Search

மாயப் புன்னகை

தர்மம் தன் இயல்பை மறைத்து கோப வேடத்தினை அணியத் தெரியாமல் அணிந்தது போலிருந்தது. எதிரில் நிற்கும் தர்மனைப் பார்க்கவே கர்ணனுக்கு வேடிக்கையாக இருந்தது. பரிதாபமாகவும் இருந்தது. இன்றே சண்டையை முடித்து விடும் தீவிரத்துடன் தர்மர் தன்னுடன் போர் புரிய ஆயுத்தமாவது போல் கர்ணனுக்குத் தோன்றியது. ஆனால் கர்ணன் மனதில் அன்று ஏனோ இனம் புரியா சோர்வு. பதினாறே நாட்களில் கணக்கில்லா இழப்புகள். பீஷ்மர், துரோனர் போன்ற உத்தம மகா வீரர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. அநாவசியமாக அபிமன்யுவின் முகம் தோன்றிக் குற்றயுணர்ச்சியைக் கிளறியது.

யுதிஷ்ட்ரனுக்கு தர்மன் என்ற பெயர் பொருத்தமானது தானா என்று யோசித்தான் கர்ணன். வஞ்சகமாக அன்றோ துரோனரை வீழ்த்தி உள்ளனர்? தர்மரின் அம்பு கர்ணனின் வில் நாணை அறுத்தது. வேகமாக நாணைக் கட்டிய கர்ணனால் அதே வேகத்தில் அம்பினைச் செலுத்த முடியவில்லை. நான் உனது தமையன் என்று கூறினால் தர்மன் ஒருவேளை போரை உடனடியாக நிறுத்த சம்மதிக்கலாம் என தோன்றியது. மீண்டும் தர்மரின் அம்பு கர்ணனின் வில் நாணை அறுத்தது. ‘நான் ஏன் சகோதரர்களான பாண்டவர்கள் பக்கம் சேராமல் இருக்கிறேன்? அனைவரும் சொல்வது போல் செஞ்சோற்றுக் கடன் தீர்க்கவா?’ என்ற யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே தர்மரின் அம்பால் மூர்ச்சை ஆகிறான் கர்ணன்.

பொறியில் சிக்கி மூர்ச்சித்த எலி போல் வீழ்ந்து கிடக்கிறான் கர்ணன். தர்மன் கர்ணனைப் பார்த்து, “நானே உன்னைக் கொன்று விடுவேன். ஆனால் நான் நிராயுதபாணிகளைக் கொல்வதில்லை. தர்ம நெறிப்படி நடப்பவன். மேலும் நீ அர்ச்சுனனால் கொல்லப்பட வேண்டியவன்” என்று கெக்கலித்தான்.

உடலிற்கு தான் சோர்வு. விழித்துக் கொண்டிருந்த கர்ணனின் உள் மனதில் தர்மரின் சொற்கள் விழுந்தன. சில நிமிடங்களில் மூர்ச்சை தெளிந்த கர்ணனிற்கு தர்மனின் ஏளனம் சகிக்க முடியாத தொந்தரவாய்ச் சுட்டது. அர்ச்சுனன் தவிர வேறு எவரையும் தமக்குச் சமமானவனாக கர்ணன் எண்ணியதில்லை. தர்மனின் தேரைத் தேடி எதிரில் சென்று நின்றான் கர்ணன். அலட்சியம் மேலிட தர்மன் அகம்பாவமாக அம்பினை எய்தினான். ஆனால் மின்னலென சீறிப் பாய்ந்து வந்த கர்ணனின் அம்புகள் தர்மனின் வில்லை உடைத்தது; கிரீடத்தைத் தட்டி விட்டது; சக்கரங்களைத் தூளாக்கியது; தேர்க் கொடியை அறுத்தது; அம்புறாத் தூணீயைத் தள்ளிக் கொண்டு போனது. கர்ணனின் அம்புகள் தர்மனின் அங்கமெங்கும் பட்டும் படாமலும் தைத்து இம்சித்தது. காதுகளை உரசிச் சென்ற அம்புகள் தர்மனை அச்சம் கொள்ள செய்தது. அந்த அச்சம் உயிர் பயத்தினால் எழுந்தது அன்று. வித்தை தெரியாச் சிறுவன் ஒருவனுடன் விளையாடுவது போல், தன்னை தனது சேனைகள் முன் கர்ணன் அவமானம் செய்வதாக உள்ளூறப் பதறினான் தர்மன். தர்மன் எத்தனை முறை வில்லெடுத்து நாணேற்றினாலும், நொடிப் பொழுதில் கர்ணனால் அறுபட்டது.

