Search

முற்பிறப்பு சம்பவங்கள்

வர்ணசிறி அதிகாரி என்பவர் 9.11.1957இல் “கிறிகற்ற” என்ற கிராமத்தில் பிறந்தான். இவனுக்கு நாலு வயது ஆகும் பொழுது தான்,  கடந்த பிறப்பில் “கிம்புல்கொட” என்ற கிராமத்தில் மஹிபால என்பவருக்கு மகனாயிருந்ததாகவும், அப்பிறப்பில் தனது பெயர் “ஆனந்தா மஹிபால” என்றும் கூறினான். தனது முற்பிறப்பில் நடைபெற்ற சில நகழ்ச்சிகளும், உற்றார், உறவினர், உடைமைகள் ஆகியவற்றின் விபரங்களும் அவனால் கூறப்பட்டு பிறான்சிஸ் ஸ்ரோறி என்பவரால் நுணுக்கமாக விசாரணை செய்யப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டது. ஆனந்தா மஹிபால 26.10.1926ல் பிறந்து 26.10.1956இல் சடுதியாக இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. பதினைந்து நாட்களுக்குப் பின்னர் “கிறிகற்ற” என்ற கிராமத்தில் வர்ணசிறி பிறந்ததாகக் கூறப்பட்டது.

கண்டியில் இருந்து இருபது மைல்களுக்கு அப்பால் உள்ள “உடுபோகவ” என்ற கிராமத்தில் 26.4.1959இல் பிறந்த பெண்குழந்தை “டிஸ்னாசமரசிங்க” என்பவள் ஒன்றரை வயதாகியதும் முற்பிறப்பைப் பற்றிக் கூற ஆரம்பித்தாள். மூன்று வயதைத் தாண்டியவுடன் முற்பிற்பு விபரங்களைத் துல்லியமாகத் தெரிவித்தாள். “வெற்றாவ” என்னும் கிராமத்தில் 63வயது வரையிலும் வாழ்ந்து 15.01.1958ல் இறந்து போன “பபானோனா” என்னும் வயோதிக மாது பதினைந்து மாதங்களின் பின் “உடுபோகவ” என்னும் கிராமத்தில் பிறந்த “டிஸ்னாசமரசிங்க” என்பது தக்க ஆய்வுகளின் பின் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

முற்பிறப்பு ஞாபகங்கள் உள்ளவர்கள் இலங்கை, இந்தியா, பர்மா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் நிறைய இருப்பது தெரிய வந்திருக்கிறது. ஆசைகள், பாசங்கள் காரணமாகவும் தனி ஒதுக்க (Insular) சிந்தனைகள் காரணமாகவும் மறுபிறப்புகள், முற்பிறப்புக்குத் தொடர்புள்ள சூழலிலேயே, அதே இனம், அதே மொழி பேசுபவர்கள் மத்தியிலும் அண்மித்த கிராமங்களிலும் பெரும்பாலும் நிகழ்வதாகத் தெரிகிறது. அதே நேரம் தூர தேசங்களில் போய் பிறப்பவர்களும் உண்டு. 

அம்பலாங்கொடையில் பிறந்த ரமணி செனிவரத்னா என்ற சிறுமி தான் முற்பிறப்பில் வட இந்தியாவில் மணிப்பூரில் நாட்டியக்காரியாக இருந்ததாகக் கூறினாள். முற்பிறப்பில் அவள் பெற்ற அனுபவத்தின் தொடர்ச்சியாக நாட்டியக் கலையில், குறிப்பாக இந்திய நாட்டியங்களில் அபூர்வமான தேர்ச்சி பெற்றவளாகக் காணப்பட்டாள். நாட்டியத்தைத் தொழிலாகக் கொண்டவர்கள் பார்த்து அதிசயிக்குமளவுக்கு அவள் நாட்டியக் கலையில் திறமைப் பெற்றவளாகத் திகழ்ந்தாள்.

“இங்கு எப்படி வந்து பிறந்தாய்?”என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, அவள் “எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு ஆறு இருந்தது. அதில் எனது அண்ணன் குளித்துக் கொண்டிருக்கும் பொழுது நான் ஒரு உயரமான பாறையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென பாறையில் இருந்து தவறி கீழ் ஒரு கற்குவியல் மீது விழுந்து படுகாயமுற்றேன். பின்னர் வைத்தியசாலைக்கு என்னை எடுத்துச் சென்றது தெரியும். அதன் பின்னர் இங்கு வந்துவிட்டேன்” என்றாள்.

