முற்பகல் :
“வணக்கம் சார் “.
கேட்டும் கேட்காதது போல் ஆவணங்களை ஆவலுடன் படிப்பது போல் பாவலா செய்து கொண்டிருந்தான் ராமசாமி ….
“வணக்கம் சார் ” என்று இம்முறை உரத்த குரலில் முயற்சி செய்தான் குமார் …
“வணகொம் வணக்கொம் …என்ன ஆச்சு நான் சொன்னது “
“அது வந்துங்க….. இப்போ கொஞ்சம் பணம் மொட;வேல ஆனதும் எப்பிடியாவது பொரட்டி தாரேங்க…”
“அப்பிடியா …..இப்போ கொஞ்சம் வேல இருக்கு .மத்தியானமா வா பாக்கலாம் ….”
“ஐயா நேத்து காலைல வரச் சொல்லியிருந்தீங்க அதான் ……..”
“ஓஹோ ;சரி இப்போ சொல்றேன் ;மத்தியானமா வா “
“இல்லைங்க அது வந்து ……மத்தியானம் கொஞ்சம் வேற வேல இருக்கு ……”
“அது சரி ஒங்களுக்கு வேல நெறைய இருக்கும் ;நான்தான் இங்க வெட்டியா ஒக்காந்திருக்கேன் “
“ஐயோ அப்படி சொல்லலீங்க “
“என்ன அப்பிடி சொல்லல இப்பிடி சொல்லல ;ஒரு அம்பதாயிரம் பொரட்ட முடியலன்னு சொல்ற. ; ஒம் பைல நகத்த நான் என்ன பாடு படணும் தெரியுமா? ;கம்பாசநேட் அப்பாயின்மென்ட்னா சும்மாவா? ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பாங்க ;ஒவ்வொருத்தனுக்கும் நான்ல பதில் சொல்லணும் …பணம் குடுத்தா வேல நடக்கும் .அவ்ளோதான் சொல்லிட்டேன் …ஒன் நல்லதுக்கு சொல்றேன் …வேல கெடச்சா மாசம் முப்பதாயிரம் வாங்க போற ..அப்பொறம் ஒன் இஸ்ட்டம்…”
“சரிங்கய்யா ;நாளைக்கு எப்பிடியாவது பணத்த குடுத்திடறேன் “
“அப்பிடி வா வழிக்கு ; நாளைக்கே எல்லாம் ஓகே வாயிரும் போயிட்டு வா “
பிற்பகல் :
“என்னடா சுரேசு அந்த காலேஜ்ல எம்.பி. ஏ சீட்டுக்கு அப்பளை பண்ணி இருந்தியே என்ன ஆச்சு ?”
“அதுப்பா ரிட்டன் கிளியர் பண்ணிட்டேன் ;ஆனா குரூப் டிஸ்கஷன்ல போயிடுச்சு “
“இப்படியே ஏதாது ஒரு காரணத்த பாக்கெட்டுல வச்சிக்கிட்டே திரி ; அது சரி …சட்டியில இருந்தாத்தான அகப்பையில வரும் ;இப்போ என்ன பண்ண போற ?”
“அதுப்பா…..அதே காலேஜ்ல பேமென்ட் கோட்டால சீட்டு கெடைக்கும்பா …. ..ஆனா கொஞ்சம் செலவு ஆகும் “
“அது தெரிஞ்ச கத தான …நீயெல்லாம் மெரிட்ல சீட்டு வாங்கிட்டா ,அப்பறோம் மழ எப்பிடி பெய்யும் ?சரி எவ்ளோ பணம் அழனும்? அத மட்டும் சொல்லு “
” ஒரு லட்சம்பா “
“நாளைக்கு தாரேன்…இனிமேலாச்சும் ஒழுங்கா படிக்குற வழியப் பாரு “
“சரிப்பா “
– சுபலலிதா