‘மாபாவி கொல்லவும் மாட்டேங்கிறானே?’ என்று தர்மனின் மனம் அரற்றியது.

அண்ணனைக் காக்க பீமன் வெகுண்டு வருவதைப் பார்த்தான் கர்ணன். தர்மனின் மிரட்சியும் காணச் சகியாததால் தர்மனை ஒரு கணை கொண்டு மூர்ச்சிக்க வைத்தான் கர்ணன். தர்மனைப் பத்திரமாக மீட்டு பாசறைக்கு அழைத்துச் சென்றனர். கோபத்தில் பீமன் பல்லைக் கடிப்பது கர்ணனிற்குக் கேட்டது. பீமன் தான் எவ்வளவு வலிமையானவன்? அர்ச்சுனனின் வீரம் அவன் வில்லைத் தொட்டு அம்புகளைத் தொடுத்தால் தான் தெரியும். ஆனால் பீமனைப் பார்த்தவுடன், அவனது பலத்துடன் மனதில் பதிபவன். மலையளவு முரட்டுத்தனத்தை பீமன் வலிந்து காட்ட முற்பட்டாலும் அவனின் குழந்தைத்தனம் அதை முந்தி விடுகிறது. தர்மன் உண்மையில் ஆசிர்வதிக்கப்பட்டவன். பீமன் போன்ற பிரியமானதொரு தம்பியை வேறெங்குக் காண முடியும்?

“அடேய்.. தேரோட்டி மைந்தா!!” என்று அலறிக் கொண்டே பீமன் கணைகளைத் தொடுத்தான். விடம் தடவிய அச்சொற்கள் கர்ணனை ஹஸ்தினாபுரத்தில் நடந்த பந்தய தினத்திற்கு அழைத்துச் சென்றது. அன்று அர்ச்சுனனை விற்போருக்கு அறைகூவல் விடுத்த நாளன்று சொற்போர் புரிந்தே என்னை அவமானப்படுத்தினர். தர்மமாம்? நல்ல தர்மம்.  சொல்லற்று நின்ற என்னைப் புழுவென கருதும் படி சொற்கணைகளால் அடித்த தர்மவான்கள் அன்றோ இவர்கள் எல்லாம்?? ஏகலைவனின் கட்டை விரல் கேட்கும் புண்ணியவான்கள். வில் கொண்டு போரிடாமல் சொல் கொண்டு என் உயிரை இவர்கள் உறியத் துடித்த சமயத்தில், உயிரினும் மேலான தன்மானம் முழுதும் ஒடிந்து விழாமல் தடுத்தாட்கொண்டது துரியோதணன். செஞ்சோற்றுக் கடன் என்ற பெயரில் விருப்பமில்லாமல் போர் புரிந்து மடிய நானென்ன பீஷ்மரா அல்லது துரோனரா? என் உயிரைக் காத்த துரியோதணனிற்காகப் பெரும் உவகையுடன் உயிரைத் தருவேன். உளமொழுவதும் ஒன்றி துரியோதணனுக்கு மட்டுமே இங்கு நிற்கிறேன்.

