குறிஞ்சி, மருதம், நெய்தல் என மூன்று திணைகளில் வாழும் மூன்று இணைகளின் காதல் பற்றிய படம்.
கண்ணுக்கு குளிர்ச்சியாய் மலையில் தொடங்குகிறது படம். வாய் ஓயாமல் பேசும் வருணாக விமல். ஏதாச்சும் பேசிய வண்ணமே உள்ளார். ‘உங்க வலதுக் கையைப் பிடிச்சுக்கவா?” என விமல் கேட்பதற்கு மறுக்கிறார் நாயகி. உடனே விமல், ‘அப்ப என் கையையாவது நீங்க பிடிச்சுக்குங்க’ என்கிறார். உடனே வேறொரு காட்சி. வேறென்னவோ பேசுகிறார். நகைச்சுவையாகப் பேசுகிறேன் என்று அவரே சொல்லிக் கொள்கிறார். அறிமுக நடிகையான லாசினி அஞ்சனாவாக நடித்துள்ளார். நிச்சயமாகிவிட்ட அஞ்சனாவை துரத்தித் துரத்தி, மன்னிக்க, பேசிப் பேசி காதலிக்கிறார். லாசினிக்கு நிச்சயிக்கப்பட்டவருடன் பிணக்கு ஏற்பட்டு காதல் விலக, விமலின் காதலை ஏற்கிறார். லாசினிக்கு நடிக்க அதிகம் வாய்ப்புக் கிடைக்கவில்லை. கிடைத்ததிலும் சோபிக்கவில்லை. விமல் திடீரென லாசினியுடன் பேசுவதை தவிர்க்கிறார்.
ஏன்?
மலையில் இருந்து கடல் சார்ந்த இடத்திற்கு படம் தாவுகிறது. சிறை தண்டனை பெற்றதால் புறக்கணிக்கப்படுபவர்களுக்கு ஆதரவாகவும், அவர்கள் குடும்பத்தினரிடம் பேசி அவர்களுக்கிடையே உறவினை சுமுகமாக்கவும் ‘புன்னகை’ என்ற அமைப்பைத் தொடங்குகிறார் குணசேகர். குணசேகராக சேரன் நடித்துள்ளார். அதிசயதக்க வகையில் அனைத்துக் காட்சிகளிலுமே சிரித்த முகமாய் தோன்றியுள்ளார். வயதாகி விட்டதென முகத்தின் சுருக்கங்கள் காட்டிக் கொடுக்கிறது. தனது தம்பியை மீட்கும் குணசேகரை காதலிக்கிறார் மல்லிகா. தாமிரபரணியில் அறிமுகமான பானு என்கிற முக்தா பானு மல்லிகாவாக நடித்துள்ளார். படத்தில் கொஞ்சமேனும் ஒன்ற முடிவது இவர் வரும் காட்சிகளில் மட்டுமே. ஒரு சேவை நிறுவனத்தை நிர்வகிக்க திருமணம் தடையாக இருக்குமென குணசேகர் பட்டம் வாங்கிய ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைகழகத்தில் சொல்லிக் கொடுத்திருப்பார்களோ!! அல்லது தியாகம் சேவை என நாயக வழிபாடுக்கு உதவுமென இயக்குநர் நினைத்திருப்பாரோ என்னவோ? குணசேகர் – மல்லிகா காதலுக்கும் விமலுக்கும் என்ன சம்பந்தம்? அதை புரிந்துக் கொண்ட ஒரே ஆள் விமலின் தோழி திவ்யா தானாம்.
எப்படி?
நிலமும் நிலம் சார்ந்த இடத்திலும் வாழ்கிறார்கள் திவ்யாவும் ஹாரிஸும். திவ்யா நீச்சல் வீராங்கனை. ஹாரிஸ் அவளது கோச். திவ்யாவாக அறிமுகமாகியுள்ளார் சர்வீன் சாவ்லா. ஹாரிஸாக அர்ஜூன். படத்தில் ஒருவரை ஒருவர் காதலிக்கும் இணை இவர்கள் மட்டுமே. படத்தின் காவியத்தன்மை உறுதிபட மூன்று பேரில்(!?) அல்லது மூன்று இணையில் யாரேனும் ஒருவராவது இறக்க வேண்டுமல்லவா?
யார்?
பார்வையாளர்களின் பொறுமையை வசந்த் ரொம்ப தான் சோதித்துப் பார்க்கிறார். வழக்கமான வசந்த் பாணி படம் என்ற போதும், படத்துடன் கிஞ்சித்தும் ஒட்டவே முடியவில்லை. இழுவையாக நீளும் கோர்வையற்ற காட்சிகள், ரொம்பவே இம்சிக்கும் இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் யுவனின் இதமான பாடல்கள் என தற்போதுள்ள ரசனை மாற்றத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை வசந்த். சத்யன், ரவி ராகவேந்திரா, ஜான் விஜய், நரேன் என பலர் நடித்துள்ளனர். ஆனால் எவரும் சரியாக உபயோகிக்கப்படவில்லை. அப்புக்குட்டி மட்டும் லேசாக மனதில் பதிகிறார். படத்தின் கதை சொல்லி விமல். தன்னை பாதித்ததவிஷயத்தை நாவலாக எழுதியுள்ளேன் என பிரஸ் மீட்டில் நாவலின் கதையை விலாவரியாகச் சொல்கிறார். எட்டு கோடி மக்கள் வசிக்கும் நாட்டில்.. வருணின் நாவல் மூவாயிரம் பிரதிகளாவது விற்றுப் போக கடவ!!
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி ஒழுகப் படும்.