Shadow

மோடி மஸ்தான் இல்லை

இம்மாதம் 13 மற்றும் 17-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அமோக வெற்றி பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக திரு. நரேந்திர மோடி முதல்வராகிறார். மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 115 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் வெறும் 61 இடங்களையே பெற்று மூன்றில் ஒரு பங்கு இடங்களை மட்டுமே பிடித்துள்ளது. ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட காந்திகளின் தொடர் பிரச்சாரம் காந்தி பிறந்த மண்ணில் எடுபடாமல் போய் விட்டது. மோடியை வீழ்த்தியே தீருவேன் என்று கங்கணம் கட்டிய மாநில காங்கிரஸ் தலைவரான அர்ஜுன் மோத்வாடியா போர்பந்தர் தொகுதியில்  17, 146 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். அதே போல் குஜராத் எதிர்கட்சி தலைவர் ஷக்தி சின்ஹ் கோகில் தோல்வி அடைந்தவர்களில் முக்கியமானவர். ‘ஒருத்தனுக்கு நிக்கவே முடியலையாம்; ஒன்பது பொண்டாட்டி கேட்டுச்சாம்’ என வடிவேலுவைப் பார்த்து சந்திரமுகி படத்தில் ரஜினி சொல்வது போல அர்ஜூன் மோத்வாடியா மற்றும் ஷக்தி சின்ஹ் கோகில் இருவருக்குமே முதல்வர் பதவி மேல் ஒரு கண் வேற இருந்தது.

காங்கிரஸ் கட்சி சரியான மாநில தலைவர் இல்லை, என்று ஏதேதோ காரணங்களை சப்பைக்கட்டு கட்டுகின்றனர். ஆனால் மூன்றாம் முறையாக தொடர்ந்து மோடி எப்படி முதல்வரானார் என்ற பிரமிப்பு இந்தியா முழுவதும் உள்ளது. ஒரு மாநிலத்தில் அதுவும் தமிழகம் போன்ற மாநிலங்களில் ஒருமுறை முதல்வராக இருப்பவர் அடுத்தமுறை ஆட்சி அமைக்காமல் செல்வது தொடர்ந்து நடந்து வருகிறது. எம்.ஜி.ஆர்.க்குப் பின் இங்கு யாரும் தொடர்ந்து இரண்டு முறை முதல்வராக பதவிக்கு வந்ததில்லை. அதற்கான காரணம் என்ன என்பது மோடியின் வெற்றிக்கான காரணம் என்ன என்பதற்கான விடையில் இருக்கிறது.

மோடியின் செல்வாக்கு நடுத்தர வர்க்கம் மற்றும் நகர்ப்புற மக்களிடம் அதிகரித்துள்ளது. கிராமப்புறங்களில் சற்று பின் தங்கி உள்ளது என்பது உண்மைதான் என்றால் பாதிப்பு என்பது கிராமப்புறத்தில் ஏற்படாததால் எதிர்ப்பு இல்லை என்று சொல்லலாம். தொழில் துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி, நிர்வாக சீர்திருத்தம், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அரசு இயந்திரத்தை இயக்குதல், தடையற்ற மின்சாரம், இலவசம் என்ற பெயரில் காசை கரியாக்காமல் கற்க வேண்டிய பாடம் எவ்வளவோ உள்ளது. அரசுத்துறை என்பது ஒரு செவிட்டு மனப்பான்மையுடன் கூடிய ஊழலில் புதைந்துள்ள நிலையிலிருந்து மீண்டு வர, மோடி எடுத்துள்ள பல முயற்சிகளை நாம் பாராட்டியே ஆக வேண்டும். குடும்ப அரசியல், ஊழல், வாரிசு அரசியல், கட்சியினர் நிர்வாகத்தில்ஆதிக்கம் செலுத்துதல் போன்றவை ஒழிய வேண்டும். Anonymity in Civil service என்பார்களே அதுபோன்ற சார்பற்ற நிர்வாகிகள் என்பதெல்லாம் இங்கு கானல் நீராகவே உள்ளது.

தி.மு.க. செய்யும் தவறுகளில் முக்கியமானது என்னவெனில் நிர்வாக சீர்கேடு ஏற்பட்டாலும் பரவாயில்லை.. அதை சரி செய்ய திராவிடன், தமிழன், சூத்திரன் என்று கூறி தான் செய்த தவறுகளை சரி செய்து கொள்ளலாம் என்ற மனநிலையில் இருப்பது. மக்களிடம் இருக்கும் Identity politics என்னும் வளையில் தி.மு.க. சிக்குவதால் தொடர்ந்து இரண்டாவது முறையாக அக்கட்சி வெற்றி பெற முடியவில்லை. அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை ஒரு சில மந்திரிகளை மாற்றுவது, இலாகாக்களைப் பறிப்பது, அதிகாரிகளை மாற்றுவது  போன்றவையே சீர்திருத்தம் என கருதுகிறது.  அதனால் அனைத்தும் சரியாகி விட்டது என்றில்லாமல் இதற்கு பின்புறமுள்ள அரசியலும், அதிகாரிகளை மாற்ற சிபாரிசு செய்பவர்களின் பின்னணியும் ஊழலை முன்னிறுத்தி தான் என்பது தெரிகிறது. ஒட்டுமொத்த நிர்வாக அமைப்பை மாற்ற வேண்டியது இன்றைய அவசர தேவையாக இருக்கிறது.


மோடியின் மீது இந்து மத வெறியன், முஸ்லீம்களுக்கு எதிரானவள் என்று ஏதேதோ குற்றச்சாட்டுகள் கூறினர். போலி என்கவுன்ட்டர் என்னும் ஒரு பூதம் வேறு கட்டவிழ்த்து விடப்பட்டது. ஆனால் இவற்றை மக்கள் புறம் தள்ள காரணம்.. சிறந்த நிர்வாகம், தடையற்ற மின்சாரம், வேலை வாய்ப்பு, சிறந்த அரசு இயந்திரம், வெளிப்படைதன்மை இவையே காரணம்.

Ideology என்கிற கொள்கை, தத்துவம் இவற்றையெல்லாம் சீர்தூக்கி பார்க்க மக்கள் தயாராக இல்லை. ‘எனக்கு தேவை சிறந்த நிர்வாகமேயன்றி.. நீ இந்துவா, முஸ்லீமா, சூத்திரனா, ஆரியனா என்பது எனக்கு முக்கியமில்லை’ என்பதே இன்றைய இந்திய ஆட்சியாளர்களிடம் மக்கள் எதிர்பார்ப்பது. இதை புரிந்து கொள்பவர்கள் அடுத்து பயணிப்பது மோடியின் பாதையாகத்தான் இருக்கும். அதுவரை மோடியைத் தூற்றுபவர்களின் இந்த உண்மைகளை மறக்கிறார்கள். அல்லது மறுக்கிறார்கள் என்பதே நிதர்சனம்.

இப்போது நம் நாட்டிற்கு தேவை, மத சார்பற்ற நிலையோ சார்புள்ள நிலையோ அல்ல. மதம் அவரவர் தனிப்பட்ட உரிமையாக வீட்டில் இருக்கட்டும். அதை மேடையில் பேச வேண்டிய அவசியம் எதுவுமில்லை. நிர்வாகம் சிறந்ததாக, ஊழலற்றதாக, சேவை மனப்பான்மை கூடியதாக மாற்ற அடியெடுத்து வையுங்கள் என்பதே ஒவ்வொரு இந்தியனின் குரலாக ஆட்சியாளர்களை நோக்கி ஒலிக்கிறது.

– சாமானியன்

Leave a Reply