Shadow

மாற்றான் விமர்சனம்

Maatraan
அயன், கோ என இரண்டு வெற்றிப் படங்களின் தொடர்ந்து வரும் கே.வி.ஆனந்தின் நான்காவது படம். இரட்டையர் பற்றிய படம் என்பது கூடுதல் எதிர்பார்ப்பிற்கான காரணம்.
தனது தந்தையின் ‘எனர்ஜியான்’ என்னும் ஊட்டச்சத்து பானத்தில் ஏதோ மர்மம் இருப்பதாக ஐயப்படும் விமலன் கொல்லப்படுகிறான். விமலனுடன் ஒட்டிப் பிறக்கும் அகிலன், விமலனின் கொலைக்கு காரணமானவர்களை நூல் பிடித்து செல்லும் பொழுது கண்டுபிடிக்கும் திடுக்கிடும் விடயங்களுடன் படம் நிறைவுறுகிறது.
இரட்டை வேடத்தில் சூர்யா. வெவ்வேறு குணாதிசியங்கள் கொண்ட இரட்டையர்கள். அதை காட்சிப்படுத்தவே பெரும்பாலான காட்சிகள் விரயமாக்கப்பட்டுள்ளன. சாருலதாவில் வரும் பிரியாமணிகளைப் போலவே வயிறொட்டிப் பிறந்தவர்கள். எனினும் இருவருக்கும் ஓர் இதயம் என வித்தியாசப்படுத்தி உள்ளனர். ஏழாம் அறிவைத் தொடர்ந்து இப்படத்திலும் டி.என்.ஏ. சூர்யாவை விடாமல் துரத்துகிறது. ஆயினும் குழப்படி மட்டும் தீர்ந்தபாடில்லை. அதிலும் இறுதிக் காட்சிகளில் சூர்யாவின் பிறப்பு ரகசியம் பற்றிய வசனங்கள்.. ஷ்ஷ்ப்பாஆ முடியவில்லை.
லூசுத்தனமான நாயகிகளுக்கு தமிழ்த் திரைப்படங்களில் பஞ்சமில்லை. நாம் அதற்கு பழக்கப்பட்டு விட்டோம். ஆனால் கே.வி.ஆனந்தின் நாயகிகள் புரட்சிக்கரமானவர்கள். நெருங்கியவர்களின் மரணங்களைக் கண்டு துவளாத திட சித்தம் வாய்ந்த புதுமைப் பெண்கள். அயன்-னில் அண்ணன் இறந்ததும் தமன்னா சூர்யாவுடன் ஆடுவார். கோ-வில் தோழி இறந்ததும் கார்த்திகா ஜீவாவுடன் ஆடுவார். அதன் நீட்சியாக இப்படத்தில் காஜல் அகர்வால் காதலன் இறந்ததும்.. காதலனின் சகோதரனுடன் ஆடிப் பாடி காதலிக்க தொடங்குகிறார். த்ரிஷா இல்லைன்னா.. நயன்தாரா என சமாதானம் ஆகும் நாய்சேகர் போல ஞானி உள்ளம் கொண்டவராக நாயகி சித்தரிக்கப்படுகிறார். ஏனோ நான் மகான் அல்ல காஜல் அகர்வால் நினைவில் மின்னி மறைகிறார்.
இரண்டாம் படம் தந்த வெற்றி காரணமாக இருக்கலாம். ஒரு வார்த்தையில் தலைப்பை வைப்பதை தொடர்கிறார். ‘மாற்றாந்தாய்க்கு பிறந்தவன் நீ’ என சொல்லும் பொழுது வரும் அர்த்தம் தான் படத்தின் தலைப்பிற்கும் காரணமாக இருக்கும். அயனில் இருந்த கச்சிதமான திரைக்கதை.. கோ-வில் கொஞ்சமும், மாற்றானில் ரொம்பவும் இல்லாமல் போய்விட்டது. இரட்டையர்களின் அன்றாடங்களில் சுழலும் முன் பாதி, விமலனின் மரணத்தில் முடிகிறது. பின் கதை உக்வேனியாவிற்கு பயணிக்கிறது. சூர்யாவின் தந்தையிடம் வேலை செய்தவர் திடீரென்று அந்நாட்டின் மாஃபியா கூட்டத்திற்கு தலைமை தாங்குகிறார். 1992 ஒலிம்பிக்சில் உக்வேனியா அரசு தன் வீரர்களை எப்படி ஜெயிக்க வைத்தது என ஒரு ப்ளாஷ்-பேக் மற்றும் அதன் பாதிப்புகள் எப்படி நீள்கிறது என சொல்கிறார்கள். இந்திய திருநாட்டின் எதிர்காலம் அவர்கள் கையில் தான் உள்ளதென அந்நாட்டு இராணுவ அதிகாரியை சமாதானப்படுத்துகிறார். படத்தில் ஒரே ஒரு இடத்திலும் கூட நம்மால் ஒன்ற இயலவில்லை. பார்ட்டிகளில் கூத்து கும்மாளம் என போகும் பொழுது, காவல் நிலையத்தில் இரட்டை அர்த்த வசனங்களோடு காட்சிகள் வருகின்றன. வலுவான வில்லன் இல்லாமல் கண்ணாமூச்சி ஆடும் திரைக்கதையில் சூர்யா காற்றில் பரிதாபமாக வாள் வீசுகிறார். விஜயகாந்த் கூட வில்லனை இடதுக் காலால் ஆசை தீர உதைத்து விட்டே வசனம் பேசி தீவிரவாதிகளை திருத்த பார்ப்பார். கே.வி.ஆனந்தோ சூர்யாவை வெறுமென வசனங்களை மட்டும் பேசி அழ வைத்து விட்டு இறுதிக் காட்சியிலும் தூக்கம் கலையாமல் பார்த்துக் கொள்கிறார்.

Leave a Reply