நடமாட முடியாத வயோதிகர்கள் கூட இன்னும் வாழ வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். கடும் நோயினால் வருந்துபவர்கள் கூட, நோய் தீர வேண்டுமென விரும்புகிறார்களே ஒழிய இறந்துவிட்டால் நல்லது என்று எண்ணுவதில்லை. இன்னும் கொஞ்ச நாட்கள் உயிர் வாழ வைத்தியர்கள் உதவ மாட்டார்களா என்று அங்கலாய்ப்பார்கள்.

ஆனால், ஏதோ ஒரு லட்சியத்துக்காக உயிரைத் துச்சமாக மதித்து மரணத்தை விரும்பி அணைத்துக் கொள்பவர்களும், வைராக்கியத்தில் தற்கொலை செய்யும் துணிச்சல்காரர்களும், நம் மத்தியில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

பற்றற்று வாழும் துறவிகளுக்கும், “எல்லாம் அவன் செயல்” என்று இறைவனடியில் சரணடைந்துவிட்ட பக்திமான்களுக்கும் மரணபயமிருப்பதில்லை.

மரணம் பயங்கரமானது என்ற எண்ணம் மனிதர்களிடையே இருப்பதால் தான் “உங்களுக்கு ஏதாவது நடந்துவிட்டால்” என்று சுற்றிவளைத்துச் சொல்கிறோமேயொழிய “நீங்கள் இறந்துவிட்டால்” என்று பட்டவர்த்தனமாகக் கூறுவதில்லை.

எமது மரணத்தின் பின் எமது மனைவி மக்கள் வசதியாக வாழவேண்டும் என்ற எண்ணத்தில் சில ஒழுங்குகளை முற்கூட்டியே செய்து வைத்துவிடுகிறோம். ஆனால் நாம் இறந்தபின் எமது ஆன்மாவின் எதிர்காலம் எப்படி அமையப்போகிறது என்பதை நாம் சிந்தித்துப் பார்ப்பதில்லை. 

மனத்தின் ஆழத்தில் உள்ள மரணபயம் காரணமாகவே நாம் இறப்பின் மர்மங்களையும் இறந்தபின் என்ன நிகழ்கிறது என்பதையும் அறிய ஆர்வங் கொள்வதில்லை.

நாம் சிறிதளவேனும் அறிய முயற்சிப்போமா?? 

வாருங்கள்.

Leave a Reply