Shadow

முப்பொழுதும் உன் கற்பனைகள் விமர்சனம்

MUK
முப்பொழுதும் உன் கற்பனைகள் – படத்தின் கதை சுருக்கம் தலைப்பினுள்ளேயே அடங்கி விடுகிறது.திருவலஞ்சுழி என்னும் ஊரில் பிறக்கும் ராம் என்பவன் தன் சிறு வயதிலேயே தந்தையை இழந்து, அவனது அம்மாவின் அரவணைப்பில் வளர்கிறான். சென்னையில் வேலைக் கிடைத்து, மென்பொருள் போட்டிக்காக பெங்களூரு செல்கிறான். அங்கே சாருவை சந்திக்கிறான். தாயின் இறப்பில் மனமுடையும் ராமை தேற்றுகிறாள் சாரு. மெல்ல சாருவின் மீது காதல் வயப்படுகிறான் ராம். சாருவை இருவர் கடத்தி விடுவதாக நினைக்கிறான். அவர்களிடம் இருந்து சாரு தப்பித்து வந்து விட்டதாக கற்பனை செய்து அவளை அவர்கள் கண்ணில் படாமல் காப்பாற்றி வருவதாக நினைத்து வருகிறான். கற்பனையிலேயே தன்னுடன் வாழுவதாக நினைத்துக் கொண்டிருக்கும் திரிபுக்காட்சியில்(Delusion) இருந்து ராமை மீட்டாளா என்பதற்கு பதிலுடன் படம் நிறைவுறுகிறது.

ராம் ஆக அதர்வா நடித்துள்ளார். புன்னகைக்கிறார்; ஷவருக்கு அடியில் இருக்கும் பொழுது கண்களை அகல திறந்து பார்க்கிறார்; தலைகீழாக தலையில் நின்று சண்டை இடுகிறார்; வாயிற்குள் எதையோ அதக்கிக் கொண்டது போல் வசனத்தை மென்று விழுங்குகிறார்.

பானா காத்தாடியில் அறிமுகமானதை விட அழகாய் தெரிகிறார். அப்படியே நடித்தும் இருக்கலாம். காதல் வசனங்களில் ததும்பும் அளவு பாவனைகளிலோ, உடல் மொழியிலோ பிரதிபலிக்கவில்லை. அதர்வாவின் தாய் ஆக அனுபமா குமார் நடித்துள்ளார். வட்டிக்குப் பணம் விட்டு சம்பாதித்து அதர்வாவை வளர்க்கிறார். அப்படி வட்டி வசூலிக்கும் பொழுது சிறுவனான ராம்மை முதுகிலேயே கட்டிக் கொண்டிருக்கிறார். அதனால் ஊரில் ராமை ‘ஒட்டுண்ணி’ என்றழைக்கின்றனர். ‘சார்ந்து வாழ்தல்’ என்ற பொருள் பட வசனம் அமைத்திருப்பார் போலும். தமிழ் சினிமாவின் 85% முதுகெலும்பே தாய்-மகன் மிகையுணர்ச்சி தான். அந்த உறவை ஒட்டுண்ணி என்ற பெயரில் சுலபமாய் கொச்சைப்படுத்தி விடுகிறார் இயக்குனர். ஆனால் படத்தின் மிக முக்கியமான கதாபாத்திரமாக உள்ளார் அனுபமா. கைம்பெண்ணான தனது அழகு மற்றவர்களை கவரக் கூடாதென மொட்டை அடித்துக் கொண்டு.. சமூகத்தில் இருந்து பாதுகாத்து கொள்ள ஒரு முரட்டு சுபாவத்தை அணிந்துக் கொள்கிறார்.வேட்டையைத் தொடர்ந்து இந்த வருடம் வந்திருக்கும் அமலா பாலின் இரண்டாவது படம். ஒரு பெரிய பணக்காரரின் செல்ல மகள் சாருலதா என்ற பாத்திரத்தில் நடித்துள்ளார். நாயகன் மேடையில் பாடும் பாடலைக் கேட்டு உணர்ச்சிவசப்படும் பாரம்பரிய நாயகி ஆக உள்ளார். நண்பன் என நாயகன் மேல் பரிதாபப்படும் பொழுது என்று வாய்ப்பு கிடைக்கும் பொழுது எங்கேனும் நடித்திருக்கலாம். அதே போல் படத்தில் சந்தானமும் நகைச்சுவைக்கு சரியாக உபயோகிக்கப் படவில்லை. கோவில் அர்ச்சகராக வரும் நாசரை கதை சொல்வதற்காக என்றே வைத்துள்ளனர். மனநல மருத்துவர் ருத்ரன் ஆக ஜெயப்ரகாஷ் வருகிறார்.