கர்ணனின் சிந்தனை ஓட்டத்தால் பீமனின் கை ஓங்கியது. கர்ணன் ஆயிரம் சமாதானங்களால் தன்னை நிலைப்படுத்திக் கொள்ள முயன்றாலும் சகோதர வாஞ்சை எழுவதை முற்றிலுமாக தடுக்க இயலவில்லை. பீமன் இன்று மூத்தவனுக்காக என்னைக் காயப்படுத்துகிறான். அன்று இளையவனுக்காகக் காயப்படுத்தினான். தனக்கென்று தனியாக எதையும் யோசிக்க தெரியாத குழந்தை இந்தப் பீமன். பீமனின் கணைகள் பெரும் விசையுடன் கர்ணனைத் தாக்கிக் கொண்டிருந்தது. சிந்தையைச் சமன்படுத்தி போரில் முழுக் கவனத்தையும் திசை திருப்ப அர்ச்சனனுக்கு மாதவன் இருந்தான். ஆனால் கர்ணன் மனமோ ஊசலாடிக் கொண்டிருந்தது. குழம்பிய குட்டையில் எளிதாக மீன் பிடிப்பது போல் கலங்கிய மனதுடன் இருந்த கர்ணனை பீமன் எளிதில் மூர்ச்சிக்கச் செய்தான்.

மூர்ச்சை தெளிந்த தர்மர் பாசறையில் இருப்பதை உணர்ந்தான். போர்க்களத்தில் நடந்த அவமானம் கண்களில் எரிச்சலாக வெளிப்பட்டது. கர்ணன் அழிந்தால் போர் முடிந்து விடும். என்ன செய்துக் கொன்டிருக்கிறான் இந்த அர்ச்சுனன்? எனக்கு நேர்ந்த அவமானத்தைக் கேள்வியுற்று இந்நேரம் அர்ச்சுனன் கர்ணனிற்கு மரணத்தைப் பரிசளித்திருப்பான். என் உடலில் ரத்தக் காயங்கள் ஏற்படுத்துபவன் யாராக இருந்தாலும், அவனை வதைப்பதாக அர்ச்சுனன் சபதமேற்றுள்ளான். எந்நேரமும் அந்த நல்ல செய்தியுடன் என்னைக் காண அவன் வரக்கூடும் எனச் சமாதானப்படுத்திக் கொண்டான் தர்மன்.

வாயிற்காப்பாளனின் துரிதமான நடையைக் கொண்டே, அவனேதும் சொல்லும் முன் கிருஷ்ணன் மற்றும் மாதவனின் வரவை உணர்ந்தான் தர்மன். ஓடி வந்த அர்ச்சுனனை ஆரத் தழுவி, “நீ இன்றி இந்தப் போர் முடிந்து இருக்காது. கர்ணனை எந்தத் தெய்வீகக் கணையைக் கொண்டு வதைத்தாய்?” என்று கேட்டான் தர்மன்.

“கர்ண வதம் இன்னும் சம்பவிக்கவில்லை அண்ணா.”

“என்ன? ஏன்?”

“அதற்கான சந்தர்ப்பம் இன்னும் கை கூடவில்லை.”

“என் மேனியிலிருந்து உதிரம் எடுப்பவனின் உயிரை எடுப்பதாக நீ செய்த சங்கல்பம் என்ன ஆனாது?”

“அது கண்டிப்பாக நிகழ்ந்தே தீரும். தாங்கள் நலமில்லை என்று கேள்வியுற்றுக் காண வந்தோம் அண்ணா.”

“நான் இன்னும் சாகவில்லை. கர்ணனை வதைக்க முடியாத உன் வக்கற்ற காண்டீபத்தை நம்பி ஏமாந்திருந்து விட்டேன். அர்ச்சுனன் வருவான்.. நல்ல செய்தி சொல்லுவான் என்று அகமகிழ்ந்த முட்டாள் நான்.”

அர்ச்சுனன் ஆவேசத்துடன் வாளை உருவி தர்மரின் தலையைக் கொய்ய கையை ஓங்கினான். அருகில் இருந்த கண்ணன் அர்ச்சுனனின் கையைப் பற்றி, “என்ன காரியம் செய்ய முனைந்தாய்?” என்று கேட்டான்.

