Search

மிதக்கும் சொர்க்கம்

உல்லாசக்கப்பல் பயணம்

ஓர் உல்லாசக்கப்பல் பயணத்தைப் பற்றிய பயணநூல் என்பதே ஆர்வத்தைக் கிளறுவதாக இருந்தது. அதையும் அந்தப் புத்தகத்தை எழுதியவர் ஒரு பெண் விஞ்ஞானி என்பது புத்தகத்தைப் படிக்கும் ஆர்வத்தை மேலும் தூண்டியது. மன்மதன் அம்பு படத்தில் கமல், த்ரிஷா பயணிக்கும் க்ரூஸ் வகை கப்பலைச் சேர்ந்ததுதான் இந்நாவலின் உல்லாசக்கப்பலும்!

புத்தகத்தை அறிமுகம் செய்த யுவகிருஷ்ணா, தமிழில் வந்துள்ள பயணநூல்கள் பற்றிய ஒரு பார்வையை அளித்தார். 1940 களிலேயே, ஏ.கே.செட்டியார், தனியொருவராக இருந்து அச்சு இயந்திரத்தில் எழுத்துகளைக் கோர்த்து, தனது பயண அனுபவங்களை புத்தகமாகக் கொண்டு வந்துள்ளார். தமிழின் பயண நூல்களுக்கு அவரே முன்னாடியெனச் சொன்னார்.

எழுத்தாளர் சல்மாதான் கிருத்திகா எழுதுவதற்கே காரணமாக இருந்துள்ளார். அவர் புத்தகத்தைப் பற்றி குறிப்பிடும்போது, “பெண்களால் மட்டுமே சிலவற்றை எழுத முடியுமென்பதற்கு கிருத்திகாவின் இந்தப் புத்தகமும் சான்று” என்றார். க்ரூஸ் கப்பலின் உணவகங்களைப் பற்றி குறிப்பிட்டுவிட்டு, பசிக்கும் பொழுதெல்லாம் சமைக்க வேண்டிய கஷ்டத்தை அனுபவிக்கும் வேலைக்குப் போகும் பெண்களில் ஒருவரான தனக்கு, அவ்வுணவகங்கள் அக்கஷ்டத்தில் இருந்து மீட்டு முழு நிறைவு தந்ததென அப்பத்தியை முடித்திருந்தார் கிருத்திகா. க்ரூஸில் பயணம் செய்த ஆண்களால் இப்படி எழுதவே முடியாது என்று சொல்லிவிட்டு, தனது பயணத்திட்டத்தில் க்ரூஸைச் சேர்த்துக் கொண்டேன் என்றார் சல்மா.

பொதுவாக பயணம் செய்து செலவழிப்பதைவிட, தங்கம் வாங்கிச் சேமிப்பதைப் பெரிதும் விரும்புவர்கள் தமிழர்கள். அப்படியே பயணம் என்றாலும், வழியில் சாப்பிட விடியற்காலையே எழுந்து சமைத்துக்கொண்டு கோயிலுக்கு எங்கேனும் அதிகபட்சமாகச் செல்வார்கள். சமைப்பதும், குழந்தைகளைக் கிளப்புவதும் யாரெனச் சொல்லித் தெரியவேண்டாம். அங்கும் நெரிசலில் சிக்கி, சின்னாபின்னமாகித்தான் வீடு திரும்புவார்கள். பெரும்பான்மையானவர்களின் பயணங்கள் இப்படித்தான் நிகழ்கின்றன. தெனாலிராமன் வளர்த்த பூனை பாலைப் பார்த்தால் மிரளும் கதையாகவே, பயணங்கள் என்றால் பலருக்கு சுமையாகி விடுகின்றன.

பயணங்கள் எப்படியிருக்க வேண்டும்?

வரலாற்றுப் பார்வை சார்ந்ததாக இருக்கும் எனது பயணங்கள் என்றார் கிருத்திகாவின் புத்தகத்தைப் பற்றிப் பேசிய கிழக்கு பதிப்பக உரிமையாளரான பத்ரி. ஓரிடத்திற்குச் செல்வதாக இருந்தால், அந்த இடத்தின் வரலாற்றுச் சிறப்பை ஒரு வருடமாக ஆய்வு செய்து, பார்க்க வேண்டிய இடங்களைத் தெளிவாக வரையறுத்து, குடும்பத்தில் உள்ளவர்களையும் தயார்படுத்தி, ஒத்த மனநிலை கொண்ட நண்பர்கள் குழுவுடன் செல்வாராம் பத்ரி.

பயணங்கள் ஏன்?