முற்பிறப்பில் இங்கிலாந்து வாசியாக இருந்தவர் இலங்கையில் வந்து பிறந்த நிகழ்ச்சியும் தெரியவந்துள்ளது. கோட்டை (Kotte) யில் பிறந்த “ரஞ்சித் மாலகந்த” என்ற சிறுவன், மூன்றரை வயதை அடைந்தபொழுது தனது முற்பிறப்பு விபரங்களைக் கூற முற்பட்டான். இங்கிலாந்தில் வசித்தவர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்க வேண்டிய அந்நாட்டு சீதோஷ்ண நிலை, பழக்க வழக்கங்கள் யாவற்றையும் மூன்றரை வயது சிறுவன் துல்லியமாக விவரித்தான். மேலும் கிறிஸ்தவ மரபில் நாட்ட முள்ளவனாகவும் ஆங்கிலேயர்களின் பழக்க வழக்கங்களில் ஈடுபாடு கொண்டவனாகவும் ஆங்கிலேய உணவு வகைகளை விரும்புவனாகவும் அவன் காணப்பட்டான். இலங்கை வானொலியில் ஆங்கில ஒலிபரப்பில் பெண் அறிவிப்பாளரால் செய்திகள் வாசிக்கப்பட்டதைக் கேட்டுக் கொண்டிருந்து விட்டு “இப்படித்தான் எனது மம்மி பேசுவாள்”என்று கூறினான்.

சிலர் பிறவிக்கூறான உருச்சிதைவுகளுடனும் அடையாளங்களுடனும் பிறக்கிறார்கள். இதற்கு விஞ்ஞான ரீதியான விளக்கங்கள் காண இயலாதிருக்கும். ஆனால் இதற்கான காரணங்கள் முற்பிறப்பின் சிந்தனையும் உடலும் சார்ந்த (Psychosomatic Reaction) விளைவுகள் எனத் தெரிய வருகின்றது. தாய்லாந்தில், “பிறாசொம்” என்ற புத்தகுரு தனது முற்பிறப்பின் நிகழ்வுகளைத் தெரிவித்தார். இவர் 3.11.1939ல் “பான்சாய்” என்ற கிராமத்தில் பிறந்தவர். அவருக்கு மூன்று வயது நிரம்பியவுடன் முற்பிறப்பு விவரங்களைக் கூற ஆரம்பித்தார். “பாக்லாட்” என்ற கிராமத்தில் “நாசொய்” என்ற பெயரில் தான் முற்பிறப்பில் இருந்ததாகவும், தனது 45வது வயதில் ஒரு பெண்ணைப் பலவந்தப்படுத்திய பொழுது, அவள் கத்தியால் தனது நெஞ்சில் குத்தியதன் விளைவாகத் தான் இறந்து விட்டதாகவும் கூறினார். இவர் பிறந்த பொழுது இவருடைய நெஞ்சில் கத்திக்குத்தினால் ஏற்பட்டது போன்ற ஒரு வடு காணப்பட்டது. பிறாசொம்மின் தாயார் இவர் பிறந்தபொழுது இவருடைய நெஞ்சில் வெட்டுக்காயம் போன்ற ஆறாத புண் ஒன்று காணப்பட்டதாகவும் அதற்கு சிகிச்சையளிக்கப்பட்டதாகவும் கூறினார். இந்த விவரங்கள் எல்லாம் ஒப்பு நோக்கப்பட்டு சரியாக  இருக்கக் காணப்பட்டன.

முற்பிறப்பில் நமது மனதை பலமாக அழுத்தி ஆக்கிரமித்து இச்சையை அடைவதற்காகவென்றே சில சமயங்களில் நாம் மறுபிறப்பு எடுப்பதுண்டு. பர்மாவிலும் தாய்லாந்திலும் ஆய்வு செய்யப்பட்ட முற்பிறப்பு சம்பவங்கள் பல இதங்கு ஆதாரமாக எடுத்துக் கூறக் கூடியனவகையில் நிகழ்ந்துள்ளன.

முற்பிறப்பில் ஆணாக அல்லது பெண்ணாக இருந்த ஒருவர் அடுத்த பிறப்பில் மாறி பிறக்க வாய்ப்பிருக்கிறதா?

அடுத்துப் பார்க்கலாம்.
Leave a Reply