Shadow

மாசு என்கிற மாசிலாமணி விமர்சனம்

மாஸ் விமர்சனம்

தமிழ் சினிமாவை பேய் பிடித்திருக்கும் காலமிது. அதுவும் எந்த அளவெனில், பேய்கள் ஜாக்கிரதை என தலைப்பின் மூலமே எச்சரிக்கும் அளவு முத்தியுள்ளது.

ஒரு விபத்தில், மாஸ் எனும் திருடனுக்கு, ஆவிகளைப் பார்க்கும் அமானுஷ்ய சக்தி கிடைக்கிறது. பேய்களை வைத்து சம்பாதிக்கத் தொடங்கும் மாஸ்-க்கு, சுலபமாக கோடீஸ்வரனாகலாம் என ஆசை காட்டுகிறது சக்தி எனும் ஆவி. ‘இந்த டீல் நல்லாயிருக்கே.!’ என பணத்தாசையில் இருக்கும் மாஸைக் கொண்டு சாதுரியமாக ஒருவனைக் கொன்று விடுகிறது சக்தி. யாரை ஏன் சக்தி கொல்கிறது என்பதுதான் படத்தின் கதை.

மாஸ் என்கிற மாசிலாமணியாகவும், சக்தி எனும் ஆவியாகவும் இரு வேடத்தில் கலக்கியுள்ளார் சூர்யா. மாஸான படத்தில் நாயகி இருந்தே ஆக வேண்டுமென்ற எழுதப்படாத விதியின் பொருட்டு நாயகியாக நயன்தாரா தலை காட்டியுள்ளார். நயனுடன் ஒப்பிடுகையில் ப்ரணிதாவுக்கு வலுவான கதாப்பாத்திரத்தைக் கொடுத்து அழகு பார்த்துள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு (எனினும் நயன்தாராவின் குழப்பமான அறம், அதாவது லஞ்சம் தரலாம் ஆனால் அந்த லஞ்சப் பணம் நல்ல முறையில் சம்பாதிக்கப்பட்டிருக்க வேண்டுமென்ற ஒழுக்கசீலம், இணையப் போராளிகளின் சார்புக் கொண்டையைக் குறிக்கும் குறியீடாக இருக்குமோ என லேசாக ஐயம்).

திரையில் காட்டுக் கத்தல் கத்திக் கொண்டிருந்த சர்வ வல்லமை படைத்த பேய்களைப் புறந்தள்ளி விட்டு, மனிதனின் உதவியை எதிர்பார்க்கும் சாதாரணவைகளாக ஆவிகளைக் காட்டியுள்ளார் வெங்கட் பிரபு. அன்றும் இன்றும் என்றும் பூமியில் சர்வ வல்லமை படைத்தவன் மனிதன்தான் என நிரூபிக்கும் ஆர்.கே. என்கிற பாத்திரத்தில் இயக்குநர் சமுத்திரக்கனி நடித்துள்ளார். ஜெட்டு என்கிற ஜெட்லியாக, வெங்கட் பிரபுவின் பிரதான நடிகரான பிரேம்ஜி, வழக்கம் போல் நாயகனின் நண்பராக நடித்துள்ளார்.

“நீ வந்து என்ன பிடுங்கின என யாரும் கேட்டுடக்கூடாது” என ரியாஸ் கானின் கண்ணாடியைப் பிடுங்கி, திரையரங்கைக் கலகலப்பாக்குகிறார் காவல்துறை அதிகாரியாக வரும் பார்த்திபன். கொஞ்சமான காட்சியில் வந்தாலும் தனது வாய்ப் பந்தலை கடை விரிக்கத் தவறவில்லை அவர். இப்படத்து பார்த்திபனுக்கும் சரி, சூர்யாவுக்கும் சரி.. பணமே பிரதானம். அது சரி.. யாருக்குத்தான் அப்படியில்லை. அதனால்தானே ‘மாஸ்’ எனும் இப்படத்தின் தலைப்பே மாசாகியுள்ளது?

உழன்று கொண்டிருக்கும் ஆன்மாவை வெளிச்சத்துக்கு அனுப்புவது மிகப் புண்ணியமான காரியம் என்கிறார் அமெரிக்க ஆவி மீடியமான ஜேம்ஸ் வான் பிராக். இதே டையலாகைச் சொல்லி உதவி கேட்கிறார் கரகாட்டப் புகழ் சண்முக சுந்தரம். வெங்கட் பிரபு, தனக்குப் பிடித்தமான அனைவரையும் ஒரே ஒரு சீனிலாவது கொண்டு வரும் பழக்கத்தை இப்படத்திலும் மேற்கொண்டுள்ளார். விஜய் வசந்த், அரவிந்த், ஜெய் ஆகியோர் படத்தில் வருகின்றனர். குறிப்பாக, ‘எங்கேயும் எப்போதும்’ படத்து க்ளைமேக்ஸின் நீட்சியாக ஜெய்யை உபயோகித்திருப்பது ஆச்சரியப்பட வைக்கிறது.

வித்தியாசமான களத்தில் பயணித்துக் கொண்டிருந்த படம், கார் பாலத்தில் இருந்து கவிழ்ந்ததும், வழக்கமான பழி வாங்கும் கதையில் போய் முட்டிக் கொள்வது அயர்ச்சி அளிக்கிறது. அதிலும், ‘கண்ணா, அவர் யார் தெரியுமா? 25 வருஷத்துக்கு முன் என்ன நடந்ததுன்னா..!’ என்று விவேக்கால் செமயாக கலாய்க்கப்பட்ட அந்த வசனம் இப்படத்திலும் வருகிறது.

நிறைவேறாத ஆசைகளுடன் மரணித்தால் என்னாகும்? இறந்த பின்னும் அந்தக் கவலையிலேயே உழல வேண்டியதுதான். அப்படி தன் காதலைத் தெரிவிக்க முடியவில்லை என கவலையில் இருக்கும் ஒரு வாலிப வயது ஆவிக்காக, சூர்யா ஒரு பாட்டியிடம் சென்று அவ்வாலிப ஆவியின் காதலைத் தெரிவிக்கிறார். இது போன்ற ஒன்றிரண்டு காட்சிகளால், படம் அதன் கமர்ஷியல் சாகசங்களையும் மீறி முக்கியத்துவம் பெறுகிறது.