“என் மனைவியை டூர் கூட்டிட்டுப் போயிட்டு வந்தேன். அடிக்கடி சண்டை வரும் எங்களுக்குள், அடுத்த ஒரு வருஷத்துக்கு சண்டையே வரலை. சமைப்பதில் இருந்து நாலு நாள் அவர்களுக்குத் தரும் ஓய்வு, அடுத்த ஒரு வருஷத்துக்கு அவர்களை உற்சாகமாக இருக்க வைக்குது. அதன் பின் ஒவ்வொரு வருடமும் டூர் கிளம்பிடுறோம். இப்ப எங்களுக்குள் சண்டையே இல்லை. இந்த யோசனையை நான் பலரிடம் சொன்னேன். செயல்படுத்தின அனைவருக்கும் இது பலிச்சிருக்கு” என்றார் பத்திரிகையாளரான ஜி.கெளதமன்.

நோ சமையல்

இந்த நாவலின் கதை மாந்தர்களுக்கும் இதுவே நடக்கிறது. எப்பொழுதும் வேலை என ஓடி மன இறுக்கத்தில் உழலுபவர்களை மீட்கிறது க்ரூஸ் பயணம். நடுகடலில் சூர்யோதயம், அஸ்தமனம், 5 நட்சத்திர ஹோட்டலுக்குரிய சொகுசு, அசத்தலான மேடை நிகழ்ச்சிகள் என 4 நாட்களையும் கொண்டாட ஏகப்பட்டது கப்பலில் உள்ளன.

இந்நாவலை எழுதிய கிருத்திகாவிற்கு, ஹ்ரித்திக் ரோஷன் என்றால் ரொம்ப பிடிக்கும் போலும். கடல் நீரில் மிதக்கும் அனுபவத்தை ஹ்ரித்திக் ரோஷனை நேரில் பார்க்கும்பொழுது உண்டாகும் கவர்ச்சியுடன் ஒப்பிடுகிறார். அவரது வாக்கியங்களில் உள்ள எளிமை வார்த்தைகளில் இல்லை. அதாவது பேச்சு வழக்கில், ‘நான் தூங்கப்போறேன்’ என்றில்லாமல், “நான் உறங்கப் போகிறேன்” என்பது போல் எழுதியுள்ளார். சம காலத்து உரைநடையில் இருந்து ரொம்ப பின் தங்கியிருப்பதாகப் படுகிறது.

சாக்லேட் என்பதை சாக்லேட் என்று உபயோகப்படுத்தியது போல், ஐஸ் க்ரீமையும் ஐஸ் க்ரீம் என்றே சொல்லியிருக்கலாம். ‘சிறிது வெண்ணிலா பனிக்கூழ் சுவைத்துப் பார்த்தேன்’ என்பது படிப்பவரைச் சோதிக்கிறது. இதற்கே பிற்சேர்க்கை-4 என ஓர் அட்டவணையையும் கொடுத்துள்ளார்கள். அங்கு ஐஸ்-க்ரீம்க்கு இணையான தமிழ்ச் சொல் பனிக்கூழ் என்றும் உள்ளது. அதுவே போதுமானதாகப்படுகிறது.

ஒரு பயண நூலாக, இந்த புத்தகம் ஒரு முழுமையைத் தருகிறது. ஆனால் நாவலாகப் பார்க்கும்போது சில குறைகள் இருப்பதாகப் படுகிறது. உதாரணத்திற்கு கதாபாத்திரங்கள் அறிமுகமே நாவலின் போக்கில் இல்லாமல், ஒரு பட்டியலாக இணைக்கப்பட்டுள்ளதைக் கூறலாம்.

தமிழ் காமிக்ஸ் உலகம்

‘தமிழ் காமிக்ஸ் உலகம்’ எனும் பதிப்பகத்தின் முதல் புத்தகமாக இந்த நாவல் வெளிவந்துள்ளது. இதில் சுவாரசியமான முரண் என்னவெனில், கப்பலில் திரையிடப்படும் டர்போ (3-டி) படத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது, அது குழந்தைகளுக்கானது என்றும் சிறுபிள்ளைத்தனமானது என்றும் குறிப்பிட்டுள்ளார் கிருத்திகா.

உல்லாசக்கப்பல் பயணம், நாவல் என்றாலும் ஒரு முழுமையான க்ரூஸ் பயணக் கையேடு போலுள்ளது. நாவலின் சிறப்பம்சம் வாக்கிய அமைப்பில் காணப்படும் எளிமை. சிறுவர்களும் எளிதாகப் படிக்கும்வண்ணம் உள்ளது. புத்தகம் முழுவதும் விரவிக் கிடக்கும் வண்ணப்படங்கள் அதற்கு மேலும் துணை புரியும்.

தமிழின் முதல் பயணப் புனைவு என்ற பெருமையை இந்நாவல் பெற்றுள்ளது.

– தினேஷ் ராம்