ஏழாம் அறிவு படத்து டோங்-லீயைப் பற்றி உலகம் எல்லாம் தெரிந்திருக்கும் போல. அதாவது இந்தியாவிற்குள் வந்து கொலை செய்தால் யாரும் கண்டுக் கொள்ள மாட்டார்கள் என்ற டோங்-லீ யாருக்காவது சொல்லி இருப்பார் போல. படத்தில் வரும் அமெரிக்கர்கள் இருவர் சர்வ சாதாரணமாக சென்னை சாலைகளில் பெரிய ‘ட்ரக்’கை ஓட்டிக் கொண்டு காரில் செல்லும் ஒருவரைக் கொல்ல முனைகின்றனர். அவர்களுக்கு ட்ரக் எப்படிக் கிடைத்தது? சுமார் இரண்டு வருடங்கள் மட்டும் ஐ.டி.யில் பணிப் புரியும் அதர்வாவிற்கு ‘ஃபோர்ட் ஃபியஸ்டா’ கார் வாங்கும் அளவு பணம் எங்கிருந்து கிடைக்கிறது? சாலையில் நசுங்கிப் போயிருக்கும் காரைப் பற்றி எல்லாம் சென்னை காவல்துறையினர் கண்டுக் கொள்ள மாட்டார்களா!? அதர்வாவிற்கு மீண்டும் பெங்களூருவில் வெண்ணிற ‘ஹோன்டா சி.ஆர்.வி.’ கார் எப்படிக் கிடைக்கிறது? என்று பலவற்றிற்கு படங்களில் பதிலில்லை. படத்தின் இறுதிக் காட்சிகளில் மீண்டும் அமெரிக்கர்கள் நாயகியைக் கடத்திக் கொண்டு ஒரு பாழடைந்த தொழிற்சாலைக்கு செல்கின்றனர். அவ்விரு அமெரிக்கர்களை ஓரினச் சேர்க்கையாளர்களாக சித்தரிக்கின்றனர். ஏனோ தமிழ்ப் படங்களில் ஓரினச் சேர்க்கையாளர்கள் என்றாலே கெட்டவர்களாகவும், வன்முறையில் விருப்பமுள்ளவர்களாகவும் சித்தரிக்கப்படுகின்றனர். கர்நாடகத்து மந்திரிகளின் மகன்களின் கொலை வழக்கை, அவர்கள் கெட்டவர்கள் என்று கூறி காவல்துறை ஆணையாளர் வழக்கை சுலபமாக மூடுகிறார். அந்தப் பெரிய இடத்து மகன் என்னடாவென்றால் முட்டுச் சந்தில் ஓடி நாயகனிடம் சிக்குகிறார்.

முப்பொழுது என்பது காலை, பகல் (நண்பகல், எற்பாடு), மாலை என மூன்று வேளைகளைக் குறிக்கும். ஆனால் அதர்வாவிற்கு கனவிலும் அமலா பால் நினைப்பு தான். ஆனால் அவர் எப்பொழுது நெகிழ்ந்தாலும் உடனே அமலா பாலுடன் வெளிநாடுகளிற்கு சென்று விடுகிறார் பாட்டுப் பாடி ஆடுவதற்கு. அடிக்கடி செல்வதால் கொஞ்சம் சலிப்பும் ஏற்படுகிறது. இப்படத்தோடு இயக்குவதை விட்டு விட்டு எல்ரெட் குமார் மீண்டும் தயாரிக்க மட்டுமே செய்வார் என்பது ஆறுதலான சங்கதி. படத்தில் அதிக முக்கியத்துவம் இல்லாத கண் தெரியாத பெண் பாத்திரம் ஒன்று வருகிறது.  அவருக்கான உலகில் அநாமதேய தொலைபேசி அழைப்புகள் ஏற்படுத்தும் மாற்றத்தினைப் பட்டும் படாமலும் தொட்டு செல்கின்றனர். அந்தப் பாத்திரம் சுமக்கும் ஏக்கமும், துக்கமும் படத்தில் சரியாக பதியப்படவில்லை. எனினும் கவனித்தீர்கள் எனில் அப்பாத்திரத்திம் ஏற்படுத்தும் தாக்கத்தினை உணர வாய்ப்புள்ளது.

Leave a Reply