“என் காண்டீபத்தைப் பழிப்பவர்களைக் கொல்வேன் என்று சபதம் எடுத்துள்ளேன்.”

“அதனால் என்ன? தர்மரை அவமரியாதையாகப் பேசி விடு. அது அவரைக் கொல்வதற்கு சமம்” என்று யோசனை சொன்னான் கண்ணன்.

“இச்சையைத் தணிக்க முடியாமல் நீ சூதாடியதற்காக நாங்கள் அனைவரும் அல்லவா அல்லலுறுகிறோம். நீ ஒருவன் செய்த பிழையால் வணக்கத்தற்குரிய பிதாமகரையும், ஆச்சாரியரையும் எதிர்த்துப் போரிடும் அவலத்திற்குத் தள்ளப்பட்டோம்” என்று தர்மரை ஒருமையில் பேசினான் அர்ச்சுனன்.

கண் கலங்கும் தர்மரைச் சமாதானப்படுத்த கண்ணன் எத்தனிக்கும் பொழுது, அர்ச்சுனன் மீண்டும் வாளை உருவினான்.

“இப்பொழுது என்ன ஆனது?” என்று மீண்டும் அர்ச்சுனனின் கையைப் பிடித்துக் கொண்டான் கண்ணன்.

“தர்மரைப் பழித்துப் பேசுபவர்களைக் கொல்வேன் என்று சபதமேற்றுள்ளேன். அதனால் என் சிரத்தினைக் கொய்து கொள்ளப் போகிறேன்.”

“ஆகா அதனால் என்ன? எவன் ஒருவன் பெருமையாகத் தன்னையே புகழ்ந்து கொள்கிறானோ அது தற்கொலை புரிந்து கொள்வதற்கு சமம். உன்னை நீயே புகழ்ந்து கொள்” என்று யோசனை சொன்னான் கண்ணன்.

“அக்னி தேவனிடமிருந்து எவருக்கும் கிட்டாத அரிய காண்டீபமும், வற்றாத அம்புறாத் தூணீயும் பெற்றேன். சிவனை எண்ணித் தவமிருந்து மூன்று முகம், ஒன்பது கண் கொண்ட பாசுபதக் கணை பெற்றேன். தனியொருவனாக மூன்று கோடி நிவாத கவசர்களைப் போரிட்டுக் கொன்றேன். விண்ணில் மிதக்கும் நகருடைய அரக்கரகளான புலோமர், காலகேயர்களையும் வென்றேன். என் போல் வீரன்.. வேறெவன் உளான் இங்கே?!” என்று தன் துதி பாடினான் அர்ச்சுனன்.

“சொந்த சகோதரனால் நிந்திக்கப்பட்ட நான்.. இனி உயிர் வாழ்ந்து என்ன பயன்? நான் வடக்கிருந்து உயிர் துறக்க வனவாசம் செல்கிறேன்” என்று கூறினான் தர்மன்.

பதறிப் போய் கண்ணன், “எடுத்த காரியத்தைப் பாதியில் விட்டு விட்டு விலகுவது தர்மம் ஆகாது. சிறுவனான அர்ச்சுனன் பிழைப் பொறுத்து பாண்டவர்களை எப்பொழுதும் போல் வழி நடத்த வேண்டும்” என்ற தர்மனின் கரத்தைப் பதமாய்ப் பற்றி வேண்டுகோள் வைத்தான் கண்ணன்.

தர்மனின் காலைப் பற்றிய அர்ச்சுனன், “இன்று சூரியன் குடதிசையில் மறையும் முன் கர்ணனை வதைப்பேன். இல்லையேல் அக்னியில் வீழ்ந்து உயிர் துறப்பேன் என்று சபதமேற்கிறேன்” என்று சூளுரைத்தான். தர்மன் கண்ணனைப் பார்த்தான். கண்ணன் புன்னகைத்தான்.

‘எவ்வளவோ பண்ணிட்டோம். இதைப் பண்ண மாட்டாமா?’

– தினேஷ் ராம்Leave a Reply