தனுஷின் 13 வருட காத்திருப்புஒருவழியாகத் திரையேறி விட்டது.
சூழலால் நீரோடி கிராமத்தில் இருந்து சூடான் நாட்டிற்கு வேலைக்கு செல்லும் மரியான், அந்நாட்டில் ஏற்படும் பிரச்சனையில் இருந்து தப்பினானா என்பதற்கு பதிலுடன் படம் நிறைவுறுகிறது.
அம்பிகாபதியில் அசத்திய தனுஷின் நடிப்பு கண்ணிலிருந்து மறையும் முன் மரியானில் மீண்டும் தனது நடிப்புத் திறமையை மேலும் அழுத்தமாகப் பதிக்கிறார். 2011 இல் வெளிவந்த மயக்கம் என்ன படத்திலிருந்தே பெரிதும் வியக்க வைக்கிறார். காதல், பிரிவு, வலி, உறுதி, எழுச்சி எனப் படத்தினை ஐந்தாகப் பிரித்துள்ள இயக்குநரின் எதிர்பார்ப்பை, தனது நடிப்பால் சிந்தாமல் சிதறாமல் பூர்த்தி செய்துள்ளார் தனுஷ். முதல் காட்சியிலிருந்து படம் முடியும் வரை தொண்ணூறு சதவிகிதத்திற்கும் மேலான காட்சிகளில் நீக்கமற நிறைந்துள்ளார். தனுஷின் நண்பன் சக்கரையாக வரும் அப்புக்குட்டி எப்பொழுதும் போல் பாத்திரமாகவே வந்து மறைகிறார். பசிக்கொடுமையை தனுஷுடன் சேர்ந்து சமாளிக்கும் காட்சியில், தனுஷுக்கு நிகராக ஈடு செய்கிறார் ஜெகன்.
நாயகனையே சுற்றிச் சுற்றி வரும் வழக்கமான நாயகி என பார்வதியை சுலபமாகப் புறந்தள்ளி விட முடியாது. பனிமலராகவே திரையில் வலம் வருகிறார். முகபாவனைகளாலேயே கலக்குகிறார். ‘கல்யாணமாகிப் போனவுடன் சீலியம்மாவின் ஆப்பக்கடையை இழுத்து மூட வைப்பேன்’ என்ற பார்வதியின் புளித்துப் போன வசனத்தை மட்டும் மன்னித்து விடலாம். பாக்யராஜின் நாயகி பவுனு போல நாயகனின் வருகைக்காகக் காத்திருக்கிறார். தனுஷ்-பார்வதியின் நெருக்கமான காதல் காட்சிகள் முதல் ஊடல் காட்சிகள் வரை என சகலமும் மார்க் கோனிக்சின் ஒளிப்பதிவில் வெகு அற்புதமாக உள்ளது. பெல்ஜியம்காரரான அவர் கதையை உள்வாங்கி அழகான விஷுவலாக வெளிக்கொணர்ந்துள்ளார்.
ஆவி சூழ் உலகு, கொற்கை ஆகிய நாவல்களை எழுதிய ஜோ டி க்ருஸ் படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். இப்படத்திற்கு வசனமெழுத இவரை விட பொருத்தமானவர் வேறு எவருமில்லை என்றே சொல்ல வேண்டும். எப்படியோ தமிழ்த் திரையுலகிற்குள் இன்னுமொரு எழுத்தாளர் பிரவேசித்து இருப்பது ஆரோக்கியமான விஷயமே. அதே போல் கவிஞர் குட்டி ரேவதி, இந்தப் படத்தில் இரண்டு பாடல் எழுதியதோடு மட்டுமல்லாமல் சீனியர் அசோசியேட் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். படம் தரும் தாக்கத்தை உறுதிபடுத்துவது ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசையே. பாடல்களை மார்க் கோனிக்சின் ஒளிப்பதிவில் மேலும் ரசிக்க முடிகிறது.
படம் முழுவதும் தனுஷ் வியாபித்து இருந்தாலும், கண்டிப்பாக இது இயக்குநரின் படமே. முதல் பாதியில் காதலும், இரண்டாம் பாதியில் போராட்டமும் எனப் படம் இரண்டு வெவ்வேறு பாதையில் செல்கிறது. நீர்ப்பறவை போல் படம் நேரடியாக எதுவும் சொல்ல துணியவுமில்லை; எதையும் வலிந்து திணிக்கவுமில்லை. ஆனால் இப்படத்தின் இரண்டாம் பாதியைத் தீர்மானிக்கும் முக்கிய காரணியாக சிங்கள இராணுவத்தின் அட்டூழியத்தை கதையோடு இயைந்து சிறு காட்சியாக வைத்துள்ளனர். சுட்டது யாரென்பதை வசனங்களில் கூட மிகக் கவனமாகத் தவிர்த்துள்ளனர். இது மரியானின் கதையை சொல்லும் படம். ஆக நீர்ப்பறவையை விட நேர்மையான படைப்பே!
சூடான் நாட்டு தீவிரவாதிகள், ஆளரவமே இல்லாத பாலைவனத்திலும் வானத்தை நோக்கி சடங்கு போல் சுட்டுக் கொண்டே உள்ளனர். தீவிரவாதிகள் மனம் திருந்த எப்படி என்னப் பேசணுமோ.. அப்படிப் பேசி கனிய வைத்து விடுவதில் விஜயகாந்த் கில்லாடி. ஆனால் பாவம் தனுஷ். “நாங்களும் ஏழைங்க தான். நோ மணி” என அவர் முகபாவனைகளோடு சொல்லியும் ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை. காட்சிகள் கொஞ்சம் மெதுவாக நகருவதால் படத்தின் நீளத்தை அநாவசியமாக சந்தேகப்பட வேண்டியுள்ளது.
தீக்குறிசியாக வரும் விநாயகன் (திமிரு படத்தில் காலை நொண்டியவாறு வருபவர்) திடீரென நாயகியை பலாத்காரம் செய்ய முயல்கிறார். பாலைவனத்தில் 300 கி.மீ. நடந்த களைப்பாலும் பசியாலும் நாயகனுக்கு மனப் பிரமை ஏற்படுகிறது. மறுபடியுமா என பீதி எட்டிப் பார்க்கும் பொழுது, நல்லவேளையாக படம் எந்த மனவுளைச்சலையும் தராமல் சுபமாக முடிகிறது.