
2022 இல் நடக்கும் போரில், இந்தியாவிடம் சீனா தோற்கின்றது. அதற்குப் பழிவாங்கும் விதமாக, 2025 இல் சீனா எத்தகைய நடவடிக்கையை மேற்கொள்கிறது என்பதுதான் படத்தின் கதை.
மிகக் குறைவான கதாபாத்திரங்களுடன் மிகக் குறைவான லோக்கேஷன்களில் எடுக்கப்பட்டுள்ள இயக்குநர் சுகன் கார்த்தியின் கன்னி முயற்சியே இப்படம். ஆனால், பிரம்மாண்டமான கதை. சி.ஜி. (கணினி வரையியல்) தொழில்நுட்பத்தின் மூலம் இயக்குநர் முடிந்தளவு கதையின் பிரம்மாண்டத்தைப் பார்வையாளர்களுக்குக் கடத்த முனைகிறார்.
படத்தின் மொத்த சுமையும் மேஜர் சரவணன் மீது சுமத்தப்பட்டுள்ளது. பாலை படத்து நாயகன் சுனில் குமார் மேஜர் சரவணனாக நடித்துள்ளார். தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும், காதல் மனைவியை இடையிடையே ஏக்கத்துடன் நினைவுகூர வேண்டும், சீன இராணுவத்தின் சித்திரவதைகளைத் தாக்குபிடிக்க வேண்டும், இறுதியில் நாட்டையும் காப்பாற்ற வேண்டும். எல்லாம் செய்கிறார். சீனரிடம் வீரமும் பெருமையும் பேசும் பொழுது ஈர்க்காதவர், க்ளைமேக்ஸ் காட்சியில் ஈர்க்கிறார்.
மேஜரின் மனைவி மதிவதினியாக அகிலா கிஷோர். மேஜரின் குடும்பம் பற்றிய காட்சிகள் வரும் பொழுதெல்லாம் ஓர் அந்நியத்தன்மை புகுந்து கொள்கிறது. நாயகனுக்கு தமிழ் முகம். அவரது பெற்றோர்களையோ, உறவினர்களையோ, நாயகனுடன் பொருத்திப் பார்க்க முடியாதபடி அந்நியமாக உள்ளார்கள்.
வில்சன் எனும் சீனரே படத்தின் வில்லன். உலகின் பழைமையான மொழி என்பதால் தமிழை எழுதப் படிக்கத் தெரிந்து வைத்திருக்கிறார். சில கோணங்களிலும், உச்சரிப்பு தொனியிலும் ‘பட்டணத்தில் பூதம்’ ஜாவர் சீதாராமனை ஞாபகப்படுத்துகிறார். அவரது தலை திரையில் தெரியும் ஒவ்வொரு முறையும் பில்டப் மியூசிக்கைத் தீட்டியுள்ளார் இசையமைப்பாளர் வேத்சங்கர். அதனால் ஒரு கட்டத்தில் அவரைப் பார்த்ததுமே பார்வையாளர்கள் சிரிக்கத் தொடங்கி விடுகின்றனர்.
படத்தின் நீளம் இரண்டு மணி நேரத்துக்கும் பதினைந்து நிமிடங்கள் குறைவே! ஆனாலும் நீண்ட நேரமாகப் பார்த்துக் கொண்டிருக்கும் அனுபவத்தைத் தருகிறது. வசனங்கள் அதன் பங்கை சரியாகச் செய்யாததின் குறைபாடு அது. இரண்டு கதாபாத்திரங்களுக்கிடையே நடக்கும உரையாடல்களே படத்தில் பிரதானம். மேலும், காட்சிகளில் தீவிரம் இல்லாமல் மிகச் சாதாரணமாக உள்ளது.
உதாரணத்திற்கு, ‘உண்மைய சொல்றியா இல்ல’ என சீன இராணுவ அதிகாரி, மேஜர் சரவணின் மனைவியுடைய புகைப்படத்திற்கு மொபைலில் முத்தமிடுறார். பல்லைக் கடிக்கும் மேஜர், “என்ன ப்ளாக்மெயில் பண்றியா?” எனக் கேட்டு, எங்களுக்கு குடும்பத்தை விட நாடு தான் முக்கியம் என்கிறார். சித்திரவதை செய்யும் சீனருக்கோ நாயகனின் நாட்டுப்பற்று சலிப்பையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தி விடுகிறது.
இப்படியான கடும் சித்திரவதைகள் செய்து கடுப்பாகும் சீனர், இறுதியில் மேஜர் சரவணனிடம் சீனாவின் ரகசிய திட்டத்தைப் போட்டு உடைத்து விடுகிறார். ஆஹா.. வாழ்க்கையின் எண்ணற்ற நகைமுரண்களில் இதுவும் ஒன்று. இந்தியாவைப் பழி வாங்க சீனா மேற்கொள்ளும் யுக்தியை நாயகர் எப்படித் தடுக்கிறான் என்பதுடன் படம் முடிகிறது.